Saturday, April 13, 2019

கர்ணன் கதை



அன்புள்ள ஜெயமோகன் அண்ணா,

உருகும் மனதுடன் நீர்மல்கும் கண்களுடன் கேட்கப்பட வேண்டியது களம் எழுந்த கர்ணன் கதை என்று சோகத்தின் சுமையை முதலிலேயே ஏற்றி வைத்துவிட்டீர்.  இனி எழும் ஒவ்வொன்றின் அடியிலும் இத்துயர் நின்றிருக்கும்.

பாரத நாயகரில் வேறு எவரையும் விட, இளைய யாதவன் கண்ணனையும் விட இத்தமிழ் நிலத்தில் இதன் பண்பாட்டில், மக்களில், அவர்களின் உளவியலில், அவர்களின் அரசியல் முடிவுகளில், ஊடுருவிக் கலந்து நிற்பவன் கர்ணன், அவன் மீதான நோக்கு.  அவன் இங்கு என்றும் உள்ளவன்.  மீண்டும் மீண்டும் சற்று வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் கூட வேறு பெயர்களில், வேறுவேறு நபர்களில் அவன் கதையைப் பொருத்திக் காண விரும்புகிறார்கள்.  வெப்பமும் நீர்வளக் குறைவும் எப்போதும் அச்சுறுத்தும் வறுமையும் அற்ப புத்தியுடைய செல்வந்தரும் இங்கு கொடுக்கும் குணம் கொண்டவர் என எவரைக்கண்டாலும் அல்லது அவ்வாறு தோற்றம் அமைத்துக் கொள்ளும் எவரையும் கர்ணன் என மிக உயர்த்திக் காணும் தன்மையை மக்களுக்கு அளித்ததோ என்று எண்ணுகிறேன்.  இங்கு உருவாக்கப்படும் வீழ்ந்த வீரர் கதைகள் அனைத்தும் அவனுடையதே.  அவன் ஒரு மாற்றுக்கடவுள்.  அருளாமல் போகும் கடவுளுக்கு மாற்றான அன்னமிடும் கடவுள்.

1.  அவன் சுயநலவாதி அல்ல.
2.  அவன் கொடுப்பவன்.
3.  அவன் வீரன்.
4.  அவன் வஞ்சத்தால் வீழ்த்தப்பட்டவன்.

இந்த நான்கு அடிப்படைகள் வைத்து இங்கு உருவாக்கப்பட்ட நாயகர் எத்தனை பேர்?  பொருந்துகிறது பொருந்தவில்லை என்பதற்கு அப்பாற்பட்டு எங்கெல்லாம் அவனை அமைக்கிறார்கள் என்று வியக்கிறேன்.

துரியோதனன் மீது கோபம் இல்லை அவன் இங்கு ஊழின் பிரதிநிதி.  ஆனால் அவன் முகம் நோக்க விருப்பம் இல்லை.

முழுதும் சிவம் ஆவதற்கு முன்னுள்ள கணத்தில் நெடுமாலாய் கரியனாய் உறுதியாய் விளங்கும் இருட்கனியை தொட்டுப் பார்க்க ஆசை.  அனைத்து சுடலை மங்கலங்களும் அவனுக்கு அமைக.  அந்த மாபெரும் விடுவிப்பவன் அவனுக்கு அருள்க.


அன்புடன்
விக்ரம்
கோவை