Wednesday, April 3, 2019

வெண்முரசில் மார்க்ஸியம்-2அன்புள்ள ஜெயமோகன் சார் ,

கடலூர் சீனு வெண்முரசில்  மார்க்ஸியம்  இருக்கிறதா? இல்லை வருமா ? என்று நான் கேட்ட சந்தேகத்திற்கு பதில்  அளித்திருந்தார். அவர் கூறியபடி நான் அதை வெண்முரசுக்குள் அகவயமாக தேடுகிறேன். ஆனால் எல்லா தத்துவங்களும் வேதங்களும் மெய்யியல்களும் புற உலகை பாதிப்பதினால் எனக்கு எப்போதும் புற உலகே முதன்மை,அதன்  செயல்களின் சாரமே அனைத்து  அக உலகிற்கும் வழிகாட்டும் என நம்புகிறேன். அதற்காய் புற உலகில் மூழ்கி அகதேடல் வேண்டாம் என நான் கூறவில்லை, அப்படி கூறினாலும் அதைவிட நகைச்சுவை வேறு ஒன்றும் இல்லை என்றும் அறிவேன். ஆனால் கடலூர் சீனு அவர்கள் கூறியதை ஏற்று கொள்கிறேன் ஏன் என்றால் எனது மனதிற்கே ஏற்ப வந்தாலும் முதலில் நான் மார்ஸியம் புற உலகில் ஆற்றிய பங்கு என்ன என நான் முதலில் உணரவேண்டும். அரசியல், அதிகாரம் , பொருளாதாரம் , தான் -பிறன் வேறுபாடு முதலியவற்றையும் அதன் தொழிலாழி- முதலாளி, முதல்- லாபம் , உற்பத்தி- உபரி முதலியவற்றை மட்டும் அல்லாமல் அதன் " தத்துவ சாரத்தையும்" அது உலகில் எங்கு, யாரால் ? எப்படி  முதலில் முளை விட்டது ? என்பதையும்  அது எப்படி விஸ்வரூபம் எடுத்து உலகை ஆட்டி படைத்தது என்பதையும் தீர்க்கமாய் அறியாமல் வெண்முரசில் அதை தேடுவது இயல்வதல்ல என புரிந்து கொள்கிறேன். ஒரு தத்துவம் இல்லாமல் அல்லது ஒரு கருத்து இல்லாமல் சிறுகதையே எழுத முடியாது என்னும் போது "டாஸ்கேப்பிடல்" எப்படி ? .எல்லா தத்துவ, மெய்யியல்சாரங்களையும் புரியாமல் தெரியாமல் நடைமுறையில் கடத்தி கடத்தி கொண்டு செல்வது என்னைபோன்ற சாமானியர்கள்தான். மார்சியமும் உலகம் இருக்கும் வரை எங்கோ யாராலோ கடத்தபட்டுகொண்டிருக்கும் என நம்புகிறேன். ஏன் என்றால் அன்றாடபாடு அனைத்தையும் கற்றுகொடுக்கும். உள்ளே இருப்பதும் வெளியே இருப்பதும் நமது வில்பவர் அளவை பொறுத்து  மாறுபடலாம். கடலூர் சீனு அவர்கள் கூறிய உங்களின் " இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் , கோசாம்பி டாங்கே இருவரின் "பண்டைய இந்தியா " நூல்களை வாசிக்கிறேன். கடலூர் சீனு அவர்களுக்கு நன்றி. 

சாந்தகுமார் அவர்கள் " கார்கடலின் தீம்  அல்லது சாரம் " என்ன என கேட்டிருந்தார். எனது புரிதலின் படி .......குருஷேத்ரம் பல்வேறு வேதங்களின் விவாத, யுத்த களம். அரக்க,மலை,  நாக, சத்ரிய, நாராயண, இந்திர, அக்னி, சைவ இன்னும் என்னென்ன அப்போதைய பாரத்தில் இருந்ததோ,அதை  துவக்கம் முதல் விவரித்து விவாத, யுத்தத்தில் காலத்திற்கு அல்லது சமுகம் முன்னால் செல்வதற்கு தேவையானதை எடுத்துகொண்டு மற்றதை அழித்து எஞ்சியதை தொகுத்துகொண்டு மானுடம் முன்னால் செல்ல வழி வகுப்பது. கர்ணன் "நாக வேதத்தின் " குறியீடு. கர்ணன் இறந்து ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் இன்னமும் நாகவழிபாடு இருக்கிறது.  உலகம் அழியும் வரை இருக்கும். புறவயமாய் "தாழ்வுணர்வும் அடியாழ  காமமும்   தன்னை நிரூபிக்க அடுத்தவர்களுக்காய் வாழ்வதும் .....இது தேவை இல்லாதது . அகவயமாய் காமமும் இமையாவிழியும் சுருங்குதலும் படம் எடுத்தலும் தேவை . இதை இளையயாதவரின் வாழ்கையை கூர்ந்து நோக்கினாலே தெரியும். முக்கியமாய் " நாகவேதம்" என்பது உண்மையில் என்ன  என பிட்டு பிட்டாய் வெண்முரசு முழுவதும் வருவதை தொகுத்து தேவை தேவை இல்லை என நாமலே தொகுத்துகொண்டால் ஈசி. ஆனால் அதை நினைத்தால் தலை சுற்றுகிறது. 

கடோத்கஜன்  அரக்க வேதத்தின் குறியீடு.  அதைதான் கிருஷ்ணர் " அவனது மெய்யியியல் " அது என அங்கிகரிக்கிறார். ஏன் என்றால் அதுவும் உலகம் இருக்கும் வரை இருக்கும் கொஞ்சம் மாற்றத்தோடு. ஜராசந்தன், கடோதகஜன்  இருவரின் வார்த்தைகளை கேட்டாலே  அந்த மாறுபாடு புரியும்.  வெண்முரசில் எல்லா கேரக்டர்களும் ஏன் திரும்ப திரும்ப வருகிறது என ஆரம்பத்தில் குழப்பமாய் இருக்கும் ஆனால் கால மாற்றத்திற்கு ஏற்ப கேரக்டர்களில் மாறுபாடு இருக்கும் , அந்த காலத்திற்கு ஒவ்வாதது அழிக்கப்படும். " வலிமை உள்ளது வாழும் " என்பது அந்த  அந்த காலங்களில் மக்களுக்கு சமுகத்திற்கு தேவை என்ன என்பதை  கொடுப்பதும் தேவை இல்லை என்பதிற்கு எதிராய் போராடுவதும் தான் என நினைக்கிறேன். 

பீஷ்மர் " அம்பில் படுத்துகிடக்கிறார்" ...இன்னும் மரணிக்கவில்லை. அவர் என்ன வேதத்தின் குறியீடு என  எனக்கு தெரியவில்லை  .ஒரு வேளை மலைவேதம் ஆக இருக்கலாம்.  அதும் பிட்டு பிட்டாய் வெண்முரசு முழுதும் இருக்கும். தொகுத்து புரியவேண்டும். ஏன் என்றால்  பீஷ்மர் தன்னை குறித்து பேசுவதுதான் அதன் வேதம்.

துரோணர் ஷத்ரிய- அந்தண வேதங்களின் குழப்பம். ஆனால் கிருஷ்ணனை ,அடுத்து இருக்கும் காலத்தை புரிந்துகொள்ளாமல் புரிந்து கொளள மறுக்கிறவர். ஆனால் உட்சபட்ச பதவியில் இருக்கிறவர். இவரின் கேரக்டர் இப்போது நம்மோடு இணையவெளியிலும் நேரடியாகவும் பார்க்கலாம். அவர்களின் கருத்து கேட்கும்போது நெஞ்சு பதறும்.  இது நான் புரிந்துகொண்டது. உங்களின் " நான்கு முகம் " என்னும் கட்டுரை என்னை நெடுநாள் சிந்திக்க வைத்தது சார். தனி வாழ்க்கை , குடும்ப வாழ்க்கை, கர்ம வாழ்க்கை ,ஞான வாழ்க்கை என்று பிரித்த் கொண்டால் ஈசியாக வெண்முரசின் எல்லா நாவல்களையும் புரிந்து கொள்ளலாம் என நினைக்கிறேன். இதை வெண்முரசின் எல்லா கேரக்டர்களுக்கும் பொறுத்தி பார்த்தால் அவர்கள் நிற்பது எதன் மேல் என புரியும்.  சாதாரண மனிதர்களை கேரக்டர்களாக கொண்டும் எழுதலாம்...ஆனால் விதி சமைப்பவர்கள் சொல், பொருள், அரசியல் அதிகாரத்தில் இருப்பவர்கள். அவர்களின் கருத்துகள்  தான் உக்கிரமாக மோதும். சுருக்கமாக ...கார்கடலின் தீம் " வேதங்கள் , அவற்றை வேதமாக கொண்டவர்கள் வெற்றியும் இழப்பும்...அனைவரின்  வேத கருத்துகளையும் தேவையானதை எடுத்துகொண்டு மீதியை அழித்து அந்த காலத்திற்கு [கலியுகத்திற்கு ] தேவையானதை கொடுக்க கிருஷ்ணனின் திருவிளையாடல்

ஸ்டீபன்ராஜ் குலசேகரன்