அன்புள்ள ஜெயமோகன்,
பல நாட்களுக்குப் பிறகு இன்றைக்கு வெண்முரசைப் படித்தேன். அருமையாக எழுதி இருக்கிறீர்கள். வெண்முரசின் உச்சமே மீண்டும் மீண்டும் எதிரிகள் ஒருவரை ஒருவர் கண்டடைவதுதான் என்று தோன்றியது.
ஒரு கர்ணபரம்பரைக் கதை உண்டு. ராஜசூய யாகத்தின்போது கண்ணனின் அறிவுரையால் யுதிஷ்டிரன் துரியோதனனை தானம் கொடுப்பதற்கு அதிகாரியாக நியமித்தானாம். ஒரு அண்டா நிறைய தங்கக் காசுகளைக் கொடுத்து காசுகள் தீரும் வரை கொடு என்று சொன்னானாம். துரியோதனனின் கையில் தனரேகை உண்டாம். அதனால் கொடுக்கக் கொடுக்க காசுகள் அண்டாவில் நிரம்பிக் கொண்டே இருந்ததாம், தீரவே இல்லையாம். களைத்துப் போன துரியோதனன் அந்தப் பக்கம் வந்த கர்ணனைப் பார்த்து நீ கொடுப்பா என்று சொல்லிவிட்டு நகர்ந்துவிட்டானாம். அடுத்து வந்தவருக்கு கர்ணம் அண்டாவைத் தூக்கிக் கொடுத்துவிட்டுப் போய்விட்டானாம். நீங்களும் கேட்டிருப்பீர்களோ தெரியவில்லை. இல்லை முழுவதும் உங்கள் கற்பனைதானோ என்னவோ. மிகச் சிறப்பாக வடித்திருக்கிறீர்கள்.
நான் அறியாத தமிழ்ச்சொற்கள் என்னென்ன இன்று வந்திருக்கின்றன என்று உன்னித்துப் படித்தேன். மாகதர், சுதியாழ், கிணைப்பறை, கடுவெளி, வற்கடம். ஊகிக்க முடிந்தது.
என் மகாபாரதப் பித்தோ உங்கள் எழுத்தில் ஆர்வமோ குறைந்துவிடவில்லை. ஆனாலும் வெண்முரசைப் படிப்பது நின்றுவிட்டது. ஒரு வருஷமாகவே எதையும் படிக்கும் மனநிலை இல்லை. ஏதோ பழக்க தோஷத்தினால் ட்ரெயினில் தினமும் போய்வரும்போது படிக்கிறேன். கவனம் தேவைப்படும் எதையும் அனேகமாகப் படிப்பதில்லை, தவிர்த்துக் கொண்டிருக்கிறேன். கர்ணபர்வத்திலிருந்தாவது மீண்டும் ஆரம்பிக்க முடிகிறதா என்று பார்க்க வேண்டும்.
அன்புடன்
ஆர்வி