அன்புள்ள ஜெயமோகன் அண்ணா,
இருட்கனி 7-ஆம் அத்தியாயம். கர்ணனின் ஆதியும் அடிப்படை இயல்புமான கொடையை ஒட்டியே அவனது முடிவுகள் அமைகின்றன. ஒவ்வொன்றாக பரிசீலித்து நான் இதுவல்ல நான் இதுவல்ல என்று சென்று சிவமே நான் என்பதைப் போல, ஆனால் நன்கு சிந்தித்துச் செல்வதல்லாமல், இயற்கையாக எல்லாவற்றையும் கடந்து கொடை என்றே சென்று அமைகிறது அவன் உள்ளம். பிறப்பு முதல் இறப்பு வரை முற்றிலும் தன் வாழ்வை ஊழுக்கு கொடை அளித்துவிட்டவன் அவன், ஆனால் ஊழாலும் அவனிடமிருந்து நீக்கப்பட முடியாததாக எஞ்சுகிறது கொடை அதுதான் அவன், அது இழக்கப்படவே முடியாதது.
அவமதிப்பின் வலியும் துயரும் கொந்தளிப்பும் என்று செல்லும் அவன் ஆசிரியர் என்கிறான். மிக்கதொரு ஆசிரியர் அவனுக்கு அருளப்படுகிறார். அவன் துயர் என்று சொல்லும் போது கற்றலின் வாயிலாக வளர்ந்து துயர்கடக்கும் வழி அவனுக்கு சொல்லப்படுகிறது. வஞ்சம் என்று அவன் மனம் கருதும்போது வஞ்சம் தீர்க்க அவனுக்கு வாய்ப்பு தரப்படுகிறது. அவனுக்கு கிடைக்காதது என்று எதுவும் இல்லை. ஆனால் ஒவ்வொன்றையும் அது நான் அல்ல என்று சொல்லி, மற்றவர்க்கு தந்துவிடச் சொல்லி அவற்றின் இடத்தை கொடை கொடை பெற்றுக்கொண்டு விடுகிறது.
ஒவ்வொரு அம்சத்தில் அவன் ஒவ்வொருடன் பொருந்துகிறான், அவர்களின் விழைவை அவனும் கொள்கிறான், ஆனால் அவர்களின் சென்று சேருமிடம் அவன் சென்று சேரவதில்லை. தெரிவு, வழிமுறை, சேருமிடம் எல்லாவற்றிலும். கொடை தன் வேலையை செய்துவிட்டு, முதல் விழைவையும் பொய் என்று ஆக்குகிறது.
அவன் அர்ஜுனனை விட பெருவில்லவன் ஆனால் வில்லின் பேரால் அறியப்படுபவன் அல்ல. பரசுராமர் போல் வஞ்சம் எழுகிறது ஆனால் அவர் போல் வஞ்சம் தீர்க்க விருப்பம் இல்லை. வஞ்சம் தீர்க்க விருப்பம் இல்லையானால் உனக்கு இவை எதற்கு என்று தீச்சொல்லின் வாயிலாக இப்போது வைத்துக்கொள் கொஞ்ச நேரம் கழித்து உரிய தருணத்தில் தந்துவிடு என்று தந்திரமாக தட்டிப்பறிக்கிறது ஊழ்.
கொடை அவனது ஊழ் கொடை அவனது விடுதலை.
அன்புடன்,
விக்ரம்,
கோவை.