Sunday, April 7, 2019

மூச்சுலகுஅன்புள்ள ஜெயமோகன் சார்,

 இமைக்கணத்தின் 8ம் அத்தியாத்தில் வசுசேனர்  மூச்சுலகில் இருந்து தனது ரத்தத்தின் தொடர்ச்சியை  நோக்கிக்கொண்டு இருக்கிறார் . எள்ளும் தண்ணீரும் அழித்து நீத்தார் கடன் செய்தால் அவர்கள் மூச்சுலகில் இருக்கமாட்டார்கள் அல்லவா? ஒருவேளை இந்த பிறவியில் நிறைவுறாமல் "ஒரு அருமணியை வாயில் ஒதுக்கி வைத்து இருந்ததினால் " அவர் இன்னும் மூச்சு உலகில் இருக்கிறாரா? அப்படி என்றால் எல்லாரும் நிறைவுறாமல் தானே சாகிறார்கள் ? அப்படி என்றால் அந்த சடங்குக்கு என்ன பொருள் ? " நாம் அவர்களை நினைக்கிறோம் " அவ்வளவு தானா ? ......எல்லாம் நாம் இன்னும் இங்கு இருக்கிறோம் என்னும் எத்தனங்களுக்கு ஆன விசை தானா? ..அப்படி என்றால் நாம் கற்பனை பண்ணும் இன்னொரு வாழ்க்கையும் இப்படிதான் இருக்குமா? .. அத்தனை மணி ஆரங்களும் கழட்டியபின் தனது வயோதிக உடம்பை ஏன் அப்படி பார்க்கிறார்? இப்போதுதான் அவர் தனது உடம்பை உடம்பாக பார்க்கிறார். அப்படி பார்த்தால் முப்பதுக்கு பிறகு  ஒவ்வொருநாளும் நிம்மதியாய் வாழ முடியுமா ?  ஆதலால் தான் ஆணும் பெண்ணும் முப்பதுக்கு பிறகு "ஜிம்" மிற்கு ஓடுகிறார்கள் போல.  

கர்ணருக்கு அவரின் மகனின் இறப்போ இளையோரின் இறப்போ அவரை மூச்சுலகில் இருக்கும்போது ஒன்றும் செய்யவில்லை "விருஷசேனனின் இறப்போ, இளையோரின் மறைவோ அவரை வருத்தவில்லை. ஆனால் ஒவ்வொரு தருணத்திலும் அவருக்கு சொல்வதற்கொன்று இருந்தது. அதை சொல்லத்துடிப்பதே அவர் துயரென்றாகியது. மூன்று தலைமுறை கடந்தபோது ஜனமேஜயன் அவையில் அவருடைய பெயர் அரிதாகவே பேசப்பட்டது. ஐந்து தலைமுறைக்குப் பின் குடியவைகளில் அவருடைய வாழ்க்கையை எவரும் அறிந்திருப்பதாகவே தெரியவில்லை. அரசர்களின் பெயர் நிரையில் ஒன்றுடன் ஒன்று பின்னி ஒழுகிச்செல்லும் ஒலியில் அவர் பெயரும் மின்னி மறைந்தது.... அதை  எவரும் செவிகொடுக்கவே இல்லை ...என அறிந்து கடுப்பாகிறார். கலியுக தொடக்கத்தில் ஐந்து தலைமுறை நினைக்கிறார்கள் ....இன்று ?....... இன்று இந்த உலகை வடிவமைத்தவர்கள் மூச்சுலகில் இருப்பார்களா? அவர்கள் நம்மை அல்லது அவர்களின் வாரிசுகளை எண்ணி ஏங்குவார்களா?  “ஏன் மறக்கிறீர்கள்? ஒவ்வொன்றும் மறக்கப்படும் வெளியில் எதை நிலைநிறுத்துவீர்கள்?” என கேட்பார்களா? 

“மண்ணிலுள்ள அத்தனை விதைகளும் காடென்று எழும் வாய்ப்புள்ளவையே. கோடிகளில் சிலவே முளைத்தெழுந்து கிளைபரப்பி பூத்துக் காய்த்து காடாகின்றன” . “முளைக்காதவை தெய்வங்களால் கைவிடப்பட்டவை.”  என சுகாலன் கூற வசுஷேணர் சினத்துடன் “நான் உலகை வெல்லும் ஆற்றல் கொண்டிருந்தேன்” என்று கூவியபின் அச்சொல்லின் வெறுமையை உணர்ந்து பெருமூச்சுவிட்டார். நெஞ்சு அடிக்கிறது ....எப்படி வாழ்ந்தவன் கர்ணன் அவனையே " முளைக்காதவை " என்னும் பொருளில் கூறினால் ?  ........கர்ணன் கேட்கிறான் " எங்கே பிழை நிகழ்ந்தது என ? .......கர்ணனின் இந்தவாழ்விலும் பிழை என  இருக்குமா ? ஆதலால்தான்  மூச்சு உலகில் கிடந்தது  அல்லல் படுகிறானா? பதிலாய் சுகாலன் "“ஊடு மட்டுமே கொண்ட நெசவென உங்கள் வாழ்க்கை அதில் வகுக்கப்பட்டிருந்தது. எதிர் இல்லாமல் உங்கள் உள்ளுறைந்த எதுவும் எழமுடியாமலாயிற்று. உங்களுக்கான களங்களே அமையவில்லை. கோடிகளில் ஒன்றென நிகழும் கொடிய ஊழ்கொண்டிருந்தீர்.” திடுக்கிட்ட உள்ளத்துடன், நடுங்கும் கைகளைக் கோத்தபடி, வசுஷேணர் நோக்கி அமர்ந்திருந்தான் என வாசிக்கும்போது எனக்கே திடுக் என்றுதான் இருக்கிறது. மாமனிதர்களுக்கு எதோ ஓன்று தெரிகிறது.... இந்த வாழ்வின் ஒரு பிழை ...?  மூச்சுலகிலும் கேள்விகள் கேட்கிறார்கள். ஆறாமல் அலைகிறார்கள். 

ஆனால் தவறவிட்ட வாய்ப்பு ஓன்று இருக்கிறது என சுகாலன் கூறும்போது நெஞ்சு அடிக்கிறது ....“ஒன்று செய்திருக்கலாம், உண்மையில் அது ஒரு பெரும் வாய்ப்பு. அந்த ஊழையே உங்கள் எதிர் என கொண்டிருக்கலாம். பேராற்றல் கொண்ட எதிரி. நிலைக்கா விசைகொண்ட பாவு. நீங்கள் அதை தவறவிட்டீர்கள். குமிழியுடையும் நுரை என ஒவ்வொரு நாளும் அமைந்துகொண்டிருந்தீர்கள்.” " என வாசிக்கும்போது உண்மையிலே நான் சந்தோஷமே அடைந்தேன். எனது எளிய வாழ்வில் என்னோடு மோதிக்கொண்டு இருக்கும் ஊழை எதிர்ப்பது. எதிரில் நிற்ப்பவன் ஊழால் எனக்கு அளிக்கப்பட்டவன். வாழ்வில் கிடைக்காதவற்றை குறை கூறி நுரை மாதிரி அமையாமல் அலையும் பாவுக்குள் மட்டுமே வாழ்வது என்பது. ஜெயமோகன் சார் , உங்களை எப்படியோ தொடர்ந்து இந்த உண்மையை விளங்கிகொண்டதினால் இன்னும் நெருக்கமாய் அமைகிறது. உண்மையாய் போராடும்போது சந்தோஷமாகவும் நமது துறையில் உள்ள திறப்புகளும் எதிர்ப்புகளும் ..எல்லாமே ஈஸியாய் புரிகிறது. முக்கியமாய் கலியுகத்தில்  கர்மமண்டலத்தில் கருணையை, நன்றியை , இரக்கத்தை ,முட்டாள்தனமான எதிர்பார்ப்பை .....இது வெறும் வியாபாரம் மட்டும் என்பதையும். 

விஸ்ரவனின் கதையை படிகும்போது  ஜராசந்தன் கதையா என எண்ணினேன் ? பிறகு துரோணர் கதையா என்று ? "விஸ்ரவன் நூல்கற்றான், ஆனால் இசையும் ஆடலும் அவனுக்கு அமையவில்லை. விற்கலையும் போர்க்கலையும் காவியங்களிலிருந்தே உளம்பட்டன. அரசுசூழ்தலை அவன் அரசும் அரண்மனையும் இல்லாமலேயே கற்றுத்தேர்ந்தான். வில் அவன் ஆழுளம்போல ஆயிற்று. ஒருமுறை மூங்கில் அம்பைக்கொண்டு பறக்கும் கிளி ஒன்றை அவன் வீழ்த்தியபோது உடனிருந்த முதிய நிமித்திகர் ஒருவர் “இவன் சூதனல்ல, ஷத்ரியன்” என்றார். “இவன் குருதியில் உள்ளது குலவித்தை" என படிக்கும்போதும் அன்னையே அவனை கொல்ல தேடும்போது இது கர்ணனின் இன்னொரு பிறப்பு கதையா? என்றும்  நாகர்களால் காப்பாற்றப்படும்போது பீமனின் இன்னொரு பிறப்புகதையா என்றும் ஒரே குழப்பம். ரத்தம் உலராத தனது குருகுலத்தின் கடைசி வாரிசாகிய கேசமனிடம் வசுஷேனர்அவன்துறக்கப்பட்டவன்,வேட்டையாடப்பட்டவன்,பழிசூடியவன்.நெஞ்சு நச்சுக்கலமென்றானவன். அவனை நான் அறிவேன். மைந்தா,அவனை தவிர்த்துவிடு” என்று விஸ்ரவன் பற்றி கதறுவதும் எல்லாம் இப்போது எனது அருகில் யாரோ இருப்பதுபோல உணரவைக்கிறது. கால் தடுக்குவதும், கட்டை இடிப்பதும், சிறிதாய் வழுக்குவதும் , காலையில் பைக்கை பார்க்க பஞ்சர் ஆகி நிற்பதும், எல்லாம் சகுனங்கள் என கேட்டிருக்கிறேன்...ஆனால் அது பதைபதைக்கும் நமது மூதாதையின் ஆத்மாவாய் இருக்கலாம் என்று எண்ணி பார்க்கவே முகம் மலர்கிறது.  ஆழமாய் உணரவேண்டிய இடம். நமது மனசாட்சி என்று கூறுவது இதைத்தானா? .....விஸ்ரவன் கால்தடுக்கிய ஓசைகேட்டு க்ஷேமகன் எழுந்துகொண்டு “என்ன செய்தி?” என்று கேட்டான். வாள் சுழன்று அவன் தலையை வெட்டி ஓசையெழ நிலத்தில் உருட்டியது. 

கர்ணன் இதுவா இன்னொரு வாழ்வு ? என அதிர்ச்சியாகி "என்னை கைவிடாதீர்கள் " என கேட்கிறார் இளைய யாதவரிடம். 


ஸ்டீபன் ராஜ் குலசேகரன்