Wednesday, November 1, 2017

பலராமரின் தர்க்கத்தை எதிர்கொள்ளல் (எழுதழல் 32)


 
  அரசியல் மேடைகள் முதல்  இலக்கியப் பட்டிமன்றங்கள் வரை நாம்  தர்க்கங்களால் நம் மனம்  ஊசலாடுவதை கண்டிருப்போம். ஒருவர் சொல்லுவது  மிகச்சரியென்று தோன்றும். பின்னர் அது மறுத்துரைக்கப்படும்போது ஆம் இதுதானே சரி என்று தோன்றும்.   ஏனென்றால் அனைத்துவகை தர்க்கத்திலும் உண்மையின் ஒரு கூறு காட்டப்படுகிறதுதர்க்கத்தில் ஈடுபடுபவர் தனக்கு சாதகமான உண்மையின் சிறு பாகத்தை  மட்டுமே  ஒளி பாய்ச்சி நம்மைக் காணசெய்கிறார்.   அந்தப் பிரகாசத்தில் மற்ற பாகங்கள் நம்  கண்ணில் படாமல் இயல்பாக மறைந்துவிடுகின்றன.

        
பலராமர் துரியோதனனுக்கு சாதகமாக தன் தர்க்கங்களை வைக்கையில்அவருடைய தர்க்கத்திற்கு பதில் சொல்ல முடியாமல் பாண்டவர் தரப்பினர் வாயடைத்து நிற்பதாகத் தோன்றுகிறது. அவர் உதவ நினைப்பதே உடன்பிறந்தாருக்கிடையே ஏற்படப்போகும்  போரை நிறுத்துவதற்காகத்தான் என்கிறார். தருமருக்கு தன் நாட்டினை திரும்பக்கோர எவ்வித உரிமையும் இல்லை என்பது அவர் தரப்பு வாதமாக இருக்கிறது

பலராமர் :இங்கே மெல்லமெல்ல ஒரு போர் முனைகொண்டுவருகிறதோ என்னும் ஐயமெழுகிறது. உடன்பிறந்தார் எவ்வகையிலும் களமெதிர்நிற்கக்கூடாது. அது குருதியளித்த மூதாதையருக்கு எதிரான போர். ஒவ்வொரு அம்பும் சென்று தைப்பது மூதன்னையரின் முலைகளுக்குமேல். அதை தவிர்த்தேயாகவேண்டும். அதை நான் அவனிடமும் சொல்கிறேன்.”
மணிமான்  என்ற ஒரு மன்னர் பலராமரிடம் அவர் மாணவன் தன் பேச்சை இப்போது கேட்பான் என்றால் துரியோதனன் முன்னர் தவறு செய்யும்போது ஏன் சும்மா இருந்தீர்கள் என கேட்கிறார். அதற்கு பலராமர் அப்போது துரியோதனன் தவறு ஏதும் செய்யவில்லைஅனைத்துக்கும் காரணம் தருமர்தான் என்று கூறுகிறார்.

பலராமர்நான் அதில் பிழையேதும் காணவில்லை. ஒருவன் தன் அறியாமையாலும் ஆணவத்தாலும் நிலத்தை வைத்து சூதாடுகிறான் என்றால் அவனுக்கு அந்நிலத்தை ஆளும் உரிமை இல்லை. ஏந்த முடியாததை அவன் இறக்கிவைப்பதன்றி வேறுவழியில்லை. குருதியின்றி அவனிடமிருந்து நாடு கொள்ளப்பட்டது முறை என்றே எண்ணுகிறேன்என்றார்.

பலராமரின் இந்தக் கூற்று புதிதல்ல. கிட்டத்தட்ட பீஷ்மரும் இதையே கூறியிருக்கிறார்பாரத நாட்டின் பெரும்பான்மையான மன்னர்களும் இதை ஏற்றுக்கொள்கின்றனர்ஏன் இந்தக் காலத்திலும் பலர் இதை ஏற்றுக்கொள்வதாகத் தெரிகிறதுஇந்தத் தர்க்கத்தில் என்ன பிழை என பார்க்கவேண்டும்இந்தச் சூது  இரு பகைவர்கள் தன் வெற்றியை சூதின் மூலம் நிர்ணயித்துக்கொள்ளலாம் என வைத்து ஆடும் ஆட்டமல்லஇது ஒரு களிவிளையாட்டு  என்றே தருமரிடம் கூறப்பட்டு அழைத்துவரப்படுகிறார்சூதின் மாயையில் வீழ்ந்திருக்கும் தருமரிடம் தன் நாடு சகோதரர்கள், மனைவி என அனைத்தையும் வென்றெடுப்பது மது மயக்கத்தில் வீழ்ந்திருக்கும் ஒருவனிடம் அவன் சொத்துக்களையெல்லாம் பத்திரங்களில் எழுதி வாங்கிக்கொள்வதற்கு இணையானதுசட்டப்படி அந்தப் பத்திரங்கள் செல்லும் என்று வாதிட முடியும். ஆனால் அறத்தின்படி அது சரியானதா?   அனைத்து நெறிகளுக்கு மேலான  அறம் ஒன்று இருக்கிறது. அது மனித அறம். அதைக் காக்கத்தான அத்தனை நெறிகளும்நெறிகளைக் காரணம் காட்டி மனித அறத்தை தவறவிடுதல் தொட்டில் பாழாகுமே என்பதற்காக குழந்தையைக் கீழே தள்ளிவிடுதலைப்போன்றது.   தன் உறவினனின் நாட்டை சூதாட்டத்தின் மூலம் எடுத்துக்கொள்வதும் அவர்களை அடிமைப்படுத்த முயன்றதும் அவர்கள் குல மகளை இழிவு படுத்த நினைப்பதும் எவ்வகையிலும் மனித அறம் இல்லை.    

 “ஆம், அவன் நிலத்தை அளித்தால் அது கொடையேதான். வேறென்ன? எதன்பொருட்டு    நிலம் கோருகிறீர்கள் நீங்கள்? வென்றவன் கொண்ட நிலத்தை கேட்டுப்பெற்றவர்கள் உண்டா இங்கே? அவன் பேரறத்தானின் மைந்தன், என் மாணவன். ஆகவே அவன் அதை செய்வான். நான் ஆணையிட முடியும். அதனால்தான் இங்கே அவையெழுந்து பேசுகிறேன்என்றார் பலராமர்

  
பலராமர் அதை எப்படி கொடை என்கிறார்? அதே பேரறத்தானாகிய திருதராஷ்ட்டிரர் பதிமூன்றாண்டு காலம் கழித்த பின்னர் பாண்டவர்களுக்கு நாடு திரும்ப ஒப்படைக்கப்படும் என்று சொல்லளித்திருக்கிறார். அந்தச் சொல்லைக் காப்பாற்றுவது எப்படி கொடையென ஆகும்ஒருவேளை அந்தச் சொல்லளிக்கப்படாமல் இருந்திருந்தால் பாண்டவர்கள் படை திரட்டி மக்களின் துணைகொண்டு அப்போதே போரை துவக்கியிருக்கலாம்அவர்களுக்கு சொல்லளித்து நம்பவைத்து இப்போது அந்தச் சொல்லில் பொருளல்ல என்பது எந்த நெறியின் கீழ் வரும்.?

இதையே  துருபதர் பலராமனிடம் வினவுகிறார்.

துருபதர்அனைத்துக்கும் அப்பால் நெறி என ஒன்றுண்டு, யாதவஅரசே. அதை சொல்க! இங்கே எவர் பக்கம் உள்ளது அறம்?” என்றார்.  “அவனிடம்தான். அதிலென்ன ஐயம்?” என்றார் பலராமர் உரத்த குரலில். “அவன் நிலம்வென்றவன். வென்ற நிலத்தை விண்ணவர் உகக்கும்படி ஆண்டவன்.    

   ஒரு வீரன் தன் வீரத்தின் மூலம் அல்லாமல் ஒரு சூதின் மூலமாக கவர்ந்ததைவென்றெடுத்தது என்று ஒரு வீரரான பலராமர் கூறுவது வியப்பாக இருக்கிறதுஇன்னொருவன் விளைநிலத்தை  கவர்ந்துகொண்ட ஒருவன் அதை நன்கு பராமரித்தான் அதனால் அவனுக்கே அது சொந்தம் என்று சொல்ல முடியுமா?  

அவன் வென்ற நிலமோ அவனுக்கே முறைப்படி உரியதும்கூட.” துருபதர் சீற்றத்துடன் எழுந்துஎன்ன சொல்கிறீர்கள்?” என்றார். “எதன்பொருட்டு நீங்கள் அவனிடம் நிலம் கோருகிறீர்கள்? குலமுறைப்படி என்றால் அக்குலமுறை அவனுக்கே முடியை முற்றளிக்கும் நெறிகொண்டது. அஸ்தினபுரியின் அரசர் திருதராஷ்டிரரே. அவர் மைந்தனே அடுத்த அரசன். குடியில் பிறந்த மூத்தவனல்ல, கொடிவழியில் மூத்தவனே முடிக்குரியவன்என்றார் பலராமர்.

   அஸ்தினாபுரியின் அரசராக முதலில் முடிசூட்டிக்கொண்டது யார்பாண்டு அல்லவாபாண்டு காட்டிற்குச்  சென்றபோது ஒரு பாதுகாவலனாகவே திருதராஷ்டிரர் அறியப்பட்டார். எப்போதும்  குந்தி பேரரசி என்றே கூறப்பட்டு வந்தார்தருமன் படைவென்று கொணர்ந்த பகையரசனின் முடியை குந்தியில் காலடியில் வைத்தபோது அது நெறி மீறல் என்று எவரும் கூறவில்லைதிருதராஷ்டிரருக்கு முடிசூட்டாமல் பாண்டுவுக்கு முடி சூட்டிய நிகழ்வின் மூலம் திருதராஷ்டிரர் அரச பதவிக்கு உரியவர் அல்ல என நிறுவப்பட்டது. பீஷ்மர் சகுனிக்கு சொல்லளித்தது அவருடைய தனிப்பட்ட முடிவு. அது குலமுறையின் விதிகளுக்கு உட்படாதது. ஆக கொடிவழியில் பாண்டுவே வருகிறார். திருதராஷ்டிரர் அல்ல.      

நீங்கள் சொல்பேணும்படி கோரினீர்கள் என்றால் அதற்கு முன் உங்கள் தந்தை அளித்த சொல்லை பேணுக! பதினெட்டு ஆண்டுகளுக்குப்பின் மணிமுடியை அளிப்பதாக உரைத்த பாண்டுவின் சொல் வாழட்டும்என்று பலராமர் உரக்க சொன்னார்.

இங்கு பலராமர் தவறான செய்தியைக் கூறுகிறார். அது பாண்டுவின் சொல் அல்லஅது பீஷ்மரின் சொல்அது பாண்டுவிற்கு தெரியாது என்றே பீஷ்மராலும் சொல்லப்படுகிறது.    சரி தன் மூதாதையரான பீஷ்மரின் சொல்லைப் பேணுவதும் பாண்டவரின் கடமை என்றே கொள்வோம். ஆனால் ஒரு சொல்லுக்குப் பின் அதைச் சீர்படுத்தி மற்றொரு சொல் அமைந்து அதற்கு ஒப்புக்கொடுத்தபிறகு மீண்டும் முன்கூறிய சொல் எப்படி நிற்கும்பீஷ்மர் அளித்த சொல்லுக்கு பிறகு அவை கூடி விவாதித்து, அனைவரின் ஒப்புதலோடு தருமருக்குத்தான்  அரசுரிமை என்று முடிவெடுத்த சொல் என்ன ஆனதுவாரணாவத எரிப்புக்கு பின்னர் மீண்டும் நாடு திரும்பிய தருமனிடம் இயல்பாக ஆட்சியை அளித்திருக்க வேண்டும் அல்லவா? அவையில் முடிவென அமைந்த  அந்தச் சொல் மீறப்பட்டு நாட்டை இரண்டாகப் பிரித்து தருமனை அஸ்தினாபுரத்தைவிட்டு வேறு பகுதியை ஆள பணிக்கப்பட்டதுஅந்த நாட்டையும்  சூது முறையில் கவரப்பட்டு அங்கு நடந்த அறமீறலுக்கு நாணி, வருந்தி ஒரு பிராயச்சித்தமாக  மீண்டும் அரசை 13 ஆண்டுகாலம் கழித்து வந்து பெற்றுக்கொள்க என்ற  திருதராஷ்டிரரின் இறுதியான சொல் இப்போதும்  இருக்கிறது.   

   அடுத்து அவர் திரௌபதின் துகிலுரிப்பு நிகழ்வைப் பற்றிய தனது தர்க்கத்தை இவ்வாறு வைக்கிறார்.

நகுலன்மூத்தவரே, திரௌபதியின் ஆடையை அவையில் களைய முற்பட்டதை நீங்கள் அவனிடம் கேட்டீர்களா?” என்றான். “அதை கேட்கவேண்டியதில்லை. பாஞ்சாலத்தரசி அகத்தறையில் அமர்ந்தவளல்ல. மும்முடிசூடி அரியணை அமர்ந்தவள். அவள் கணவன் அருகமர்ந்தவன் மட்டுமே. வென்ற அரசனை அவைச்சிறுமை செய்து தருக்குவது ஷத்ரியர் வழக்கம். அது முறையல்ல, ஆனால் பெரும்பிழையும் அல்ல.”

    அப்படி அரியணையில் பேரரசி என அமர்ந்த பெண்ணை எவ்வித காரணமமுமின்றி இப்படி அவமதிப்பு செய்யலாம் எனக்கொண்டால் அப்படிச் செய்யப்பட்டதற்கு பழிதீர்க்க அவளுக்கும் அவள்  கணவர்களுக்கும் உறவினர்களுக்கும்  அனைத்து உரிமையும் இருக்கிறதுபலராமரின் வாதம் இரு அரசர்கள் போரிட்டுக்கொள்ளலாம்.   ஆனால் அவர்கள் உடன்பிறந்தார்கள் என்றால் கூடாதுஇதே இலக்கணத்தின்படி  உடன் பிறந்தார் உறவுப் பெண்ணை அவள் அரசியென்றாலும்இழிவுசெய்யகூடாது என்பது வராதாஇவர் தனக்கு வேண்டும்போது ஷத்திரிய நெறியை கூறுகிறார்.  

ஒருமன்னன் இன்னொரு மன்னனை அவமதிப்பது என்பது அவனை  கொல்லுதலுக்கு நிகர்ஒரு மன்னன் அப்படிக் கொல்வது  சரியான நீதியின் படி இருக்க வேண்டும். முதலில் அவன் பகைவனாக இருக்க வேண்டும். அல்லது அந்த அரசனுக்கோ அவன் குடிகளுக்கோ கேடு விளைவித்தவனாக இருக்க வேண்டும். அல்லது தேவையின்றி ஒரு பெரும் போரை தூண்டியவனாக இருக்க வேண்டும். துரியோதனன் ஒரு அரசனென,   ஒரு அரசியாகிய திரௌபதிக்கும் சபையில் அவமதிப்பு என்ற தண்டனை  வழங்குகிறான் என்றால் எந்த நீதியின்படி அவன் அதைச் செய்கிறான்இவன் தடுமாறி விழுந்த போது அவள் சிரித்ததைப்போல் தோன்றியதாலா? பாண்டவர்களுக்கு அளிக்கப்பட்ட வெற்று காட்டுவெளியை ஒரு மிகச் சிறந்த நகரமாக கட்டுமானம் செய்து  புகழ்பெற்றதனலா? அஸ்வமேத யாகம் செய்து துரியோதனனால் பெறமுடியாத பேரையும் புகழையும் பெற்றதையா?  

எதை அவன் குற்றம் என்று சொல்ல முடியும்தன் மனதுக்கு  பிடிக்காதவர்கள் என்ற ஒரே காரணத்திற்காக ஒரு  அரசனை, அரசியை  கொல்வது அல்லது இழிவு செய்வது என்பது ஷத்திரிய தர்மமா? ஒரு கூற்றுக்கு அப்படிச் செய்வது சரியென வைத்துக்கொண்டால்கூட  தருமன் நாட்டை இழந்த பிறகு அவன் ஒரு எளிய குடிமகன்இப்போது துரியோதனுக்கு  அவன் அண்ணன் மட்டுமேதிரௌபதியும்  பேரரசியல்லஅவன் நாட்டு குடிமகள். அவனின் அண்ணனின் மனைவி. அன்னைக்கு நிகரானவள்இப்போது எந்த ஷத்திரிய அறத்தின்படி பலராமர் துரியோதனன் பக்கம் நீதி இருக்கிறது என்கிறார்இது பெரும்பிழை இல்லையென்றால் பின்னர் எதுதான் பெரும்பிழை

பலராமரின் தர்க்கத்தில் எவ்வித சாரமும் இல்லைஇதை அங்கு அவையமர்ந்தவர்கள் சரியாக மறுத்துரைக்காமல் இருந்திருக்கலாம்ஆனால் ஒரு எளிய வாசகனாக நான் இருந்தாலும் அதை மறுத்துரைக்கும்  உரிமை எனக்கிருக்கிறது என்று நினைக்கிறேன்.


தண்டபாணி துரைவேல்