பண்டரிபுரம்
பாண்டுரங்கன் செங்கல்மீது நிற்பதே, “பாரீர்!
என் இணைப்பதம்பாரீர்” என்று காட்டத்தான் என்பார்கள். அந்த பதத்தை
பற்றிக்கொண்டால் இகபரசுகம்
இணையாக கிடைக்கும் என்பது பெரியோர் வாக்கு. அதை இன்று கண்டு கொண்ட சாத்யகி
பெரியவானா? அதை காட்டுவதற்காகவே எங்கு சென்றாலும் சாத்யகியை அழைத்து
செல்லும் கண்ணன் பெரியவனா? பக்தனால் இறைவன் பெரியவன். இறைவனால் பக்தன்
பெரியவன்.
ஒவ்வொரு
கணத்தையும், ஒவ்வொரு பொருளையும் அனுபவிக்கும்
கண்ணன் ஒவ்வொன்றிலும் தன்னை ஊற்றி ஊற்றி நிறைத்து செல்கின்றான்.
ஒவ்வொன்றையும் தன்னில் நிறைத்து நிறைத்து செல்கின்றான். தான்
நிறைப்பதையும், தன்னில் நிறைவதையும் எடையற்றதாக ஆக்கும் குணத்தல்
அவன் எடையற்றவனாகவே இருக்கிறான் அந்த குணமற்ற நீலகுண்டு, நெடுங்குன்று.
அவன் அருகில்
இருந்து இருந்து அவனாகவே ஆகின்றான் சாத்யகி. இறைவனால் பக்தன் இறைவனாகிறான்.
பக்தனால்
இறைவன் மனிதனாகின்றான்.
அதை உணர்ந்தவன் போல அவன் திரும்பி
“வேடிக்கைபார்க்கத் தெரிந்தவனுக்கு இவ்வுலகம் இன்பப்பெருவெளி,
இல்லையா?”
என்றான்.
என்ன சொல்வதென்று தெரியாமல் தலையசைத்தான் சாத்யகி.
“ஆனால் பொருள் தேடலாகாது.
அழகு அழகின்மை நன்று தீதெனும் இருமை காணக்கூடாது.
அனைத்தையும் விட முதன்மையாக நேற்று நாளையால் இக்கணத்தை கறைபடச்செய்யக்கூடாது” என்றான் கிருஷ்ணன். அவன் விழிகள் மாறுபட்டன. “ஒவ்வொரு கணமும் முழுமைகொண்டு நம் முன் நிற்கையில் பெரும் திகைப்பு நெஞ்சில் எழுகிறது இளையோனே. அள்ள அள்ளக்குறையாத பெருஞ்செல்வத்தின் நடுவே விடப்பட்டவர்கள் நாம்.” சாத்யகி முழுமையாகவே விலகிவிட்டிருந்தான். ஆம் என்றோ இல்லை என்றோ அன்றி மையமாக தலையசைத்தான்.
ஆம் என்றோ இல்லை என்றோ அன்றி மையமாக தலையசைக்கும்
அந்த தருணத்தில் சாத்யகி கண்ணனாகி நிற்கின்றான்.
செந்திலம்பதி
வாழ்வே! வாழ்வோர்கள் உண்ட நெஞ்சறிதேனே! வானோர் பெருமாளே!
என்று என்பெருமான் முருகனைப்பாடும் அருள்திரு. அருணகிரிநாதசுவாமிகள்
நாராயணனை எல்லாமும் நீதான் என்கிறார். நீதான் என்றவர்,
அவர் மனதிற்கு சொல்லியச்சொல் பற்றவில்லை, அந்த பற்றாமையை சொல்ல வந்தவர்
“ஒன்றினும்
கடைதோயா மாயோன் மருகோனே என்று முடிக்கின்றார். மாயோனாக
இருப்பதாலேயே அவனால் இத்தனையும் முடிகின்றது.
மங்குல் இன்புறு வானாய் வானுடு
அன்று
அரும்பிய காலாய் நீள்கால்
மண்டுறும்
பகை நீறா வீறா எரிதீயாய்
வந்திரைந்தெழு நீராய் நீர்சூழ்
அம்பரம்புனை
பாராய் பாரேழ்
மண்டலம்புகழ்
நீயாய் நானாய் மலரோனாய்
உங்கள் சங்கரர் தாமாய் நாமார்
அண்டபந்திகள்
தாமாய் வானாய்
ஓன்றினும்
கடைதோயா மாயோன் மருகோனே
ஒண்தடம் பொழில் நீடூர் கோடூர்
செந்திலம்பதி
வாழ்வே வாழ்வோர்
உண்ட
நெஞ்சறி தேனே வானோர் பெருமாளே.-(அங்கை மென்குழல் ஆய்வார்போலே-திருப்புகழ்)
சாத்யகி கண்ணன் உடன்தான் இருக்கிறான் ஆனால் அவன் நின்றும்,
நடந்தும், கிடந்தும், நினைத்தும் காண்பது மாயோன் தரிசனம். சாத்யகிக்கு கண்ணன் அருள்வது மாயோன் தரிசனம்.
மாயோன் தரிசனம் காட்டினாலும் நீ அஞ்சாதே, என் இணைப்பதம்
உனக்கு துணை என்று காட்டுகின்றான்.
//கிருஷ்ணனின் இரு காலடிகளும் நிற்கையிலும் நடக்கையிலும் முற்றிலும் இணையானவையாக,
ஒன்றின் ஆடிப்பாவை இன்னொன்று என தெரியும்.
மானுடர் எவரிலும் அதை அவன் கண்டதில்லை//
அன்புள்ள ஜெ, காலையில் எழுந்ததுமே முதல்நினைவாக கிருஷ்ணன் தன் நெஞ்சுள் வருவது ஏன் என்று வியக்கும்
சாத்யகி என்று தொடங்கும் இந்த பகுதி-வெண்முகில்
நகரம்-57. கிருஷ்ணன் இணைப்பததரிசனத்தில் முடிவதில் ஒரு கவிதையின் அழகும்,
ஒரு மொட்டு
மலரும் உணர்வும், ஒரு எளிய மனிதன் பக்தனாகும் பக்குவமும், பக்தன் பெரும்
பேராகிய தெய்வீக தரிசனமும் வந்து நின்று நிறைவினை தந்தது. இதற்கு பெயர்தான்
ஆண்டுகொள்ளுதல் என்பதா?
நாயேனையும் இங்கு ஒருபொருளாக நயந்துவந்து
நீயே நினைவின்றி ஆண்டுகொண்டாய் நின்னை உள்ளவண்ணம்
பேயேன் அறியும் அறிவு தந்தாய் என்ன பேறு பெற்றேன்
தாயே மலைமகளே செங்கள்மால் திருத்தங்கச்சியே-அபிராமி அந்தாதி.
.
நன்றி
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.