Tuesday, March 31, 2015

கிருஷ்ணனின் விரிவு




அன்புள்ள ஜெ

கிருஷ்ணனை ஒரு சாமானியனாகவும் அதைக்கடந்தவனாகவும் உருவாக்கிக்கொண்டுவரும் நுட்பமனா புனைவை கவனித்துக்கொண்டே வருகிறேன். சாதாரணமாக என்ன செய்கிறார்கள் என்றால் இத்தகைய நுணுக்கமான வரலாற்று பிம்பங்களை அல்லது பௌராணிக கதாபாத்திரங்களையெல்லாம் ஒருவகையில் யதார்த்தமாக ஆக்கி சாதாரணமாக ஆக்கிவிடுகிறார்கள். அதுதான் நவீன இலக்கியம் செய்வது என்று காட்டுகிறார்கள்.

அப்படிசாதாரணமாக ஆக்குவது வழியாக என்ன அடையப்படுகிறதென்று பார்த்தால் அந்த அசலில் இருக்கும் வசிகரம் இல்லாமலாகிவிடுகிறது. அதுவும் நம்மைப்போலத்தான் என்ற எண்ணம் வந்ததுமே அந்தக்கதாபாத்திரம் செத்துவிடுகிறது. A blow on faith என்று மட்டும்தான் அதைச் சொல்லமுடியும். அதில் என்ன கலை இருக்கிறதென்று எனக்குப்புரிந்ததே இல்லை. நீங்கள் கிருஷ்ணனை அந்த மாயப்பூச்சுகளுடனேயே உள்ளே சென்று அதன் texture ல் உள்ள சிக்கல்களை ஆராய்கிறீர்கள். அவனுடைய முழுமையை இப்படித்தான் சொல்லமுடியும் என்று நினைக்கிறேன்

பாஸ்கரன்

அன்புள்ள கிருஷ்ணன்

கிருஷ்ணன் இந்திய பௌராணிக மரபு உருவாக்கி எடுத்த பெரும் மர்ம உருவகம். அந்த enigma வை எப்படி விளங்கிக்கொள்வது என்பதே சவால். அந்த மர்மத்தை அப்படியே தவிர்த்துவிட்டு அவனை சாமானியனாக ஆக்கிக்கொள்வதில் என்ன இருக்கிறது?

அந்த மர்மம் பல்வேறு குணச்சித்திரங்கள் நீண்ட வரலாற்றுப்போக்கில் தொடர்ந்து கலக்கப்பட்டதனால் உருவானது என்பார்கள். அந்தக் கலவை மிகப்பிரம்மாண்டமானது. நான் அதை ஆரம்பத்திலிருந்தே செய்யமுடியுமா என பார்க்கிறேன்

ஜெ