ஜராசந்தன் துரியோதனுடன் கரை இறங்குவது வேண்டுமென்றே செய்கிறானா அல்லது தற்செயல் நிகழ்வுதானா என்று சந்தேகம் வருகிறது. கர்ணனுடன் துரியோதனனின் கலத்திற்கு வருதல், அவனிடம் நட்பு கோரல், துறைமுக வரவேற்பின்போது அவன் இருப்பதை கப்பல் வடத்திலேறி வெளிக்காட்டிக்கொள்ளுதல் எல்லாம் அவனால் முன்னரே அவன் மனதில் வகுக்கப்பட்ட திட்டமென்றால், அது மிக மிகத் தந்திரமான செயல் என்று கருதுகிறேன். ஒருவேளை ஊழின் விளையாட்டாகவும் இருக்கலாம்.
ஜராசந்தனை சற்றும் எதிர்பாராமல் துரியோதனுடன் காண்பது பாண்டவரிடையே பெரும் ஐயத்தை உருவாக்கும் என்பது மிக எளிதாக யூகிக்கக்கூடியதே. இது எப்படியும் பாண்டவர் கௌரவர்களுக்கிடையே மனக்கசப்பையும் விலகலையும் உருவாக்கும் என அவன் அறிந்திருப்பான். கண்ணனின் ஆப்த நண்பர்களான பாண்டவர்கள் எக்காரணம் கொண்டும் ஜராசந்தனை ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள். அவனை வெறும் அரசு முறையில் மட்டுமே அவனை கையாள முயல்வார்கள். இப்போது நான்கு பாண்டவர்களும் சென்று வரவேற்பளித்தால் அது துரியோதனன்பொருட்டாக இருந்தாலும் அது ஜராசந்தனுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பாகவும் கருதப்படும் அல்லது ஜராசந்தனே அதை அப்படி என பரப்பிவிடுவான். இது யாதவர்களை கொதிப்படைய வைக்கும் பெருந்தவறென முடியும்.
இந்த விஷயத்தில் துரியோதனனுக்கு ஓரளவு உள்ளுணர்வு இருந்த போதிலும் மற்போரிலும் குடியிலும் அதை இழந்துவிடுகிறான். கர்ணனுக்கு அது உறைப்பதற்கு முன் எல்லாம் கை மீறிப்போய்விடுகிறது. கர்ணன் அரசியல் விஷயத்தில் அவ்வளவு கூருணர்வு இல்லாதவனாகவே தென்படுகிறான். பாண்டவர்கள், வாரணாவத எரிப்பு, காம்பில்யபோர் போன்றவற்றுக்கு பிறகு துரியோதனனின் ஒவ்வொரு செயலையும் எச்சரிக்கையாக பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்ட்வர்கள். அவர்கள் மனநிலையை துரியோதனன் புரிந்துகொள்ளவில்லை. தன்னைப்போலவே, பகை என்றால் முழுப்பகை, சமாதானம் என்றால் முழு நம்பிக்கையுடன் சமாதானம், என பாண்டவர்கள் இருப்பார்கள் என நினைத்துக்கொள்கிறான். ஆனால் அவர்கள் எதையும் ஐயத்துடன் பார்க்கும் மனநிலையில் இருக்கிறார்கள். குந்தியும் திரௌபதியும் அந்த ஐயத்தை மறைய விடாமல் பார்த்துக்கொண்டிருப்பார்கள். இத்தகைய நிலையில் தன் தந்தையிடம் பெற்றிருக்கும் துரியோதனனின் பெருந்தன்மை, மன்னித்து மறந்துவிடுதல் போன்ற குணங்களால் பாண்டவர் கௌரவர் இடையே விரிசல் அதிகமாகாமல் இதுவரை இருக்கிறது.
கணிகரும் சகுனியும் விரிசலை மீண்டும் தோற்றுவித்து பெரிதுபடுத்த முயன்று இதுவரை அது முடியாமல் இருக்கிறது. ஆனால் சகுனியால் முடியாத அந்த செயலை ஜராசந்தன், அவன் திட்டமிட்டோ, தற்செயலாகவோ, செய்ய ஆரம்பித்திருக்கிறான் என்றே நினைக்கிறேன். ஒருவேளை இவ்விஷயத்தில் சகுனிக்கும் ஜராசந்தனுக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமோ என்றும் தெரியவில்லை
தண்டபாணி துரைவேல்