Wednesday, February 17, 2016

மூவரின் உணர்வுகள்


. ஜராசந்தனின் கர்ணனின் மீதான அபிமானம் உண்மை. மேலும் அவன் பிளவாளுமை (split personality) உடையவன். கர்ணனிடம் தாயால் கைவிடப்பட்ட மலைச் சிறுவன் போன்ற ஒரு ஆளுமை, கிட்டத்தட்ட துரியனுக்கு நிகரான ஒரு ஆளுமை, காட்டும் அவன் துரியன் முன் அரசனாக, வஞ்சம் தீர்க்கும் மூர்க்கனாக ஒரு ஆளுமை காட்டுகிறான். இன்னொரு வகையில் அவன் ஒரு ஆடி போல். கர்ணனிடம் அவனைப் போலவே பிரதிபலிக்கும் அவன், அரசனாக, ஒரு மதிக்கப்படவேண்டிய எதிரியாக, கவனத்துடன் தன்னைக் கையாளும் துரியன் முன் அவன் ஸ்தூனகர்ணன் முன் பெண்மையை இழந்து குரோதத்துடன் திரும்பிய துரியனின் ஆளுமையை பிரதிபலிக்கிறான்.

உண்மையில் ஜராசந்தனின் வருகை ஒரு அபாரமான உத்தி. master stroke என்றே சொல்ல வேண்டும். சகுனியாலும், கணிகராலும் கிளர்த்த இயலாத வஞ்சத்தை, குரோதத்தை ஜராசந்தன் துரியனில் கிளர்த்தி விடுகிறான். உண்மையில் அணுக்கமாக இருப்பவர்கள் சொல்லும் உபதேசங்களை விட சம்பந்தமே இல்லாத ஒருவர் தரும் வார்த்தைகள் நம்முள் ஏற்படுத்தும் மாற்றம் போன்றதே இந்த நிகழ்வுகள். ஜராசந்தன் என்ன தவறுகள் செய்திருந்தாலும் பெண் இழிவு செய்யவே மாட்டான். அவன் செய்த தவறுகளைப் பட்டியலிட்டு அவன் வாயாலேயே அதற்கான நியாயங்களைக் கேட்கும் துரியன் அவன் செய்யத் தயங்கும் பெண் அவமானத்தைத் தயங்காமல் செய்யப்போகிறான். அதற்கான மூகாந்திரமாகவே இவ்வருகையை பார்க்கிறேன்.

அன்புடன்,
மகராஜன் அருணாச்சலம்