Tuesday, February 16, 2016

துரியோதனன் எனும் கொடும் விலங்கு....அன்புள்ள ஜெயமோகன்,

ஒரு நாள் எங்கள் 3 வயது மித்திரனை குழந்தைகள் காப்பகத்திலிருந்து கூப்பிட சென்றபோது அவனின் ஆசிரியை "Library Lion" என்ற குழந்தைகள் புத்தகத்தை என் கையில் திணித்தாள். என்  ஆள்மன படிமங்களில் ஒன்றை உருவி எடுத்து, சற்றே கலைத்து திருப்பி அடுக்கும் என்று அறியாமல் 10 குழந்தைகளுக்கு அதை படித்து காட்டினேன்.

ஒருநாள் ஒரு சிங்கம் வழி தவறி நூலகத்துள் நுழைந்துவிடுகிறது. அப்போது நூலகர் கதை சொல்லிகொண்டிருக்கிறார். சிங்கம் நூலகர் முன் படுத்து கதையை முழுதும் கேட்கிறது. கொஞ்சம் கொஞ்சமாய் குழந்தைகள் வந்து கூட உட்கார்ந்து கதைகள் கேட்கிறார்கள். கதை முடிவில் நெட்டி முறித்து சத்தமாய் கொட்டாவி விடுகிறது சிங்கம்.  நூலகம் அமைதியான இடம் சிங்கம் அமைதியா இருக்க வேண்டும் என்கிறார் நூலகர். சிங்கம் தினம் கதை நேரத்திருக்கு வந்து கதை கேட்க ஆரம்பித்தது. குழந்தைகள் அதன் மீது கையூன்றி அமர்ந்துகொண்டோ சாய்ந்துகொண்டோ காலை மேல் தூக்கி போட்டுகொண்டோ வாலில் விளையடிக்கொண்டோ கதை கேட்கிறார்கள்.

அன்றுமுதல் சிங்கம் தினம் நூலகம் வரும். வாலில் புத்தகங்களை தூசி தட்டும், குழந்தைகள் அதன் மேல் ஏறி உயரத்தில் இருக்கும் புத்தகங்களை எடுக்க முகுகை காட்டும். அவர்கள் மேலே படுத்து படிக்க தலையணையாய் கிடக்கும். நூலகர் அஞ்சல் தலைகளை அதன் நாக்கில் தடவி ஈரமாக்கி ஒட்டுவார். 

இப்படியான ஒரு நாளில் நூலகர் ஏனியிளிருந்து விழுந்து கிடப்பதை பார்க்கும் சிங்கம். அவர் அதனிடம், "போ, போய் உதவி நூலகரை அழைத்து வா" என்று சொல்வார். அதுவும் நாலு கால் பாய்ச்சலில் ஓட, உள்ளிருந்து "நூலகத்தில் ஓடக்கூடாது" என்று ஒரு கறாரான குரல் வரும். 

தன் வேளையில் மும்மரமாக இருந்த உதவி நூலகரோ இதை சட்டை செய்ய மாட்டார். கடித்து இழுத்து பார்க்கும், தள்ளிப்  பார்க்கும் ம்ஹ்ஹ்ஹ்ஹ்ம். திடீரென பெருங்குரலெடுத்து கர்ஜிக்கும். உதவி நூலகர் எழுந்து நூலகர் அறைக்கு ஓடுவார்...."இந்த சிங்கம் கத்திவிட்டது கத்திவிட்டது " என்று சொல்லிக்கொண்டே நுழைந்த அவர் காலுடைந்த்து கிடக்கும் நூலகரை பார்த்து நிலைமையை புரிந்துகொண்டு மருத்துவமனையில் அவரை சேர்ப்பார். ஆனால் அன்றிலிருந்து சிங்கம் நூலகத்திற்கு வராது. எல்லாரும், கறார் நூலகர் உட்பட, பெரும் சோகத்தில், ஏக்கத்தில் இருப்பார்கள். 

உதவி நூலகர் பல நாள் தேடி, ஒரு நாள் இரவில் கொட்டும் மழையில் சோகமாய் உட்கார்ந்திருந்த சிங்கத்தை கண்டுகொள்வார். அவர் அதனிடம் "இப்பொழுது நூலகத்தில் தேவையான பொழுது சத்தம் போடலாம்" என்ற புது விதி அமலுக்கு வந்திருப்பதை சொல்லிவிட்டு திரும்பி நடப்பார்...........

அன்று மாலை காரில் சொல்லும்போது மித்திரனிடம் இந்த கதையை பற்றி மீண்டும் பேச பேச என் மனதில் ஒரு மாற்றம் வந்ததை உணர முடிந்தது. சிங்கத்தை ஒரு கொடூரமான விலங்காக பார்க்காமல் தன்னளவில் நெறிகளுக்கு கட்டுப்பட்ட ஆத்மாவாக பார்க்க தொடங்கினேன். இப்படி அல்லவா நாம் குழந்தைகளுக்கு காட்டுயிர்களை அறிமுகப்படுத்த வேண்டும் என எண்ணிக்கொண்டேன்.

காட்டுயிர்களைப் பற்றிய எதிர்மறையான எண்ணம் இருக்கும் சமூகம் அதனை பேணி பாதுகாக்காது என்கிறார் தியோடர் பாஸ்கரன். "சத்தியமங்கலம் அருகே தோட்டத்தில் யானைகள் அட்டகாசம்" என்று தலைப்பு செய்தி வெளியிடும் பத்திரிக்கைளை நொந்துகொள்கிறார்.

துரியோதனனை பற்றிய பிம்பமும் இப்படிதான் மிக மிக எதிர்மறையானதாக இருக்கிறது. என்னிடமும்  என்னை சுற்றி இருப்பவர்களிடமும். அவனை மண்ணாசை கொண்டவனாகவும், கொடுங்கோலனாகவும், பாஞ்சாலியை அவமானபடுத்திய இழிவானவனாகவும், பாண்டவர்களை கண்டு பொறமை பட்டு மட்டுமே அந்த ஒரே ஒரு உணர்ச்சி கொண்டவனாக மட்டுமே என் சமூகம் எனக்கு அதை அறிமுகபடுத்தியது. கர்ணனை பற்றி சொல்லும்போது கூட, கர்ணனை தன் சுய லாபத்துக்குகாக மட்டுமே வளர்த்தவனாகவே துரியோதனனை வரித்து வைத்தது என் சுற்றம். கர்ணனின் பக்கத்திலிருந்து நட்பின் உச்சத்தையும், துரியோதனின் பக்கத்திலிருந்து சுயநலத்தையும் கயமையுமே காட்டியது பொது சமூகம். பீஷ்மர் கூற்று வாயிலாக, துரோணர் வாயிலாக இதை மீண்டும் மீண்டும் சொல்லியது நாட்டார் வழக்கு. ஒற்றைப்படையாக எதிர்மறையாக எழுந்து நிற்கிறது துரியோதனன் எனும் படிமம்.

இதன் உச்சகட்டம் என் தாத்தா சொல்லிய ஒரு கதை. துரியோதனனும் அவர் சகோதர்களும் சபிக்கப்பட்டவர்கள் என்றும் அவர்கள் தொட்டது எதுவும் விளங்காது எனவும் சொல்வார். ஒவ்வொருவரும் 100 கிண்ணங்களில் உணவு உண்பார்களாம். அவர்கள் செய்த பாவமானது ஒவ்வொரு முறை அவர்கைகள் உணவை அள்ளிய பின் மீதி சோற்றை புழுக்களாக மாற்றிவிடுமாம். அத்தனை பாவம் அவர்கள் விரல் வழி வழிந்த வண்ணம் இருக்குமாம்.

ஆரம்ப பள்ளி நாட்களில் கேட்ட ஆ வா இராஜகோபாலன்/அறிவொளி அவர்களின் வழக்காடு மன்றம் கர்ணனை தர்மனை விட பெரிய கொடையாளனாக நெஞ்சில் நிறுத்தியது. துரியோதனுக்காய் வாதிட யாருமில்லை.

உங்களின் வெய்யோன் வழியாக கர்ணனை விட நான் துரியோதனையே நோக்கி வருகிறேன் என்பதை நேற்று உணர்ந்துகொண்டேன். பானுமதியிடம் அவன் காட்டும் மரியாதை, அவளைத்தவிர இன்னொருத்தியை ஏற்க தயங்கும் அவன் மனது, நண்பனின் அரச கௌவுரவத்திறாக கலிங்க இளவரசியை மணக்க ஒத்துகொள்ளும் மனம், அதற்க்கு பின் துடிக்கும் மனது,  கர்ணனின் மேல் அவனுக்கு இருக்கும் மரியாதை, கண் கலங்க வைக்கும் ஈடுபாடு, அரசனுக்காக இசை கற்றுகொள்ளும் அவன் முயற்சி, கர்ணனை முன் நிறுத்தி போற்றும் அறம், கலிங்க நாட்டில் தொடர் வரும் அம்புகளை தன் மீது வாங்கி கர்ணனை பாதுகாக்கும் அவன் அன்பு என துரியோதணன் எனும் ஒரு மாமனிதனை படைத்து தந்த உங்களுக்கு நன்றிகள். 

கர்ணனின் புகழை விட அவனிடம் கௌரவ நூற்றுவரும், இளய 800 பெரும் கொண்ட அன்பு கௌரவர்களை என்னை வியக்க பெருமைகொள்ள வைக்கிறது. இத்தனயும் தாங்கி எப்படி வாழ்ந்த்தான் கர்ணன் என என்னால் என்ன  முடியவில்லை.

ஆயிரம் தலைமுறை தலைமுறையாக துரியோதனனுக்கு தந்துவிட்ட அவப்பெயருக்காக அவனிடம் மண்ணிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

அன்புடன்
கௌதமன்