Tuesday, February 9, 2016

இரவில் நதிப்பயணம் (வெய்யோன் - 48)

ஒரு நாளில்,  பகல் என்பது  நிகழ்வுகளின் தொகுப்பு. ஒளியின் காரனமாக அங்கு காண முடியாமல் நாம் எதையும் தவற விடுவதில்லை.  எல்லாம் கண்ணுக்கு தெரிந்து புரிந்துவிடுகின்றன. ஒரு பகலை உரைநடை என்று சொல்லாலாம் எனில் இரவு ஒரு கவிதை. அதில் எல்லாம் கண்ணுக்கு புலப்பட்டுவிடுவதில்லை. நம் கை விளக்கின் வெளிச்சத்தில் தெரிவதை மட்டுமே நாம் ஓரளவு காணமுடியும். 

 ஊன்றிப் பார்ப்பதன் மூலம் மேலும் சற்று அறிந்துகொள்ளலாம். முழுதுமாக பார்த்துவிடமுடியாது. எவ்வளவு பார்த்தாலும் இன்னும் பார்க்காதது என ஏதோ இருக்கும். ஆம் இரவு மர்மங்களை தன்னுள் புதைத்து வைத்திருப்பது. அதனால் அது தனக்கென கவர்ச்சியைக் கொண்டிருக்கிறது. இரவு இடத்திற்கேற்ப, காலத்திற்கேற்ப, மட்டுமல்லாமல், நம்முடைய மனநிலைக்கேற்ப உருக்களைக் கொள்கிறது. ஒருவரின் இரவு மற்றொருவரின் இரவைவிட பெரிதும் வேறுபடுகிறது.  ஒரே இடத்தில் ஒரே காலத்தில், காதலியுடன் இருக்கும் காதலனின் இரவும் அச்சத்தில் இருக்கும் சிறுவனின் இரவும் முற்றிலும் வேறுபட்டு விளங்குகின்றன. ஒரு நிலப்பரப்பில் நாம் பகலில் காண்பது வெறும் பாதித்தோற்றத்தைத்தான். இரவில் அதன் மறு பாதி தோற்றம் இருக்கிறது. எந்த சுற்றுலா தலமாக இருந்தாலும் நாம் பெரும்பாலும் பகல் பக்கத்தை மட்டும் கண்டு திரும்பிவிடுகிறோம்.  ஒரு மலராக இருந்தாலும், மரமாக இருந்தாலும், மலையாக இருந்தாலும்,   அனைத்துக்கும் இரவுக்கென இன்னொரு தோற்றம் இருக்கிறது. அந்தத் தோற்றம் கவித்துவமானது.   நம் உணர்வுகள்கூட இரவில் வேறு தோற்றம் கொள்கின்றன.
   

இப்படி இரவை பார்க்க, இரவை நேசிக்க, இரவை ரசிக்க, இரவினிடம்பாடம் படிக்க  ஆசான் இரவு நாவல் மூலம்  நமக்கு கற்பித்திருக்கிறார். இன்று வெண்முரசில் அவர் நம்மை இரவில் நதிப் பயணத்தில் செல்லும் அனுபவத்தை அளிக்கிறார். இரவின் நீர் கூட தனக்கென சுவை கொள்கிறது, இரவை தன்  ஐம்புலன்களாலும் கர்ணன் அறிகிறான். அவனோடு நாமும் அவ்விரவை அள்ளிப்பருகுகிறோம்.  மெலிதாக வீசும் மணம், தொலைவிலிருந்து கேட்கும் ஒலி, உடல் மேல் படும் குளிர்காற்று. ஒளிப்புள்ளிகளை மறைக்கும் நிழல்கள் போன்றவற்றின் மூலம் அந்த இரவில் காண்கிறோம்.  சிறு பறவைகள் ஒளிக்கட்டத்திற்கும் வரும்போது தோன்றி கடந்தவுடன் மறைந்துவிடுகின்றன. பளபளக்கும் கரிய நீரோட்டதில் துள்ளி மறைகின்றன மீன்கள். எந்தக் காட்சியும் நீடித்து இருப்பதில்லை. இரவின் காட்சிகள் கணத்திற்கு கணம் மாறுகின்றன.  வானத்தின் கருமையில் பூமியும் கரைந்து தானும் வானமென வடிவம் கொள்கிறது. பூமியின் விளக்குகள் சிறிய பெரிய விண்மீன்களாகவும் அருகாமை விளக்குகள் நிலவுகள் என ஆகின்றன.  

இரவின் ஓசைகள் ஏதோ இசையமைப்பாளரின் திட்டமிட்ட இசைக்கோர்வையென ஒன்றுக்கொன்று பொருத்தமாக அமைகின்றன. நிலப்பரப்பின் இரவைவிட நீர்ப்பரப்பில் இரவு இன்னும் தூய்மையானதாக தெரிகிறது.  நதியலைகள் அன்னையின் கைகள் தொட்டிலை ஆட்டுவதைப்போல படகினை அசைக்கிறது. அந்தப் படகே ஒரு தொட்டிலாக ஆகின்றது. அங்கே தூங்கும்  மனிதர்கள் மீண்டும் தம் குழந்தைமையை அடைகிறார்கள். தன்னை வெளிக்காட்டிக்கொள்வதில் காட்டும் எச்சரிக்கையுணர்வை அப்போது முழுக்க கைவிட்டிருக்கின்றனர். அங்கு நாம் அந்த இரவை கர்ணனோடு தனிமையில் விழித்து அனுபவித்துக்கொண்டிருக்கிறோம். இந்த இரவும் அதில் செல்லும்  நதிப்பயணமும் ஓர் பேரனுபவமாக இனிய மகிழ்வோடு மனதினில் பதிந்துபோகிறது.


தண்டபாணி துரைவேல்