Monday, April 16, 2018

அறிதலின் முறைகள் 2




ஜெ

நேற்றைய கடிதத்தின் தொடர்ச்சி

மூன்றாவதாக வரும் சிகண்டி பகுதி வழியாக அறிதலில் சந்தேகம் உருவாக்கும் சிக்கல், அறிவுக்குள் அதற்கு உள்ள இடம் பற்றி பேசப்படுகிறது. ஸ்கெப்டிசிசம் என்பது இந்துமரபில் ஒரு தத்துவநிலை இல்லை. அது அறியாமைநிலை. மறுப்பதற்காகப் பேசுவதென்பது அறிவை நிராகரிப்பதுதான். செயலை முழுமையாக அறிந்துசெயலாற்ற முடியாது. ஆனால் அதற்காகச்செயலாற்றாமலும் இருக்கமுடியாது. செயல் தன்னியல்பாக அறிதலாக ஆகவேண்டும். அதிலிருக்கும் பிரச்சினைகள் இங்கே பேசப்படுகின்றன. செயலை ஒட்டுமொத்தமாக பிரபஞ்சச்செயலுடன் இணைப்பதும் அதுதான் உண்மையான செயல் என்று தெரிந்துகொள்வதும்தான் செயலார்றுவதற்கான வழி. செயல்வழியாக வரும் அறிவு செயலை அறிதல் மட்டுமாகவே ஆக்கிவிடவேண்டும். அறிவின் ஆணவம் ஒரு வகையில் உதவியானது. ஆனால் அறியாமையின் ஆணவம் அல்லது சந்தேகத்தின் ஆணவம் முழுமையாக அழிக்கப்படவேண்டும்

அதன்பின்னர் விதுரரின் பகுதி வருகிறது. அங்கே காமகுரோதமோகம் எப்படி அறிவை அழிக்கிறது அல்லது திரிக்கிறது என்பது பேசப்படுகிறது. இரண்டு தளங்களில். அறிபவன் தன்னைமுன்வைத்து அறிவைபுனைந்துகொள்வதிலிருக்கும் அபாயம் முதலில் சொல்லப்படுகிறது. அதன்பிறகு உள்ளிருக்கும் காமகுரோதமோகங்களை அழிப்பதற்கான வழி. அதுக்கு சமானமான எதிர்பக்கத்தை உண்டுபண்ணிக்கொள்வது அல்ல. அந்த இரட்டைத்தன்மையை முழுமையாக இல்லாமலாக்குவதே அவற்றை ஜெயிப்பதற்கான வழி. அறிவு இரண்டின்மைகொண்டதாக இருக்கும். அது ஒரு கொள்கையாக இருக்காது. அறிவை சாதகம் செய்யாவிட்டால் அறிவால் பயனில்லை.

இந்த அளவுடன் எபிஸ்டமாலஜிக்கல் கேள்விகளுக்கான இமைக்கணத்தின் பதில்கள் முடிவடைகின்ரன என நினைக்கிறேன். இவர்றை கீதையின் வரிகளுடன் கலந்து விரிவாக்கம் செய்து அளித்திருக்கிறது இமைக்கணம். கீதையிலிருந்து சமகாலத் தத்துவம்நோக்கிய விரிவு என்று சொல்லலாம்

சுவாமி