Tuesday, April 10, 2018

நைமிஷாரண்யம்




அன்பு ஜெ  ,
    

இமைக்கணத்தில் நிகழும் பல்நிகழ்வுகளின் தொடர் பிரமிக்கவைக்கிறது .'நைமிசாரண்யம்' பெயர் காரணமும் புதிய கோணத்தறிமுகமாகவே உணர்ந்தேன்.
       

  நைமிசாரண்ய தேவராஜனை ,
"
வம்புலாங் கூந்தல் மனைவியைத் துறந்து
     
பிறர்பொருள் தாரமிவற்றை
நம்பினாரிறந்தால் நமன்றமர் பற்றி
        
எற்றிவைத்து எரியெழுகின்ற
செம்பினாலியன்ற பாவையை பாவீ
     
தழுவென மொழிவதற்கஞ்சி
நம்பனே வந்துன் திருவடியடைந்தேன்
          
நைமிசாரண்யத்து ளெந்தாய் ."


அதாவது  தனது மனையாளை விடுத்து பிறன் மனைவியையும் , பிறரது பொருளையும் விரும்புவர் ,இறந்துபட்டால் , அப்பாவம் செய்தமைக்காக செம்பினால் செய்யப்பட்ட ஒரு பாவையை தீ வைத்துக் கொளுத்தி இதனை கட்டித் தழுவு என்று யமனுலகில் தண்டனை வழங்குவர்.இது போன்ற கொடுமைகள் செய்வதற்கஞ்சி நம்பினோரைக் கைவிடாத நின் திருவடியையடைந்துய்ந்தேன் என்கிறார் திருமங்கையாழ்வார்.
 

திவ்யதேச மகாத்யமித்தில்  இருவேறு பெயர் காரணங்கள் காணக்கிடக்கின்றன.சத்திரவேள்விக்காக இடம் வேண்டி தவமுனிவர்கள் பிரம்மனையனுக , அவரும் தருப்பைப் புல்லையெடுத்து வளையமாக்கி கீழே உருட்டி , அது விழும் இடத்தைத் தவமேற்கும் இடமாக அறிவித்தாரென்றும் , அது பாரததேசத்தின் அலகநந்தா நதி தீரத்தில் உள்ள இவ்விடத்தில் விழுந்து , நேமி _ சக்கரம் சார்ந்த ஆரண்யமானதால் நைமிசாரண்யமாயிற்று என்று உள்ளது.
   

மேலும் தீர்க்க ரோமர் என்ற மகரிஷியின் தலைமையில் பிற முனிவர்களும் பிரம்மனிடம் , சத்திரவேள்விக்கு இடம் வேண்ட , அவரும்அவர்களை விமானத்தொன்றில் ஏற்றி இப்பூவுலகை வலம் செய்ய சொல்லி , அப்போது விமானத்தின் நேமிச்சக்கரம் தானாக கழன்று விழும் இடத்தைத் தேர்ந்தெடுக்கச் சொல்ல , அது இவ்விடமாகவே அமைய இப்பெயர் ஏற்பட்டது என்றும் உள்ளது.
      

 எது எப்படியோ காலமிடத்தையும் கடக்காமலிருக்க தன் நுனியைத் தானே கவ்விக்கொண்டு தவமியற்றும் தியானிகன் என்னும் புழுவில் ஆரம்பித்து , காலனும் கேள்வி உசாவ , காடு ரூபமாக மெய்மைக் காட்டும் கிருஷ்ணனை  , கர்ணனாகவும் பீஷ்மராகவும் அணுகும் இடமும் , மெய்மைக்கான கேள்விகளும் ,விடைகளும் ,தங்களின் எழுத்தோவியத்தில் இமயச்சாரலாக இருப்பினும் கூருகிராக இருக்கிறது எம்போன்றோருக்கு.
                    
அன்புடன் ,
                              

செல்வி அழகானந்தன்.
அன்புடன்,
செல்வி அழகானந்தன்
கடலூர்.