Monday, April 23, 2018

இமைக்கணப் பயணம்.



அன்பு ஜெ ,
    

மெய்யறிவிற்கு தேடலாக ,வழியாக இமைக்கணக்காடு அமைந்திருப்பது வாசகர் அறிவதே.அதுவும் இன்றைய காலக்கட்டத்தின் நிகழ்வுகள் பல ,மனச்சோர்வையும் , உளச்சிக்கலையுமே பெரிதும் தரக்கூடியதாய் இருக்கின்றன.
                 

ஒருவன் எவ்வளவு தான் உலகியலறிவு பெற்றவனாயினும் , practical life என்பது மாறுபாடு உடையதே.தெரிந்த விஷயங்களும் ,அனுபவிக்கப் படும்போது வேறொரு நிலையையே அடைகின்றது என்றே நினைக்கிறேன். "புரிதல்" என்பது மானுடத்தின் அடிப்படை கொடையாக ,பிரம்மத்தால் வழங்கப்பட்டது என்றே ஏற்கிறேன்.
         

அதுவும் தங்களுடைய பதிவில் குறிப்பிட்டுள்ளது போல , தட்டும் கையும் ,திறக்கும் கதவென மெய்மை ஒருவனுக்கு அமையுமென்றால் , அது நல்லூழே!
      

பெரும் சவாலான ஒரு விஷயம் ஒன்றை , வாசல்வரைச் சென்று பார்க்கும் நிலையொன்று ஏற்பட்டது. அதற்கென ஒரு சிறு பயணம் மேற்கொண்டு ,பேசியும் , ஐயப்பட்டும் , ஆரம்பித்ததே தவறென்றும் பல நினைவுகளினூடே அதைச்சென்றடைந்தோம்.
               

அக்கணத்திலிருந்தே அதிலிருந்து மீள ஆரம்பித்தோம் சிற்சில புரிதலினூடே. அதன் எதிர்திசைப் பயணம் , எங்களைக் குழப்பி திகைப்படையச் செய்தது என்றே சொல்ல வேண்டும். ஆனால் சொல்லொன்னா விடையைக் கண்டைந்துப் போன்ற மனநிலையை அடைந்தது எனக்கு வியப்பையே ஏற்படுத்தியது.
             

நினைத்ததை அடைந்து சந்தோஷிப்பது சாமான்யர்களும் அடையக்கூடியதே , ஆனால் எதிர்வினைகளின் மூலம் , அதுவும் செயலன்றி , ஒரு வகையான மாயா அனுபவத்தால் பெறுவதென்பது , நடைமுறைச் சாத்தியமற்ற அந்நிலை வெ.மு.வாசகர்களுக்கு கூடுபவையாகவே தோன்றியது.வீடு வந்ததும் இதையே என் துணைவருடன் பகிர்ந்துக்கொண்டேன். இதுபோல் தான் பெரிய பெரிய கதாபாத்திரங்கள் எல்லாம் கண்ணனையடைந்து , அவர்களுக்கு பதிலினை கணப்பொழுதில் மாறும் ,இமைக்கணக்காட்டிலடைந்தாரென்றேன்.எவ்வளவு பேசினும் வாசகர்களின் வாழ்வியலில் பெரும் பகுதி தங்களுடையது என்பது  மறுக்கவொண்ணாதாகிறது.


அன்புடன்,
செல்வி அழகானந்தன்
கடலூர்.