Sunday, April 15, 2018

இமைக்கணத்தின் வடிவம்



அன்புள்ள ஜெயமோகன்,

ஆரம்பத்தில் இந்நாவல் முழுக்க கீதையைப் பற்றியது என எண்ணினேன். ஆனால் உங்களின் பதிலுக்குப் பிறகே அதிலுள்ள சிக்கல் புரிந்தது. முழு கீதையையும் இந்நாவலில் அடக்க வேண்டுமென்றால், அதன் உள்ளடக்கதிற்கேற்ப கதாப்பாத்திரங்களை வெட்டி வடிவமைக்க வேண்டி வரும். அவர்களின் இயல்பான சிக்கல்கள் மறைந்து நாவல் ஒருவித செயற்கைத்தன்மை கொண்டுவிடும் அபாயம் உள்ளது. 

இப்போது இது வரை வந்த பகுதிகளை தொகுத்துப் பார்க்கையில் இது போரை விரும்பாதவர்களின் அதேசமயம் அதில் முக்கியப் பங்கு ஆற்றவேண்டியவர்களின் கதையாக வளர்ந்து வருகிறது. இந்நாவல் முடிகையில் அனைவரின் சஞ்சலங்களும் அகன்று விடும். இரு தரப்பிலும். ஏனெனில் இது யுகம் கண்ட மிகப்பெரும் போர். இதில் தயக்கங்களுக்கு இடமில்லை. களத்தின் உள்ளேயும் வெளியேயும். ஆதலால் தான் நேரடியாக களத்தில் நின்று போர் புரியாத விதுரரும் வருகிறார்.

ஆகவேதான் நாவல் முழுவதும் அனைவரையும் செயலாற்றுக செயலாற்றுக என யாதவன் அறிவுறுத்துகிறார். ஆனால் அறிவுறுத்துபவர் எதையும் ஆற்றப்போவதில்லை.

அன்புடன்,
பாலாஜி பிருத்விராஜ்