Friday, April 20, 2018

தொல்வியாசனின் தர்சனம்.



அன்பு ஜெ ,
   

தொல்வியாசனின் காவிய விழியால் நைமிஷாரண்ய கண்ணனான தேவராஜனை தங்கள் நாவலின் புனைவால் காணும்படியான பாக்கியத்தால் பரவசத்துடன் அனுபவிக்கும் நினைவினூடே , சில இனிமையான அதிர்வுகளைத் தாண்டவும் செய்கின்றது. காவியத்தின் வழியே கண்ணனை அடைந்தவர் ,பிரத்யட்சமாக முன்பெவரும் அடையாத பேரின்பத்தை அடைந்தார் என்பது ஆச்சரியப்பட தக்கதன்று.அவனது அழகு படுத்தும் பாட்டை இயல்பாக விளக்கி நகர பார்க்கின்றீர். பரப்பிரம்மமே ஆசிரியரானரை பணிந்து சொல் கேட்பது அழகானது. இதனைத்தான் சாத்தனாரும் , பெரியவர்களைப் பார்த்து வியத்தலும் , சிறியோரை இகழாமை மட்டுமே கவிஞனனின் மாட்சியென்று கூறாமல் ,பெரியவுருவினரின் சிறுமையையும் , சிறுஉருவினரின் பெருமையையும் அறி என்கிறாரோ ,
பாவம் இதனையறியாது மனிதக்குலம் தான் தருக்கி அழிகிறது.ஆனால் கண்ணனோ கவிஞனின் கண்ணீரும் ,புன்னகையும் ,விழைவைமே அவியேற்று , ஓங்கி எழுந்து ஆகுதி கொள்ளும் தீ , தேவரை மறைத்துக் காட்டுவது போல , அவரது தீச்சொல்லே நற்சொல்லாக உருமாறி நிறைவுறப் போவதை .,அதன் மூலம் பல்வேறு நிலையில் காட்சிக் கொடுத்தவனே , ஊழிக் காலத்து ஏகாதச ருத்ரனாக பேருறுக் கொள்ளப் போவதாகக் கூறும் காட்சிகள் அபாரம்.
       

இக்காட்டில் கண்ணனைப் பார்க்க முன் வந்தவர்கள் அடையாத பேருவகையை இவர் அடைவதைப் பார்த்து , இன்பக்காட்சிகளாகவே நகரும் இப்பதிவு என்று நினைப்பவற்களைப் பொட்டில் அறைவதுப் போல் நகர்கிறது அடுத்த காட்சிகள். ஆண் பறவை சொல்லுவது போல் , 

“ஆயிரத்தில் பல்லாயிரத்தில் ஒருவன் மீறியாகவேண்டும் என்பதே நெறிகளின் இயல்பு. இல்லையேல் அவை உறைந்து அவ்வுயிர்க்குலத்தையே சிறையிடக்கூடும் என்று முன்னோர் உரைத்ததுண்டு” என்று மறுமொழி சொன்னான்.
              

என்பது பட்சியின் வாதமெனில் ,நெறி மீறலினாலே தீ ஊழும் நல்லூழாகி மாறி , வியாசரின் தொல் மனப் பரப்பே தன் புனைவியூடே மறைந்து காவியமாக விரியும் நிலையை அடைந்தது எனக் கொள்ளலாமா புரியவில்லை.


                       அன்புடன்


                               செல்வி அழகானந்தன்.