Sunday, April 22, 2018

இருபறவைகள்





அன்புள்ள ஜெ,

மரக்கிளையில் இரு பறவைகள் அமர்ந்திருந்தன, ஒரு பறவை பழம்தின்கிறது. இன்னொன்று பார்த்திருக்கிறதுஎன்பது முண்டக உபநிடதத்தின் ஒரு மந்திரம். அதை நீங்கள் நீலம் நாவலில் மரக்கிளையில் இரு கிளிகள் அமர்ந்துள்ளன என குறிப்பிட்டிருக்கிறீர்கள். இது பிழையானது என்று ஒரு பேச்சு இங்கே நண்பர்கள் நடுவே ஓடியது. உங்கள் விளக்கத்தை எதிர்பார்க்கிறேன்.

அர்விந்த்

அன்புள்ள அர்விந்த்


அந்தப்புகழ்பெற்ற வரி த்வ சுபர்ணா மந்திரம் என்ற பேரில் அத்வைத மரபில் பிரபலமானது. உபநிஷத் போன்ற தொன்மையான நூல்களை ஆங்கிலத்தில் சொல்லுக்குச் சொல் மொழியாக்கம் செய்யும்போது பல இடர்கள் உள்ளன. அது மொழியின் தொடக்கக் காலகட்டம். ஆகவே வர்ணனைகளையே பெயர்களாக அமைப்பது அன்றைய வழக்கம். காலப்போக்கிலேயே அவை இல்லாமலாயின. 

உதாரணமாக சங்க இலக்கியத்தில்புல்வாய்என்றால் மான் என்றுதான் பொருள். புல்லிருக்கும் வாய் என்று அல்ல. மாடு என்றோ எருமை என்றோ அல்ல. mouth with grass  அதை மொழியாக்கம் செய்யமுடியாது. மேகரூப என்றால் யானைதான். 


பர்ண என்றால் பச்சை இலை என்று பொருள். [பர்ணசாலை நினைவுக்கு வரலாம்] சுபர்ணா என்றால் சரியான அர்த்தம் பச்சை
 இலைகள் கொண்டஎன்று. கொண்டுகூட்டிப் பொருள்கொண்டால்அழகிய சிறகுகள் கொண்டஎன்று எடுக்கலாம். ஆங்கில மொழியாக்கங்களில் சுபர்ணா என்பது அழகியசிறகுகள் கொண்ட இருபறவைகள் என்றே செய்யப்பட்டிருக்கும். அனைத்து தத்துவப்பள்ளிகளுக்கும் தரப்படுத்தப்பட்ட , பொதுவான அர்த்தமே மொழியாக்கத்தில் அளிக்கப்படவேண்டும். ஆகவே அது சரியானதே. ஆனாலும் அதை முழுக்க நிராகரித்துப்பேசும் சம்ஸ்கிருத அறிஞர்கள் உள்ளனர்.


இந்திய காவிய- வேதாந்த மரபுகளில் இந்த மந்திரம் நெடுங்காலமாக வெவ்வேறு கோணங்களில் பேசப்பட்டு வருகிறது. சுபர்ணா என்றால் கிளியைக் குறிக்கும் சொல்லாகவே கவிதைகளில் பொருள்கொள்ளப்படும். பச்சை இலைகளைக்கொண்ட பறவை, இலைப்பச்சை நிறம் கொண்ட பறவை என்னும் பொருளில். அப்பொருளையே வேதாந்தப் பள்ளிகள் எடுத்துக்கொள்கின்றன.  


ஆனால் சுபர்ண என்பது பஞ்சவர்ணக்கிளியைக் குறிப்பது என்று சில அத்வைத வேதாந்த பள்ளிகளில் சொல்லப்படுகிறது. அந்த ஐந்து நிறங்களும் எவை என்றெல்லாம் கூட விளக்கங்கள் உள்ளன. இது ஒரு கவியுருவகம். அதன் அர்த்தங்களை கற்பனைமூலம் தியானம் மூலம் விரிவாக்கம் செய்வதற்குரியது. அதற்கான சொற்கோள் மரபுகளும் உள்ளன. அவர்களுக்கிடையே பூசல்களும் உண்டு. 


ஆர்வமிருந்தால் ஏதேனும் வேதாந்த மரபை ஆசிரியர்களிடமிருந்து நீங்கள்  கற்கலாம். வெறும்விவாதங்களால் பயனில்லை.



ஜெ