Tuesday, April 10, 2018

நீர்க்கோலம்


அன்புள்ள ஜெ,

நீர்க்கோலம் நாவலின் செம்பதிப்பு உங்கள் கையெழுத்துடன் இன்று கூரியரில் வந்தது. நன்றி.  

ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்கங்களில், அட்டையுடன் சேர்த்து 22 வண்ண ஓவியங்கள் கொண்ட அழகிய பதிப்பு. அட்டை ஓவியத்தில் கதையின் காலத்தைச்சுட்டும் குறிப்புக்கள் எதுவும் இல்லாமல் எந்தக் காலகட்டத்திலும் பொருத்திப் பார்த்துக்கொள்ளும்படி உள்ளது. ஓவியங்கள் 34ஆம் அத்தியாயத்துடன் நிறைவு பெற்றுவிட்டது சற்று ஏமாற்றமே.

நாவல் தொடங்கும்முன் உள்ள ஒளி வடிவனைப்பற்றிய பாயிரம், நீர்க்கோலத்தை அணுகுவதற்கான ஒரு பயிற்சி என்றே நினைக்கிறேன். இனி அந்திச் செம்மையின் பொன்னொளியைக் காணும்போதெல்லாம் பிருகத்பலத்வஜன் நினைவில் எழுவார்.

நாவலைத் தளத்தில் படித்து முடித்தபின், எப்போது நளனைப் பற்றி நினைத்தாலும்  உத்ஃபுதரிடம் தனக்கு அரசர்களுக்கான அடுதொழில் தெரியுமென்பதற்கு சான்று காட்டும் இடம் நினைவில் எழுகிறது:
//பாகுகன் அருகிருந்த சட்டுவத்தின் முனையால் அங்கிருந்த அரிமாவில் சற்று எடுத்து அடுப்புத்தழலுக்குள் காட்டி வெளியே எடுத்து அவரிடம் நீட்டினான். உத்ஃபுதர் முகர்ந்து புன்னகைத்து “ஆம்” என்றார். “நீர் நிஷாத அடுதொழில் மரபைச் சேர்ந்தவர். நளமாமன்னரை கண்டிருக்கிறீரா?” பாகுகன் புன்னகைத்து “அறிவேன்” என்றான். உத்ஃபுதர் அந்த அரிசிமாவை அருகிருந்தவரிடம் காட்டி “ஒருகணம் பிந்தியிருந்தால் கரிந்திருக்கும். முந்தியிருந்தால் மாவு. இப்போது வறுமணம் எழும் பொன்பொரிவு” என்றார். “அறிக, அடுதொழில் என்பது அனலை வழிபடுவதே. இது எரி எழுந்த ஆலயம் என்கின்றன நூல்கள்.” திரும்பி பாகுகனிடம் “வருக, தங்கள் கைபடுமென்றால் இங்கு தண்ணீரும் சுவை கொள்ளும்” என்றார்.//

நளனின் தன்னம்பிக்கை, முன் தயாரிப்பெதுவுமில்லாத உடனடிச் செயல்பாடு, அதன் உச்சகட்ட நேர்த்தி, அதை அடையாளம் கண்டு ஆமோதிக்கும்   உத்ஃபுதர் என்று நினைக்கும்தோறும் எனக்கு இது புதிய செய்திகளையும் உத்வேகத்தையும் கொடுக்கிறது.

செம்பதிப்பு கையில் கிடைத்ததும் இந்தப் பகுதியையே முதலில் தேடி எடுத்துப் படித்தேன். நாவலின் மீள்வாசிப்பைத் தொடங்க வேண்டும். நன்றி.

அன்புடன்
S பாலகிருஷ்ணன், சென்னை.