Tuesday, April 10, 2018

மனத்தின் பலம்



வணக்கம் சார் ,

நலமா? 

இமைக்கணம் – 12 படித்தவுடன் சில நிமிடங்கள் ஒன்றும் புரியவில்லை. நாம் அறிவியலை வைத்து (அதுவும் மேற்குலக அறிவியல் முறைமைகள்) எல்லாவற்றையும் புரிந்து கொள்ள முயல்கிறோம். மனதின் பலம் என்பது எந்த அளவிற்கு பெரியது என்று அளவிடமுடியாது என்று நினைக்கிறேன்.


என் ஆசிரியர் ஒரு கதை சொல்லுவார் , ஐந்து வீரக்கலை ஆசிரியர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது ஒருவர் முதலில் என் சண்டை முறை இப்போது மாறிவிட்டது , எதிரி அடித்தால் முதல் அடியை தடுத்தவுடன் ஒரு அடியில் அவனை வீழ்த்திவிடுவேன். சண்டை இரு வினாடிகளில் முடிந்துவிடும் என்று கூறுவார் . இதை கேட்ட அடுத்த ஆசிரியர் இரண்டு வினாடி எதற்கு தேவை , நான் தடையும் அடியும் ஒரே கணத்தில் செய்து விடுவேன், தடுப்பதையும் அடிப்பதையும் தனித்தனியே செய்வது நேர விரையும் என்று கூறுவார்  , மூன்றாவது ஆசிரியர்  சற்று யோசித்து விட்டு எதிரியின் அடியை எதற்கு நமது சக்தியை விரையம் செய்து தடுக்கவேண்டும் . எதிரியின் அடியில் இருந்து விலகி அடிப்பேன் என்று கூற நான்காவது ஆசிரியர் வியப்புடன் சண்டை என்று வந்த பிறகு எதிரி அடிக்கும் வரை ஏன் காத்திருக்க வேண்டும். அவன் நம்மை அடிக்க அசையும் கணத்திலேயே நான் அடித்து விடுவேன் என்று கூற , ஐந்தாவது ஆசிரியர் அமைதியாக இருக்க அனைவரும் அவரை நோக்க அவர் சிரிப்புடன் என் எதிரில் இருப்பவர் என்னை தாக்க மனதில் முடிவு செய்து விட்டாலே நான் அவரை தாக்கி விடுவேன் என்று கூறுவார் . 

எங்களுக்கு அந்த ஐந்தாவது ஆசிரியரின் முறை மட்டும் புரியாது. அது எப்படி முடியும் என்று மாணவர்களுக்குள் பேசி கொள்வோம். ஆனால் சண்டை போட்டிகளில் பங்கேற்கும் போது ஒரு குறிப்பிட்ட அனுபவத்திற்க்கு பிறகு , சண்டை முடிந்து வந்த பிறகு நினைப்பேன் , எதிரியின் எண்ணமும் உடலில் ஏற்பட்ட முதல் அசைவின் முந்தைய வினாடியையும்  உணர்ந்து இருப்பேன், ஆனால் ஓன்றும் செய்ந்திருக்கமாட்டேன் , பிறகு தான் புரிந்தது அதை உணரும் அளவிற்கு தான் என் பயிற்சி உள்ளது, அதை உணர்ந்த வினாடியில் பாய்ந்து அடிக்க இன்னும் பயிற்சி தேவை என்று.

இமைக்கணம் – 12   அத்தியாயத்தை படித்த போது மீண்டும் அதை நினைத்து கொண்டேன் . புற பயிற்சி என்பது ஒரு ஆரம்ப நிலை என்று. 


உண்மையில் சார் வெண்முரசு படிக்கும் போது ஒவ்வொரு நாளும் ஏதாவது புதிதாக கற்று கொள்கிறேன். வீர கலை பற்றி படிக்கும் போது எதாவது எழுதியே ஆக வேண்டிய நிலைக்கு தள்ள படுகிறேன். 

 நான் அவனுடைய ஆசிரியன். எந்த திர்பார்ப்புமின்றி வாங்கும் கலத்தின் வல்லமையை மட்டுமே நோக்கி படைக்கலக்கல்வியை அளித்தேன். திறன்கொண்ட தோளர் எவருக்கும் அதை அளிக்காமலிருந்ததும் இல்லை என்றார் பலராமர் - எழுதழல்  60

இதை படித்தபோது உண்மையில் உணர்ச்சி வசப்பட்டு விட்டேன். என் ஆசிரியரிடம் பயிலும் போது பல மாதங்கள் பயிற்சி கட்டணம் கொடுக்காமல் இருந்துள்ளேன். என் ஆசிரியர் வேறு வேலை எதுவும் செய்யவில்லை. தன் வாழ்விற்கு இதில் வரும் வருமானத்தை நம்பி தான் இருந்தார். அனாலும்  என்னை ஒரு வார்த்தையும் கேட்டதில்லை. பயிற்சியில் ஒரு இம்மி அளவும் குறைந்ததில்லை. நான் ஆறு மணி வகுப்பிற்கு 5.30 க்கு வருவதை கவனித்தால் அவரும் வந்து பயிற்சி கொடுக்க ஆரம்பித்து விடுவார். உண்மையில் சார் மனதில் உருவம் இல்லாமல் , இருப்பதே தெரியாமல் கொட்டி கிடைக்கும் எவ்வளோவோ நினைவுகளுக்கு தெளிவான வார்த்தை உருவம் கொடுக்கிறீர்கள் 

வெண்முரசில் வரும்,

“விளையாடுபவன் வெற்றிகொள்வது ஏனென்றால் அப்போது அவன் முற்றிலும் அச்செயலில் இருக்கிறான் என்பதனால்தான் - நீர்க்கோலம்  29

எந்த ஆசிரியர் அளிப்பதையும் மாணவர்கள் அவ்வண்ணமே பெற்றுக்கொள்வதில்லை. ஆசிரியர் விதைகளை அளிக்க முடியும், முளைப்பது அவரவர் ஈரம் - நீர்க்கோலம்  28

இது போன்ற வாக்கியங்களை பயிச்சி வகுப்புகளிலும் தினசரி வாழ்க்கையிலும் பொன் மொழிகளாகவே பயன்படுத்தலாம். நன்றிகள் பல.

ரஜினிகாந்த்.