Saturday, April 21, 2018

நிழலுரு



அன்புநிறை ஜெ,

நிழலாடிக்கொண்டிருந்த முற்றத்தில் நிழலுருவாக நின்றிருந்த வியாசர்  என்று தொடங்கிய பகுதியில் அந்நிழலுருவின் நிழலாகத், தான் யாத்த கதைத் தலைவன் இளைய யாதவன் முன் நிற்பது வெண்முரசின் நூறு கதைத்தலைவர்களை ஆயிரமாயிரம் கதை மாந்தர்களை புனைந்த ஆசிரியனின் உருவும் அல்லவா! 

விதுரரின் இமைக்கணப் பயணம் 
குளம்புகள் ஓசையிட தலைக்குமேல் கடந்துசென்ற குதிரையோடு நிறைவடைகிறது. அடுத்த பகுதியில், யாருடையது என்றறிய இயலாத சொல்லாக 'அது புரவி' எனும் நினைவோடும் விதுரராய் அடைந்த ஆழ்ந்த தனிமை உணர்வோடும் நிற்கிறார் யமன். ஒவ்வொரு உருவாக எடுத்து அவர் அறிந்து அகலும் தருணங்களை இணைத்துக் கோர்க்கும் நினைவுச் சரடு.  காட்சிகளின் தொடர்பு மிக அழகாக ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு நகர்கிறது.

மேலெழுபவர்களைப் பொசுக்கும் அனல் சத்யகனின் விழி ஒளியை அவியெனப் பெற்றுக்கொள்கிறது, அபந்தரதமஸிடம் மைந்தர்களை; ஸ்ரவ்யை, ஹ்ருத்யை, பிரதிபை, ஸ்மிருதி, வாக் - இசை, உணர்வு, அறிவு, நினைவு மற்றும் சொல் என்னும் ஐந்து மனைவியரில் ஈன்ற மைந்தர்களை. இசையின் கருணை கவியென இப்பிறவியில் தொடர்கிறது.

ஒளியை விழைந்த சத்யகன் இருளை அடைகிறான். வேத ஒலியின் நுண்மையை விழைந்த அபந்தரதமஸ் இசை முதலாகிய மனைவியரையும் மைந்தரையும் இழக்கிறார்.   மேலெழ விழைபவனிடம் அவி கொள்ளும் தெய்வம் வியாசனின் விதையில் முளைத்த பெருவனத்தையே  அவியெனக் கோருகிறது. சொல்லை விழைந்தவனுக்கு சொல்லின்மை காத்திருக்குமோ. 

மிக்க அன்புடன்,
சுபா