Wednesday, February 10, 2016

இனப்பகை (வெய்யொன் 50)


 

  பன்னகர் மற்றும் உரகர்கள் இடையேயான தொடரும் பகையை இன்று வெண்முரசு சொல்லி செல்கிறது. ஒருவரையொருவர் விரோதித்து வாழும் இரு இனங்கள், சில சிறுவர்களின் தவறுகளில் பெருத்த சண்டையாக வளர்வதும் அவை தலைமுறை தலைமுறை தொடர்ந்து வருவதையும் காண்கிறோம்.  இது இந்தக் காலத்திலும் இத்தகைய இனப்பகைகள் தொடர்ந்து  வருவதை காண்கிறோம்.
   

 தனிப்பட்ட மனிதரகளின் பகைகள் ஒருவிதம் என்றால் இ
னங்களுக்கிடையேயான பகை மற்றொரு விதம்.  இரு மனிதர்களில்ன் பகையில்  ஒருவருக்கொருவர் தீங்கு செய்துகொண்டு இருப்பார்கள். அப்பகையின் தீங்கு அவர்களுடன் முடிந்துவிடும்.   தனிப்பட்ட இருவர் பகை கொள்வதை சமூகம் ஆதரிக்காது.  இரு மனிதர்களின் பகையை இன்னொருவரைன  நடுவில் வைத்து  பேசித்தீர்க்க முடியும்.


   ஆனால் இரு இனங்களுக்கிடையேயான பகை மிகவும் ஆபத்தானது.  அந்த இரு இனங்களும் காலத்தின் ஓட்டத்தில் தாமே மறந்தாலன்றி அந்தப் பகை எளிதில் முடிவுக்கு வருவதில்லை. சாதிகளுக்கிடையே ஊர்களுக்கிடையே , மதங்களுக்கிடையே, நாடுகளுக்கிடையே என எழும் பகைகளால் பெரும் அழிவுகளை உலகம் சந்தித்து வருகிறது. மனிதன் தேடித்தேடிச் சேர்ந்த தன் செல்வங்களை, உருவாக்கிய கலைப் படைப்புகளை, சிறுக சிறுகக் கட்டிய தேசத்தை, பேசிப் பேசி உருவாக்கிய சமாதானத்தை, பண்பட்டு பண்பட்டு அடைந்த அமைதியை இந்த பகைகள் குலைத்து விடுகின்றன. ஒரு முறை எழுந்த பகை அழியாமல் இருந்துகொண்டே இருக்கிறது.  இரு இனங்களும் வெறிகொண்ட மிருகங்களைப்போல மோதத் தலைப்படுகின்றன. அந்த இரு இனங்களும் தம் மனிதத்தை தொலைத்து விடுகின்றன. 

தனிப்பட்ட முறையில் தன் இனத்தாருக்கு மிக நல்லவனாக இருக்கும் ஒருவன் எதிர் இனத்தவருக்கு  எந்த மனச்சங்கடமும் இல்லாமல் பெருந்தீங்கு இழைப்பவனாக மாறுகின்றான். எதிர் இனத்தவர் தவறு செய்திருக்கிறார்கள் என்ற வதந்தியை எளிதில் நம்புகிறான் அதை ஆவலுடன் பெரிதுபடுத்தி மேலும் பரப்புகிறான். தன் இனத்தவரிடம் அளவுக்கதிகமான அச்சத்தினை பரப்புகிறான். இத்தகையோர் எதிர் இனத்த்தினரில் யாரோ ஒரு சிலர் செய்யும் தவறுகளை ஒட்டுமொத்த இனத்தினர் குற்றமாக காண்கிறார்கள்.   தம் இனத்தவர் எதிர் இனத்தவருக்கு செய்யும் தவறுகளை காணாது இருந்துவிடுகின்றனர், அல்லது அதற்கும் எதிர் தரப்பினர்மேல்  பழி போடுகின்றனர். ஒரு இனத்தில் ஒருசிலர் தான் இப்படி என இல்லாமல் அனைவரும் இப்படி என மாறிவிடுகின்றனர். 
   
  
   ஆகவே எந்த காரணத்தை முன்னிட்டும் ஒருவன் இன்னொரு இனத்தின் மேல் தன் இனத்தாருக்கு பகையை மூட்டுவானென்றால் அவன் மனித குலத்திற்கே பெரும் பாவம் செய்தவனாகிறான்.  அத்தகையவர்களை சமூகக் கயவர்கள் என்றுதான்  நாம் சொல்ல வேண்டியுள்ளது. அவர்கள் தன் இனத்துக்கே முதலில் தீங்கு இழைக்கின்றார்கள். சிரமப்பட்டு வளத்தின் பாதையில் முன்னேறிக்கொண்டிருக்கும் மக்களை திசை திருப்பி இந்த பகை என்ற போர்க்களத்திற்கு பலியாடுகளாக அனுப்புகிறார்கள். இவர்கள் எந்தத் தவறை எதிர் இனத்தினர் செய்கிறார்கள் என சொல்கின்றனரோ அதற்கு பதிலாக அதே தவறை தன் இனத்தவரை செய்யச் சொல்கிறார்கள். எதிர் இனத்தவரை எதிர்க்க அறமற்ற வழியே அறம் என வாதிடுகின்றனர்.
 

  இப்படி இரு இனங்கள் பகையில் இருக்கும்போது அந்தப் பகையை  முடிவுக்கு கொண்டு வர காந்தி எப்படி முயல்வார்  என சிந்திக்கிறேன். எந்த வகையிலும் எதிர் இனத்தவர் சிலர் செய்யும் தவறுகளை அந்த இனத்தவரின் தவறாக சொல்லக்கூடாது. எந்த முன் நிபந்தனையும் இல்லாமல் தன் இனத்தவர் செய்த சிறு தவறுகளுக்கும்  மன்னிப்பு கேட்டுக்கொள்ள வேண்டும். இனப்பகை காரணமாக தவறு செய்த தன் இனத்தவருக்கு அனைவரும் அறிய அதற்கான தண்டனையை கொடுக்க வேண்டும். எதிர் இனத்தவன் ஒருவன் தனக்கு துன்பம் செய்தால் அவனை தனிப்பட்ட முறையில் தண்டனை பெற வழி செய்ய வேண்டுமே தவிர பதிலுக்கு அவ்வினத்தைச் சார்ந்த வேறு ஒருவனுக்கு தீங்கு இழைக்கக்கூடாது. அனைத்து இனத்திலும் சமூக விரோதிகள் இருப்பார்கள். அவர்களின் செயலுக்கு அந்தந்த இனத்தினரை பொறுப்பாக்கி குற்றம் சாட்டக்கூடாது. பதிலுக்கு பதில் என பழிகொள்ள எழுந்திடும் பெரும் கலவரங்களில் முதலில் நிறுத்திக்கொள்பவர்கள் நாமாக இருக்க வேண்டும்.  இப்படி ஏதோ ஒரு இனம் முயற்சி மேற்கொள்ளாமல் ஒர் இனப்பகை முடிவுக்கு வந்ததில்லை.

    மேற்கூறிய முறை  எதிர் இனத்தவருக்கு சாதகமானதாக சொல்வது போல் தெரியும். உண்மையில் இம்முறைகள் அவர்களைவிட நமக்குத்தான் அதிகம் பயனளிக்கக்கூடியது. இதைத்தவிர்த்து பதிலுக்கு பதில் வீர வசனம் பேசிக்கொண்டு தன் இனத்தவர்களையும் எதிர் இனத்தவர்களின் உணர்ச்சியைத் தூண்டி விளையாடுதல்  எந்த வகையிலும் தம் இனத்திற்கோ ஒட்டு மொத்த மனித சமுதாயத்திற்கோ பயன் தராததோடு மட்டுமன்றி பெரும் தீங்கு செய்வதாகவும் அமையும். வன்முறையின் மூலம் ஒரு இனப்பகை முடித்துவைக்கப்பட முடியாது என்பது வரலாறு நமக்கு சொல்லிக்கொண்டிருக்கும் பாடமாகும்.

தண்டபாணி துரைவேல்