Sunday, February 28, 2016

சாமி சப்பரத்தை தொட்டுக்கொண்டு பின் ஓடும் சிறுவன்.




    கிராமங்களில் ஊர் திருவிழாவில் முக்கிய நிகழ்வு இரவு சுவாமி உலா வருதல். சுவாமியின் அலங்காரம் மூன்று நான்கு மணி நேரம் நடக்கும். அதைப்போல் சுவாமி வரும் சப்பரத்திற்கான அலங்காரமும் பல மணிநேரம் நடக்கும். அதை சிறுவர்கள் சலிக்காமல் வேடிக்கைப்  பார்த்துக்கொண்டிருப்போம்.  ஒரு வழியாக நன்கு இருட்டிய பிறகு சுவாமி சப்பரத்தில் ஏற்றப்பட்டு ஊர்வலம் வர ஆரம்பிக்கும். சிறுவர்கள் நாங்கள் அந்த சப்பரத்தை ஏதாவது ஒரு பாகத்தை தொட்டபடி கூடவே வருவோம். 

 அச்சமயம் பெரியவர்கள் சிலர் எங்களை தொந்தரவாக கருதி விரட்ட முயல்வார்கள். அதை நாங்கள் சட்டைசெய்யாமல் ஒரு வித பெருமிதத்தோடு உடன் வருவோம். வீட்டினர் தேடிப்பிடித்து திட்டி வீட்டுக்கு அழைத்துச் செல்லும் வரை இப்படி சப்பரத்தை தொட்டுப் பின் தொடர்தல் நடக்கும். சப்பரத்தை இப்படி தொட்டுக்கொண்டு செல்வதில் ஒரு மகிழ்வும் தன்னிறைவும் தோன்றும். நாங்கள் உருப்படியாக எதுவும் செய்யாவிட்டாலும்கூட அந்த சுவாமி ஊர்வலத்தில் ஏதோ ஒரு பங்காற்றிய நிறைவு இருக்கும். 
   இன்று தமிழ் இலக்கிய உலகில் வெண்முரசு என்கிற ஒரு மிகப்பெரிய சுவாமி சப்பரம் உலா வருகிறது. அந்த பிரம்மாண்டத்தைப்பார்த்து அஞ்சி ஒதுங்கி போவோர்கள்  ஒருவகையினர். இதெல்லாம் ஊருக்கு அவசியமா என  அவர்கள் வெளியில் வீம்பு பேசி உள்ளெ நடுங்கி கதவடைத்து வீட்டினுள் பதைப்தைப்புடன் அஞ்சி இருக்கின்றனர். சிலர் அந்த சப்பரத்தின் அழகை, அது உலா வரும் கம்பீரத்தை, இமை அசையாமல் ஆர்வத்துடன் பார்த்துக் களிக்கின்றனர். அந்த நிகழ்வை எஞ்சிய வாழ்நாளெல்லாம் மறக்காத வண்னம் மனதில் நிறுத்திக்கொள்கிறார்கள்.    அந்தப் பெரு நிகழ்வில் நான் முடிந்தவரை இணைந்து இருக்க வேண்டும் என விழைகிறேன்.  என்னால் என்ன செய்யக்கூடும்?

 வெண்முரசில் நான் அறிந்தவற்றில், அடைந்த அனுபவத்தில், இருந்து  என்னால் எழுத முடிந்த அளவு எழுதிவருகிறேன்.  யாரும் அறியாத ஒன்றை   நான் எடுத்துரைப்பதாகவோ அல்லது எனக்கு புரிந்த ஒன்றை மற்றவருக்கு விளக்குவதற்காகவோ நான் எழுதுவதில்லை. உண்மையில் நான் எனக்காக  எழுதிக்கொள்வதே முதல் நோக்கம். 

 இதற்கு முன்  நான் நான்கு வரி கூட பொது வெளியில் எழுதியதோ பேசியதோ   கிடையாது. நான் வெண்முரசில் அறிந்ததை எழுதுவதில் முடிந்த அளவு நேர்த்தியும் கடமைப்பாடும் இருக்க வேண்டும் என்பதற்காக குழுமத்தில் பதிவிடுகிறேன்.   இப்படி எழுதுவதன் மூலம்  அந்த சுவாமி சப்பரத்தை தொட்டுக்கொண்டே பின்தொடரும் சிறுவன் என என்னை உணர்கிறேன். இதனால் அந்தச் சப்பரத்திற்கு என்னால் ஆவது ஒன்றும் இல்லை என எனக்குத் தெரியும்.    அந்த  இறை திருவுருவை தாங்கிச் செல்லும் பெரும் சப்பரத்தை தொட்டபடி பின்தொடரும் சிறுவனாக இருக்கும்  பேரின்பத்தைத்தவிர வேறென்ன வேண்டும் எனக்கு.

தண்டபாணி துரைவேல்