Friday, February 19, 2016

அவரவர்கள் தங்களுக்கென காணும் நியாயங்கள்(வெய்யோன் -54)



   இன்று ஜராசந்தன் தன் செயல்கள் ஒவ்வொன்றுக்கும் அவன் தன் நியாய வழியின்படி காரணம் கூறுகிறான். அவன் சொல்வதை மறுத்துப்பேசமுடியாமல் திகைத்து நிற்கிறார்கள் கர்ணனும்  துரியோதனனும். அவன் தன் சகோதரர்களை கழுவிலேற்றியவன். அந்தணர்களை ஊர் விலக்கம் செய்தவன். இளைய யாதவனை தன் பெரும்பகையெனக் கொண்டவன். மொத்த யாதவர்களையும் பழிவாங்கும் எண்ணத்தில் இருப்பவன்.  தன் ஆட்சியை எதிர்ப்பவர் எவரையும் கொல்லத் தயங்காதவன். இந்தச் செயல்கள் அனைத்தையும் அவன் எந்த வித குற்ற உணர்வும், மனத் தயக்கமும் இன்றி செய்து வருபவன். அவன் அதற்கான நியாயங்களாக தன் குடிபிறப்பின் காரணமாக மற்றவர் அவனை தாழ்த்த முற்பட்டதைக் கூறுகிறான். யாதவர் தன் மகள்களை  அவமதித்ததைக் கூறுகிறான். வெற்றி பெறுவது சத்ரியனின் நோக்கம் அதற்காக அவன் எதைச் செய்தாலும் சரியென்கிறான். அதே நேரத்தில் மற்றவ்ர்களின் நியாய தர்மங்களை ஏற்க மறுக்கிறான்.

      எந்த ஒரு மனிதனாவது திட்டமிட்டு செய்யும் ஒரு செயலை நான் தவறு  செய்கிறேன் என்ற எண்ணத்தோடு செய்கிறானா?  இல்லை என்றுதான் நினைக்கிறேன். உலகின்  பெருங்குற்றம் புரிந்த எவரும் நான் தவறு செய்கிறேன் என்ற எண்ணத்தோடு செய்யவில்லை. அவர்கள் அதற்குரிய நியாயங்களை கற்பித்துகொண்டு அதன்படி தான் நேர்மையாக நடப்பதாக கூறுகிறார்கள். தேய்வழக்காக இருந்தாலும் ஹிட்லர் ஒரு முக்கிய உதாரணம் ஆகும். அவன் செய்த அத்தனை பெருங்குற்றத்தையும் அவன் அகம் தான் செய்வது சரியென என எண்ணி செய்திருக்கிறான். அவன் சொன்ன நியாயங்களை அவன் நாட்டு மக்கள் பெரும்பாலானோர்  ஏற்றுக்கொண்டிருக்கின்றனர். அவர்கள் அத்தனை பேரும் தான் செய்வது ஒரு சரியான செயல் என்ற எண்ணத்தில்தான் செய்கிறார்கள்.  சமீபத்தில் தீண்டாமைக்கு ஆதரவாக ஒரு பண்டிதர் பேசும் காணொளியைக்க் கண்டேன்.   அதைப் பார்க்கும்போது அந்த அபத்தத்தைக்கண்டு எனக்கு கோபம் கொப்பளித்துக்கொண்டு வந்தது. ஆனால் அவர் எதோ காரணங்களை அறிவியல் உண்மைகளைப்போல் விளக்கிக்கொண்டிருந்தார். அதை அவர் உளமாற நம்பவும் செய்கிறார்.   ஒரு தீவிரவாதியை எடுத்துக்கொள்வோம். தன் உயிரை பணயம் வைத்து அப்பாவி மனிதர்களின் மேல் வன்முறைசெயல்களை மேற்கொள்கின்றனர். அத்தீவிரவாதிகள் யாரும் சுயநலமிகள் இல்லை. ஒரு போலிஸ் காவலரை விட அவர்கள்  பொது நலத்தில்  பற்று வைத்தவர்கள். மிக நேர்மையானவர்கள்.  அவர்களுக்கென்று ஒரு நியாயங்களை கற்பித்துக்கொண்டு அதன் வழியில் நடக்கிறார்கள். 
   அப்படியென்றால் உலகில் அனைவர் செய்திருக்கும்  குற்றங்களும் அவரவரின் நியாயங்களின்படி சரியென்றாகிறது.    ஒரு புலியின் நியாய விதிகள் மானுக்கு அநியாயமாக தெரிகிறது. ஒரு மனிதனின் நியாய விதிகள் புலிக்கு  அநியாயமாக தெரிகிறது.    மனிதர்களுக்கிடையிலான நியாய தர்மங்கள், அவர்கள் இருக்கும் இடத்திற்கேற்பவும் அவர்கள் பிறந்த இனத்தின் பண்பாட்டிற்கு ஏற்பவும், இயற்கை சூழலுக்கேற்பவும் மாறுபடுகிறது. இதில் மதம், கொள்கை காரணமாக வெவ்வேறு   நியாய தர்மங்கள் இருக்கின்றன. இவை ஒன்றுக்கொன்று மாறுபடும்போது சிக்கல்கள் தோன்றி பெரும் பூசல்களுக்கு வழிவகுக்கின்றன.  இப்படி இரு குல தர்மங்கள் முரண்படும்போது எது சரியென எவர் சொல்வது?  அப்படி சரியெனக் கொண்டாலும் எப்படி எல்லோரும் ஏற்கும்படி செய்வது? 
   
 மொத்த மகாபாரதமே இப்படி பல்வேறு மனிதர்கள் தமக்கென கொள்ளும் நியாயங்கள் முரண்படுவதால் வரும் சிக்கல்கள் ஆகும். ஒவ்வொருவரும் வாழ்வில் ஏற்படும் அவமதிப்புகள், அதன்மூலம் கொள்ளும் வஞ்சம் அதற்காக உருவாகும் புது  புது நியாயங்கள் என சிக்கல்கள் ஆழமாகிக்கொண்டு போகின்றன. இன்று ஜராசந்தன்  தன் நியாயங்களை வெளிப்படுத்துகிறான். இனி அவனை ஒரு கெட்டவன் என்று சட்டென்று கடந்து போக முடியாது. அவன் செய்கைகளை மதிப்பிடும்போது அவன் நியாயங்களை கணக்கில் கொள்ள வேண்டும். வெண்முரசில் எந்தப் பாத்திரத்திற்கும் கறுப்பு வெள்ளை என வண்ணமிட முடியாத வண்ணம் நுண்மைப்படுத்தப் பட்டுக்கொண்டே வருகின்றன.  மகாபாரதம் வெண்முரசின் வழி விண்ணுரு கொள்வதை உணர்கிறேன். 
தண்டபாணி துரைவேல்