இனிய ஜெயம்,
இத்தனை
 வண்ண பேதம் கொண்ட வாழ்வின் தருணங்கள் இதனை குறுகிய காலத்தில்  இதற்க்கு 
முன் என்னைத் தீண்டியதில்லை.  மருத்துவமனையில்  அந்த பிறவி அந்தகனைப் 
பார்த்தேன்.கும்பகோண வாசி.  அரசு உதவி பெற்று அரசு அலுவலகம் ஒன்றின் முன் 
நகல்கள் எடுக்கும், தொலைபேசி மையம் ஒன்றினை அவன் மனைவி உதவியுடன் 
நடத்துகிறான்.அவன் மனைவி குறைப் பிரசவத்தில் ஆண் மகவு ஒன்றினை 
பெற்றிருந்தாள். இன்னும் அவனது குழந்தையை அவன் ஏந்திப் பார்க்கவில்லை. 
அவனது கிராமத்து அப்பாவி அம்மா மட்டும் அவனுடன் இருந்தாள். மிகுந்த 
தத்தளிப்பில் இருந்தார்கள். நான் உள்ளே சென்று குழந்தை குறித்த விபரங்களை 
,அவனது மகனையும் மனைவியும் எப்போது அவன் பார்க்க முடியும் போன்ற விபரங்களை 
கேட்டு வந்து சொன்னேன். பிறகு அவனை அவ்வப்போது பார்க்க நேர்ந்து, ஓர் இரவு 
அவனுடன் தங்க நேர்ந்தது.  அவனது பெயர் ரவிக் குமார். ப்ரைலி முறையில் சில 
வகுப்புகள் படித்திருக்கிறான். ஆச்சர்யமாக கட்டற்ற சிநேகம் கொண்டவனாக 
இருந்தான். [இத்தனை உயிர் ஓட்டம் கொண்ட உள்ளங்கைகள் இதற்க்கு முன் என்னைப் 
பற்றியதில்லை] . விழி இன்மையால் மட்டுமே கிடைக்கக் கூடிய தடை இன்மை கொண்ட 
ஆற்றல் அவனுடையது. நிறைய பேசிக் கொண்டிருந்தோம். எம் புள்ளைக்கு கண்ணு 
நல்லா இருக்குமாம்  என்ற அவனது முதல் உவகை துவங்கி என்னென்னவோ பேசிக் 
கொண்டிருந்தோம்.
அவன் சிரித்தபடி சொன்னான் '' 
பொதுவாக நீங்கள் பேசும் பல விஷயங்கள் எனக்கு புரியவே புரியாது. சிறிய பந்து
 ஒன்றினை தந்து இதை சிறிய உருண்டை என்பீர்கள். அதே பந்து ஒன்றினை பெரிதாக 
தந்து இதை பெரிய உருண்டை என்பீர்கள். எனக்கு இந்த இரண்டுக்கும் எந்த 
பேதமும் தெரியாது.உருண்டை சதுரம் எல்லாம் என் விரல்கள் அறியும் தொடு 
உணர்ச்சி மட்டுமே. என் தொடு உணர்ச்சி வழியே எனக்கு என்ன தெரியுமோ அது 
மட்டுமே என் உலகம். அது போக ஒலி. . ஒலி கூட பலசமயம் என்னை தடுமாற 
வைத்துவிடும்.ஆனால் வாசனை என்னை இது வரை வழி தவற வைத்ததே இல்லை.  பேசிப் 
பேசி அவனது காம வாழ்வு நோக்கி சென்றது உரையாடல். என்ன மாதிரியே என் காமமும்
 குருடு. நீன்ங்க பேசுறது எப்படி எனக்கு புரியாதோ. அப்டி நான் சொல்றதும் 
உங்களுக்குப் புரியாது.என் உள்ளங்க்கைக்கு முலை தலைகாணி முனை இரண்டும் 
ஒன்றுதான்.   நல்ல வேளை தலைகானிக்கு வேற வாசன.   அனைத்துக்கும் மேல் அவன் 
சொல்லிய ஒன்று மிகுந்த துணுக்குறலை அளித்தது. '' இதுவும் உங்களுக்கு 
புரியாது இருந்தாலும் சொல்றேன். நான் திருமணத்தக்கு முன்பு சுயஇன்பம் 
அனுபவித்ததில்லை.  ஒரு முறை பொண்டாட்டி வாசனை. அவ்வளவு துல்ல்லியம். 
பக்கத்துல்ல தடவிப் பார்த்தேன் அவ இல்ல,  ஆனா வாசனை அவ பக்கத்துல இருந்தா 
எப்படி வருமோ அப்படி வருது. அவ என்ன கூப்பிடும் பொது வாற அதே வாசன. 
கல்யாணத்துக்கு அப்புறமாதான் முதல் முதலா  சுய இன்பம் அனுபவிச்சேன்''
என்ன
 சொல்ல? தீர்க்கதமஸ் முதல் திருதா வரை அனைவரும் ஒரு வரிசையில் வந்து நின்று
 விட்டார்கள்.  திருதாவுக்கு எல்லாம் உண்டு ஆனால் உண்மையான உண்மை என்ன விழி
 அற்றவனுக்கு எதுவும் இல்லை என்பதுதானே?
“ஆனால்
 நான் எதையும் பார்க்கவில்லை. நான் பார்க்காதவை எவையும் என்னுடையவை அல்ல. 
பார்வையற்றவனுக்கு ஏதுமில்லை என்பது தெய்வங்களின் ஆணை.”
திருதாவின்
 இயலாமை என்பது இந்த தெய்வங்கள் இட்ட ஆணைதானே.  திருதாவின் வேறு வடிவம்தான்
 ப்ருகத்காயர். திருதாவால் தொட மட்டுமே முடியும் பார்க்க முடியாது, 
ப்ருகத்காயரால் பார்க்க மட்டுமே முடியும் தொட முடியாது. 
திருதா
 தீக்கதமஸ் இருவர் காமமும் கோபமும்  பாசமும்  அதன் தூய வடிவான மிருக 
நிலையில் மட்டுமே  வெளிப் படுகிறது. விரல்களால் தடவி விழிகளின் வடிவை 
அறியலாம். பார்வையை அறிய இயலாது. இதுதான் திருதாவின் புத்திர பாசம். 
இனிய
 ஜெயம்,  இந்தரப்பிரஸ்த அரண்மைக்குள் சிவதர் கர்ணனை நீங்கும் இன்றைய 
அத்யாயம் வரை வெய்யோனின் ஒவ்வொரு அத்யாயமும் எதோ ஒரு புள்ளியில் மிகுந்த 
துயர் அளிக்கும் ஒன்றாகவே இருக்கிறது. குறிப்பாக இளையகௌரவர்கள்  கூச்சல் 
குழப்பம் கும்மாளம் அனைத்தும் அனைத்தும் கொலைப் படைக் கலங்கள் முன்பு 
நிறையப் போகிறது. அனைத்தையும் கேட்டுக் கொண்டு இருக்கப் போகிறார் திருதா.
தீர்க்க தமசின் அத்யாயங்கள் கொஞ்சநாள் வெண் முரசு வாசிப்பதையே நிறுத்தி விடலாமா என எண்ண வைத்துவிட்ட துயர்.
இவற்றுக்கு
 இடையே  திருதாவின் தொடுகையால் நான் மிக மிக உவகை அடைந்த இடங்கள் இரண்டு. 
ஒன்று திருதா தனது இருபதாவது வயதில் தனது தாயை வருடி அறியும் தருணம். 
அடுத்து தற்போது துச்சளையை அவள் வளர்ந்துவிட்டாள் என்பதை வருடி அறியும் 
சித்திரம்.
திருதா
 தாயை வருடி அறிக்கையில், குயவன் கை களிமண் என ஒரு உவமை வருகிறது. கலம் 
வனையும் குயவன் விரல் தீண்டாமல்  ஒரு துளி மண் எஞ்சுமா என்ன? மகளை இப்போது 
வருடி அறியும் திருதா தகப்பன், இசையால் கணின்தவன். அவன் விரல்கள் யாழின் 
தந்திகளை மீட்டி அறியும் விரல்கள் போல வருடுகிறது.
சுஜாதா
 கதை ஒன்றினில் ஒரு தருணம் வரும். ஒரு தகப்பன் ஐந்து வயதில் விட்டு சென்ற 
மகளை பதினைந்து வருடம் கழித்து சந்திப்பான். அவன் விழிகள் இயல்பாக அவளது 
முன்னழகைக் கண்டே அவளது வளர்ச்சியை அறிவான்.  இங்கே அதனினும் கூடிய 
அழுத்தமான தருணம். இங்கே தாயும் மகளும் திருதா வசமிருந்து எதை அடைகிறார்களோ
  அதை எந்த ஆண்மகனும் திருவிடமிருந்து அடையவில்லை என்று மட்டும் உறுதியாக 
சொல்லமுடியும்.
டிஸ்சார்ஜ்
 ஆகிச் சென்றிருந்த ரவியை நேற்று மருத்துவமனை குழந்தைகள் பிரிவு வாசலில் 
வைத்து பார்த்தேன். அவன் மனைவி இயற்க்கை உபாதைக்கு சென்றிருந்தாள். அவனும் 
அவனது அம்மாவும் நடைபாதை ஓர திண்டில் குத்த வைத்து அமர்ந்திருந்தார்கள். 
ரவி துண்டால் பொதிந்து நெஞ்சோடு அணைத்துப் பிடித்திருந்த பொதிக்குள் அவனது 
உயிர்சித்துளி. 
அம்மாவசம்
 என்ன அதுக்குள்ளே என்றேன் . அவள் அழுதபடி '' தம்பி எவ்வளவோ சொல்லிச்சு 
நான்தான் அப்டி என்ன ஆகிடும், பாப்பா வந்து மூணு நாள் ஆகுதேன்னு 
,குளிப்பாட்டினேன். முடிச்சு நெத்தில கொஞ்சம் வசம்பு தேச்சேன் . 
அப்போத்திலருந்து குழந்தைக்கு காய்ச்சல்.''  அப்போதுதான் அந்த ஒலியைக் 
கேட்டேன். குழந்தையின் நெஞ்சுக் கூட்டில் இருந்து கர் கர் கர் என ஒலி 
நின்றிருக்கும் என் காது வரை எட்டியது.  சட்டென ரவி உடைந்து ஏந்திய 
குழந்தையை நெஞ்சோடு அணைத்து ஓநாய் போல ஊளை இட்டு அழுதான்.  ''தம்பி தம்பி''
 என சமாதனம் செய்ய வந்த அவன் அம்மாவை அவன் அறைந்த ஒலியை என் முதுக்குத் 
தண்டால் கேட்டேன்.
கடலூர் சீனு

