Thursday, February 25, 2016

கொல்லும் சிரிப்பு




கிண்டலாக ஆரம்பித்து, சிரிக்க வைத்தே அனைவரையும் நாடகத்தோடு ஒன்றிணைத்து இறுதியில் நாகர்களை அழித்ததும் இந்நகரை கட்டியதும் தெய்வச்செயல் என அனைவரும் நம்பிவிடும்படியான வகையில் இந்த நாடகம் அமைக்கப்பட்டுள்ளது. சென்ற அத்தியாயங்களில் கர்ணன் வாயிலாக நாம் நாகர்களின்மீது கொண்ட பரிதாபமும் நியாயமென தோன்றிய அவர்கள் வஞ்சமும் மாறி அவர்கள் விதி இப்படித்தான் என ஆறுதல் கொள்ளுமளவிற்கு மாறிவிட்டது. இது அந்த அரங்குசொல்லி மூலம் பாண்டவர்கள் அடையப்போகும் வெற்றி.  அவர்கள் கண்ணனை நாராயணனின் அவதாரம் என யாதவர்கள் சொல்வதாக மேடையில் கிண்டலாக சொன்னாலும் உண்மையில் அதை நிறுவத்தொடங்கிவிட்டார்கள். சுரங்க வழியில் கர்ணன் காணும் நரகாசுர வதம் ஒரு உதாரணம்( இவர் நம் தீபாவளி புகழ் நரகாசுரன் தானே )

நாகர்களை அழித்து இதைகட்டியவன் பார்த்தன். முதுநாகினி ஒருவள் காந்தாரி பேறு காலத்தில் வந்து நாகர்களை அழிக்கப்போகிறவனிடமிருந்து தங்களை காப்பவன் துரியன் என அறிவிப்பாள். அவள் குறிப்பிடுவது இந்த காண்டவ வன அழிப்பையா என ஒரு ஐயம் இருந்த்து. இப்போது நாகர்களுக்குள் இருக்கும் உட்குலங்கள் மனித குலத்திற்கு சற்றும் சளைத்ததில்லை என்பதை அறிந்தபோது, இன்னும் பல வரலாறுகள் வெளிப்படக்கூடும் என தோன்றுகிறது. இதற்கடுத்துத்தான் காண்டீபத்தில் வரும் பார்த்தன் உலூபியை மணம் செய்து கொள்கிறான் என்பதை பொருத்தி பார்க்கையில் வியப்பளிக்கிறது..

காளிப்பிரசாத்