Friday, February 12, 2016

காவல் நாகம்



கர்ணனின் பின்னால் நிற்கும் அரச நாகம் அவன் கரு நிகழ்ந்த நாளில் இருந்து தொடர்ந்து வரும் ஒன்று. உருவமாக, மழைப்பாடலில் அவனைக் கருவழிக்க வரும் ஒரு முதிய மருத்துவச்சியைக் கொத்திக் கொல்லும். உண்மையில் குந்தியின் தோழி அனகை அந்த மருத்துவச்சியை அழைக்கச் சென்ற போதிலிருந்து கரவு வழியாக தொடர்ந்து வந்து கொண்டிருக்கும். அந்த அரச நாகத்தைப் பார்த்த பின்னர் தான் குந்தி அந்த கருவை சுமக்கத் தீர்மானிப்பாள். என்றும் அவனுக்குக் காவலாக அந்த நாகம் தொடர்ந்து வரும் என்று அவள் உணர்ந்து கொள்வாள்.

இதே நாகத்தை வண்ணக்கடலில் கர்ணனின் தாய் ராதையும் பார்ப்பாள். ஒவ்வொரு முறை அவன் தனியாக வீடணையும் போதும் அந்த நாகம் திரும்பிச் செல்கிறதா எனப் பார்ப்பது அவள் வழக்கம்.

கர்ணன் வளர வளர அந்த நாகம் அருவமாக அவனுள் ஒளிகிறது. என்றும் அவனைக் காக்க அந்த நாகம் அவனுடன் இருந்து கொண்டே இருக்கிறது. துரியன் வந்த பிறகு அந்த நாகத்திற்கு வேலை இல்லை. எனவே அடங்கியிருந்தது. அவன் தனியனாக அங்க நாட்டிற்குச் செல்கையில் அவன் துணையாக அது மீண்டும் வருகிறது. எப்போதெல்லாம் துரியன் அருகில் இல்லாமல் இருக்கிறானோ அப்போதெல்லாம் அந்த நாகம் அவன் பின் பத்தி விரித்துக் காவல் இருக்கிறது. 

குறியீட்டு ரீதியாகப் பார்த்தால் அந்த மாநாகம் அவன் வஞ்சத்தின் விளைவு. அவ்வஞ்சம் அவன் பார்த்திவப் பரமாணுவாக குந்தியின் கருவில் நுழைந்த அன்று, நான் என்று அறிந்த அன்று, அவனை கருவழிக்க அவள் முடிவு செய்த அன்று அவனுள் நுழைந்த ஒன்று. அவன் வளர வளர அதுவும் மேலும் மேலும் வளர்கிறது. அவன் அதன் இருப்பைத் தவிர்க்கிறான். மிக எளிதாக தன் நஞ்சை ஏற்றுக் கொள்ளும் படி அந்த நாகம் அவனை வேண்டுகிறது. அவன் அதனிடம் இருந்தும் விலகி ஓடுகிறான். இன்று உரக மாதா - திரியை அந்த நாகத்தையே காண்கிறாள். அந்த வஞ்சத்தையே மானசாதேவியின் விழிகளும் அறிகின்றன. மீண்டும் அதைத் தவிர்த்து விலகி ஓடுகிறான். ஆயினும் வஞ்சத்தின் ஒரு துளி தன்னுள் உள்ளது என்பதை அறிந்து கொள்கிறான். அந்தத் துளியை ஒரு அஸ்திரமாக்கி நாகாஸ்திரம் செய்யவும் அவனால் முடியும். அதை இத்தனை நாள் தவிர்த்து வருகிறான். அவன் அத்தவிப்பில் இருந்து விடுபட்டு அந்த நாகாஸ்திரத்தைச் செய்யத் தேவையான நிகழ்வுகளுக்கான பகடைக் களம் அங்கே இந்திர பிரஸ்தத்தில் ஒருங்கி விட்டது. பத்தாயிரம் தானவர்களில் ஏதோ ஒரு தெய்வம் அவனுள் இருந்த வஞ்சத்தை விருட்சமாக்கக் காத்திருக்கிறது.
அருணாச்சலம்