Saturday, February 20, 2016

சண்டையில் கிழிந்து போகும் ஆடை.(வெய்யொன் -55)



 இந்த மற்போரில் துரியோதனனின் ஆடை ஒன்று கிழிந்து போனதைக்  கண்டீர்களா?    ஒரு வெளிக்கிரகவாசி பூமிக்கு வருவாரென்றால். உடன் அவர் மனிதர்களை மற்ற விலங்குகளிடமிருந்து வேறுபடுத்தி அறிந்து கொள்வது மனிதர்களின் ஆடைகள் வழியாகத்தான் அல்லவா? ஆடைகள் நம்மை தூசு வெப்பம் குளிர் போன்றவற்றிலிருந்து நம்மை காக்கின்றன. ஆடைகள் இன்றி நாம் வாழ முடியாது. ஏதாவது ஒரு வித ஆடையை அணியாமல் நாம் சமூகத்தில் இருக்க முடியாது. மற்றவர்களிடம் தன்னை மதிப்பாக காட்டிக்கொள்வதற்கு தகுந்த ஆடைகளை, அவை சில சமயம் அசௌகர்யமாக இருந்தாலும், மனிதர்கள் அணிந்துகொள்கிறார்கள்.  தமக்கு பிடிக்காத ஆடையை மற்றவர் மதிப்பதற்காக அணிந்துகொள்வதும் உண்டு. சிறு  வயதிலிருந்து நம் பெற்றோரால் அணிவிக்கப்பட்ட ஆடைவகைகளை வெறும் பழக்கத்தின் காரணமாக அணிவதும் உண்டு.  ஆனால் எந்த ஆடையாக இருந்தாலும் அது நமக்கு பிடித்திருந்தாலும், அதை அணியத் தேவையில்லை என்று கழற்றி எறிந்துவிடுவது எப்போதாவது நடப்பதுண்டு.   


 ஒருவர் தனக்கென்று வகுத்துக் கொள்ளும் அற, ஒழுக்க விதிகளை ஒருவர் தன் உள்ளதில்  அணிந்துகொள்ளும் ஆடை எனக் கொள்ளலாம்.  அந்த  ஆடைகள் நம்முள் தீய எண்ணங்கள் நுழையவிடாமலும் தீய நடத்தையில் ஈடுபடாமல் இருக்கவும் உதவுகின்றன.  அறம் என ஒன்றை கொள்ளாமல் நாம் இவ்வுலகில் ஒரு மதிப்பான வாழ்வை வாழ முடியாது. சமூகத்திற்காக  சில அறங்களை நாம் கைக்கொள்ள வேண்டும். மற்றவர் நம்மை மதிக்க நம்மை பாராட்ட என்று சில அறங்களை கொள்கிறோம். அதே போல் நமக்கு மனதளவில் ஏற்றுக்கொள்ளாத அறத்தைக்கூட மற்றவர்க்காக உள்ளத்தை கட்டுப்படுத்தி அணிந்துகொள்கிறோம். ஒருவருக்கு அழகிய பெண்களை பார்க்கப் பிடிக்க்கும் என்றாலும் சமூகத்தின் கட்டுப்பாடுகளுக்கு அஞ்சி பிறன் மனை நோக்கா பேராண்மை என்ற அறத்தை அணிந்துகொள்கிறார். அப்படியே விழைவுகளைக் கட்டுப்படுத்தும் பல்வேறு அறங்களை நாம் விரும்பியோ விரும்பாலோ அணிந்துகொள்கிறோம். சில அறங்கள் நம் பெற்றோரால் பழக்கப்பட்டு  சிறு வயதிலிருந்தே கடைபிடித்து வருகிறோம். ஆனால் ஒரு மனிதன் சில சமயங்களில் சூழல் காரணமாக அல்லது சுயநலம் காரணமாக நெடுங்காலமாக பின்பற்றி வந்த அறத்தை கைவிடுதலும் உண்டு. 
 

சகோதரர்களை எக்காரணம் கொண்டும் கொல்லக்கூடாது என்ற அறம் இப்போது துரியோதனனிடத்தில்  இருக்கிறது.  அவன் பாண்டவர்களைக்கொல்ல திட்டமிட்டவன்தான்.  ஆனாலும் அந்தத் தவறை உணர்ந்துகொள்கிறான். தன் தந்தை முழு மனதாக அதை எதிர்ப்பார் என அவன் அறிந்திருக்கிறான். இனி பாண்டவர்களுக்கு எதிராக எதுவும் செய்வதில்லை மற்றும் அவர்களை எக்காலத்திலும் காப்பது என்ற அறத்தைக்  கைக்கொண்டவனாக இப்போது துரியோதனன் இருக்கிறான். இதற்காக கணிகர், சகுனி போன்றோரின் சொல்லை செவிகொள்ளாதவனாக இருப்பதைப் பார்த்தோம்.  துரியோதனன் ஜராசந்தன் சொல்லும் நியாயங்களை முதலில் ஏற்கமறுத்து கடுமையான சொற்களைக் கூறுகிறான்.


தந்தையின் குருதியில் எழுந்த மூன்று ஷத்ரியர்களை கழுவிலேற்றி அமர்ந்து நோக்கி மகிழ்ந்த அரக்கன்” என்றான்.  அச்சொற்களைக்கொண்டே அவன் மேலும் சினத்தை தூண்டிக்கொண்டான். “என்ன சொன்னாய்? யாதவரை உன் குருதிப்பகைவர்கள் என்றா? இழிமகனே, ஆம், நான் யாதவ குருதியுடன் உறவு கொண்டவன். எந்தையின் இளையவர் பாண்டு. அவர் மைந்தரே யாதவ பாண்டவர்கள். உடன் பிறந்தவருக்கென வாளேந்தவே இங்கு வந்தேன். என் முன் வந்து அவர்களுக்கெதிராக ஒருசொல் உரைத்த நீ என்முன் தோள் தாழ்த்தாமல் இங்கிருந்து செல்லலாகாது” என்று கூவினான்.


  ஜராசந்தனை அங்கீகரிப்பது என்பது,  அரசுக்காக சகோதரர்களை கொல்லும் செயலை அங்கீகரிப்பது என்பதாகும்.    யாதவ குலத்தவரின் பகைவனை, அவ்வகையில் தன் சிற்றன்னை குந்தியின் பகைவனை, அங்கீகரிப்பது என ஆகும். அது இப்போது அவன் உள்ளத்தில் அவன் தந்தையினால் அணிவிக்கப்பட்டிருக்கும்  அறனுக்கு முரண்படும் ஒன்றென அவன் காண்கிறான்.  அவனை எதிர்க்காமல் அனுப்பி வைப்பது அவன் சொற்களை ஏற்றுக்கொண்டதன் அடையாளமாகிவிடும். அவன் தன் அறத்தை கைவிடுவதாக ஆகிவிடும் செயல் என எண்ணுகிறான். ஆகவே மற்போருக்கு அழைக்கிறான். ஜராசந்தன் தன் மனதை ஒளித்து வைக்காமல் திறந்து காட்டுவது அவன் அறத்தைக்காட்டுகிறது. ஆனால் தன் எதிரி எனக்  கண்டவனை ஊரறிய தன் எதிரி  எனக் காட்டிவிடவேண்டும் என அவன் நினைக்கிறான். உள்ளே வஞ்சம் வைத்து வெளியில் உறவு காட்டுவது துரியோதனன் கொண்டிருக்கும் அறத்திற்கு மாறானதாகும். 


   ஆனால்  மற்போருக்கு பின்னர் ஜராசந்தனை துரியோதனன் ஏற்றுக்கொள்கிறான்.  துரியோதனன் சொல்கிறான்:
“எக்கணத்திலும் உங்களுக்கு எதிரியென்று களம் நிற்கமாட்டேன் மகதரே. உங்களுக்கென என் உயிரும் என் தம்பியர் உயிரும் இன்று அளிக்கப்படுகிறது” என்றான்.

   ஜராசந்தனுடனான இந்தப் போரில் துரியோதனன்  உள்ளத்தில் அணிந்திருந்த அறத்தின் ஆடை ஒன்று கிழிந்துபோய்விட்டது என்றே தோன்றுகிறது.    கர்ணனால் துரியோதனனை காக்க முடியாமல் போகும் சந்தர்ப்பம் காம்பில்யப் போரில் நடந்திருக்கிறது. பின்னரும் சில சந்தர்ப்பங்கள் நடக்க இருக்கலாம். ஆனால் இன்று துரியோதனன் அறம் ஒன்றை காக்கமுடியாமல் போனதற்கு  கர்ணன் அவன் அறியாமலேயே கரணமாகிவிடுகிறான் என்றுதான் தோன்றுகிறது.

தண்டபாணி துரைவேல்