Friday, February 19, 2016

நாகவெளி:



வெய்யோனில் நாகம் கொள்ளும் அர்த்த தளங்கள் விரிந்த படியே செல்கிறது.
தன் இரு மனைவிகளுக்காக காத்திருக்கும் போது கர்ணன் கனவில் வரும் நாகம் உள்ளுறைந்திருக்கும் ரஜோகுணத்தின் அடையாளமாக வருகிறது. தன் ஆளுமையின் ஒரு பகுதியான அனைவரையும் முடிவில்லாமல் மன்னிக்கும் குணத்தின் மறு தரப்பாக அதைக் கொள்ளலாம்.

 தன் சீற்றத்தின் ஒரு துளி போதும் இருவரையும் அடி பணிய வைக்க. இவ்வளவு துயருர வேண்டியதில்லை. நாகம் சொல்கிறது 'எளிது, மிக எளிது' என.

அடுத்து கணிகர் கூறும் நாகம். துரியனையும் கர்ணனையும் அரசப்பெருநாகமென்கறார். கருணையும் பெருந்தன்மையும் தன் நுனிவால் தாங்கும் பீடமாகக் கொண்டு சீற்றத்தோடும் ஆணவத்தோடும் விண்ணெழும் நாகம்.

அடுத்ததாக திரியையின் சொல்லிலெலும் நாகங்கள். சினத்தோடு சீறியெழும் ரஜோகுண பன்னக நாகங்கள். வஞ்சத்தோடு பதுங்கி வாழும் தமோகுண உரக நாகங்கள்.

திரியை கர்ணனின் பின்னால் காண்பது எதை? எது தன் ஐந்து மைந்தர்களை அணைத்து அமர்ந்திருக்கும் மகாகுரோதையின் மேல் எழுந்துள்ளதோ அது. ஆனால் இம்முறை எழுந்திருப்பது கைவிடப்பட்ட ஒரு மைந்தனுக்காக, ஐந்து மைந்தர்களின் அன்னைக்கு எதிராக.

இன்னொரு கோணத்தில் இதை தெய்வங்களிடையான சமராகவும் நோக்கலாம். பன்னகர்களின் தெய்வமான இந்திரனின் மைந்தனுக்கு எதிராக உரகர்களின் சூரிய மைந்தனை நிறுத்துகிறது மகாகுரோதை.

இதை இந்திரனின் சிலையை நோக்க காட்டும் ஆர்வமின்மை வழியாக கர்ணனிடம் வெளிப்படுகிறது. அதனால் தான் என்னவோ அந்த அரசப்பெரு நாகம் கர்ணனின் கரு உருவான காலம் முதல் காவலிருக்கிறது.

யமுனையில் நாணல் புதர் மண்டிய தீவில் உரகர்கள் பூசனை செய்யும் காட்சி மனதில் பிரம்மாண்டமாக விரிகிறது. உரக முதற்பொழுதில் மாபெரும் வஞ்சத்தின் முதற்கீற்று கர்ணனின் கணையாழி மணியின் அடியில் பதுங்கியிருக்கும் சிறுபுழு வழியாக உதயமாகிறது. சாட்சியாக இரு புறமும் நெய்பந்தம் சுடர விழிவிரித்து நோக்கியிருக்கும் மகாகுரோதை.
எண்ண எண்ண பெரும் கிளர்ச்சி ஏற்படுகிறது.

பாலாஜி பிருத்விராஜ்