Monday, February 22, 2016

பரவிப் பெருகும் மனித இனம். (வெய்யொன் - 62)


   

சூரியக் குடும்பத்தின் இருக்கும் இந்தப் பூமிப்பெண்  பேராசை கொண்ட பெருந்தாய். அவள் தன் மேனியெங்கும் உயிர்குலங்களை பிறப்பித்து வளரவிட்டிருக்கிறாள். கண்ணுக்கு தெரியாத நுண்ணுயிர்களிலிருந்து யானை திமிங்கலம், உயந்தோங்கிய மரங்கள் என பல்வேறு உயிர்கள் அவள் உடலில் நடந்து  ஊர்ந்து நீந்தி வேரூன்றி இருக்கின்றன. அந்தந்த விலங்குகள் அந்தந்த சூழலுக்கேற்ப தம்மை தகவமைத்து வாழும் வண்ணம் அவள் வகைசெய்து வைத்திருக்கிறாள்.  கடுங்குளிர் பனிக்கண்டத்தில், எரிமலை வாய்ப்புறத்தில் என கொடிய சூழல்களில் வாழும்  உயிர்கள் கூட உண்டு.  இப்படி அந்தந்த சூழல்களுக்கான உடலமைப்புகள் அந்தந்த உயிரினத்திற்கு இருக்கின்றன.
     ஆனால் மனிதனின் உடலமைப்பை எந்தச் சூழலுக்கு பொருந்தும் என அவள் படைத்தாள் எனத் தெரியவில்லை. அவன் உடல்தான் எந்தச் சூழலுக்கும் பொருத்தமற்றதாக தென்படுகிறது.   எந்தச் சூழலுக்கும் அங்கிருக்கும் மற்ற உயிரினங்களைவிட மிகக்குறைந்த தகவமைப்பை அவன் உடல் கொண்டிருக்கிறது. அந்தத் தாய் அவனுக்கு அடர்ந்த ரோமத்தையோ தடித்த தோலையோ பிற உயிர்களிடம் போட்டியிட்டு வாழ பெரிய திறன் வாய்ந்த உடலுறுப்புக்களையோ அவனுக்கு கொடுக்கவில்லை.மற்ற விலங்குகள் பிறந்து சீக்கிரத்தில் பெற்றோர் உதவியின்றி  தனித்தியங்கும் திறனடைய அவனுடைய குழந்தைப்பருவமோ  மிக நீண்டிருக்கிறது. பிற உயிர்கள்  இனப்பெருக்க வயதடைவது மனிதன் அத் தகுதியடையும் வயதைவிட குறைவாக இருக்கின்றன.  மற்ற விலங்குகள் பெரும்பாலும் ஒவ்வொரு ஈன்றெடுப்பிலும் பல உயிர்களை பிரசவிக்கையில் மனிதருக்கு ஒன்று என்பதுதான் வழக்கமான விதியாக இருக்கிறது.   அனைத்து விலங்கினங்களும் தங்களுக்கென  இயற்கை அளித்திருக்கும்  விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு வாழ்ந்து வருகின்றன. யானை பறக்க முயல்வதில்லை. ஒட்டகம் மரம் ஏற விரும்புவதில்லை. மீன்கள் கரை ஏற நினைப்பதில்லை. ஆனால் மனிதன் தன் பாதுகாப்புக்கென  எவ்வித விதிகளும் கொண்டிருப்பதில்லை.


    இத்தனை குறைகளுடனும்கூட அவன் இந்தப் புவியெங்கும் பரவிப் பெருகியிருக்கிறான். சூழல் வேறுபாடுகளுக்கேற்ப அவன் உடல் எந்தப் பெரிய தகவமைப்பும் பெற்றிருப்பதில்லை.  தன் அறிவின் துணைகொண்டு இந்தப் புவிமுழுதும் பரவி  புவியை தனதென அறிவித்து அரசாண்டு வருகிறான்.  மற்ற உயிர்களைப்போல் அல்லாமல் அவன் ஓரிடத்தில் நிலைகொண்டு இருப்பதில்லை. குருதியை உறைய வைக்கும் கொடுங்குளிர் பிரதேசத்திலிருந்து வானமும்  நீரின்றி வறண்டிருக்கும் பெரும்பாலை  நிலங்கள்வரை  அவன் சென்று வசிக்காத இடம்  பூமியில் அரிதென இருக்கிறது. இயற்கை அவனுக்களித்துள்ள  அந்தக் குறைகள்தான் அவன் இப்படி புவியெங்கும் பரவி வாழ காரணமாகிறது போலும்.


   அந்தப் பெரு நிகழ்வை கவித்துவமாக  உருவகித்துக் காட்டுகிறது இன்றைய வெண்முரசு.   உலகமெங்கும் மனிதப் பரவல் எப்படி நடந்திருக்கும்?   விலங்குகளாக இருந்த மனிதர்கள் அவ்வளவாக இடம் விட்டு இடம் சென்றிருக்கமாட்டார்கள். ஆனால் அவர்களுக்கு மனம் என்று ஒன்று தோன்றி அதனில் விழைவுகள் சேர்கையில்  இருக்கும் இடம் சிறிதென ஆகியிருக்கும்.  தாங்கள் இருக்கும் இடத்திலிருந்து புற்றிலிருந்து  வெளிவந்த நாகக் குஞ்சுகள்  நாற்புறமும் செல்வதைப்போல அவர்கள் குலம் குலமாக நாற்புறமும்  புதிய வாழ்நிலம் தேடி சென்றிருப்பர்.  ஏதோ ஓரிடத்தில் இப்படி சென்று சேர்ந்த ஒரு குலத்திலிருந்து மேலும் குலங்கள் உருவாகி அவை அங்கிருந்து கிளம்பி வெவ்வேறு இடம் சென்று என உலகம் முழுதும் இப்படி பரவி இருக்கலாம். அந்த மனித குலப்  பரவலை நாகர்குலத்தினரின் குடியேற்றங்கள் வழியாக நாம் அறிந்துகொள்கிறோம்.


தண்டபாணி துரைவேல்