அந்த விழியற்ற முதியவரை நினைக்கையில் திருதராஷ்டிரர், 
பிருகத்காயர் மற்றும் தீர்கதமஸ் ஆகியோரை நண்பர்கள் நினைவு கூர்ந்தனர். 
எனக்கும் அது அவர்களுக்கிடையே உள்ள ஒற்றுமை என்றுதான் முதலில் 
தெரிந்தது.திருதராஷ்டிரரை குறித்தது எனில் இரண்டாவது நூலிலிருந்தே 
இருக்கும் அவரை பற்றி ஏன் வெய்யோனில் வர வேண்டும்? 
வெண்முரசு
  நாவல்களில் துவக்கத்தில் வரும் கதையின் குறியீட்டுத் தன்மை நாவல் 
முடியும் பொழுதே துலங்கும். எனவே இப்பொழுதே அதைப் பற்றி யோசிப்பதும் முன் 
வைப்பதும் சரியா என்று தெரியவில்லை. ஆனாலும் இவன் எப்படி துரியோதனனிடம் 
எதையும் சொல்லாமல் இருந்திருக்கக் கூடும் என்று தோன்றிக் கொண்டே 
இருக்கிறது 
(இப்பொழுதே அவன் குணங்கள் அனைத்தும் கர்ணனுக்கு 
தெரிந்துதான் இருக்கிறது.) எப்படி இனி வரும் சந்தர்பங்களில் நிகழும் 
அனைத்தையும் கண்டு அமைதியாக இருக்கக் கூடும்? 
அவன்
 ஒரு வார்த்தை சொல்லி இருந்தால் அனைத்தையும் மாற்றி இருக்கலாம். 
குண்டாசியும் அதையே கெஞ்சுகிறான். எப்பொழுதும் நிதானமாக இருக்கும் கர்ணன் 
குண்டாசியிடம் பேசும்பொழுது (அப்பொழுது வரும் கர்ணனின் உடல் மொழி 
வர்ணனைகள்) அவன் வார்த்தைகளை உள் வாங்குவதையே தவிர்க்கிறான் என்பதிலிருந்து
 அவை அனைத்தும் உள்ளூர கர்ணனே அறிந்தவைதான் என்று தோன்றுகிறது. அப்படியெனில் அவன் உள்ளூர அறிந்த ஒன்றுதான் நிகழப்  போகிறது. காமத்தால் கண்ணிழந்து அலைந்த தீர்க்கதமசின் ஒரு துளியே கர்ணனில் இருக்கும் விழைவாகவும், திருதராஷ்டிரரில் இருக்கும் விழியிழந்த பாசமே துரியோதனின்
 தவறுகளைக் கண்டும் இடித்துரைக்காமல் இருப்பதும், இனி நிகழப் போகும் 
தருணங்களிலும் அவன் அப்படியே இருக்கப் போவதும் என்று தோன்றிக் கொண்டே 
இருக்கிறது. 
அந்த ஊழின் திருகுகுடுமி 
திரௌபதி முன்னால் திருக்கப்படுகையிலேயே கர்ணனை செயலிழக்க செய்ய முடியும், 
இல்லையெனில் அவன் துரியனையும் மாற்றி விடுவான். அது சிவதருக்கும் தெரியும் 
கணிகருக்கும் தெரியும். கணிகர் அதை தூண்டுகிறார், சிவதர் அதை அணைக்கப் 
பார்கிறார். அதனால்தான் நாம் இங்கு வந்திருக்கக் கூடாது என்கிறார். 
பரசுராமர்
 தாயைக் கொன்றவர், கர்ணன் தாயால் கொல்லப்பட்டவன், தம்சன் ( தான் 
முலையருந்தாத ) தாயிடம் காமம் கொண்டு அவள் இடத் தொடையை துளைத்தவன், கர்ணன் 
தாயை மகவாகக் கண்டு ( தாயே மகளாகும் அந்த கனவு ) இடத் தொடையில் இருத்திக் 
கொள்கிறான். இதன் படி தீர்க்கதமசின் அடங்கா விழைவு நேர் எதிராக மாறி 
கர்ணனுக்கு கிடைக்காத "குந்தியாகவும்" "த்ரௌபதியாகவும்" அவனை அழிக்க 
வேண்டும். 
இதுவரை அளர்க்கனால் 
அலைக்கழிக்கப்படும் வெய்யோனின் கதையாக இருக்கும் "வெய்யோன்" இனி தன் 
குணங்களால் தீர்க்க ஜ்யோதிஷ் ஆனவன், தன் விழைவுகளால் தீர்க்க தமசாகும் 
கதையாகும் போல, என் வாசிப்பு தவறில்லை எனில். அதைத்தான் அவன் அங்கு 
விழியற்ற முதியவரில் கண்டானா என்ன? 
ஏ வி மணிகண்டன்
