Monday, February 1, 2016

தமிழ்ச்சொல்லும் கலைச்சொல்லும்
மதிப்புமிகு ஜெ,

நான் உங்களுக்கு ஏற்கனவே வெண்முரசின் சொற்கள் என்ற தலைப்பில் மின்னஞ்சல் அனுப்பி அதற்க்கு மறுமொழி பெற்றதுடன் இல்லாமல் என் கோரிக்கையை நீங்கள் ஏற்றதும் நினைவில் அழியா ஒன்று. ஆர். மாணிக்கவாசகம் எழுதிய கடிதமும் எம்..சுசீலா எழுதிய கடிதமும் படித்த பிறகே இதை எழுத என் மனம் துடித்தது.

வெண்முரசின் பெரும் சிறப்புகளில் ஒன்று அது வாசகனை தமிழ் சொல்லாச்சிகளுடன் மூழ்கடிப்பது. பெரும்பான்மையான வாசகர்களுக்கு அது செருக்கையும் வாசிப்பின்பத்தின் இனிய வழியைத் திறந்து விடுகிறது என்னையும் சேர்த்து. ஆர். மாணிக்கவாசகம் குறிப்பிட்டது போல வெண்முரசு வளர வளர அது முந்தைய நாவல்களில் இருந்த பிறமொழிச் சொற்களையும் களைந்து முன்னோக்கி சென்று கொண்டே இருக்கிறது. எம்..சுசீலா அவர்கள் கையாளப்படும் சொற்களுக்காக மாணவர்களைக்கொண்டு ஆய்வு நடத்தலாம் என்கிறார். இந்த இரு கடிதங்களின் மூலம் நான் அறிவது, சொற்களை அனைவரும் அல்லது பலரும் நுண்ணோக்கிக் கொண்டிருக்கின்றனர் என்பதே. எங்கள் விழிகளின்முன்பு இருகாலங்களும் போற்றக்கூடிய மாபெரும் இலக்கியப்படைப்பு களையப்பட்ட பிறமொழிச்சொற்களுடன் மீண்டும் வருவதை உண்மையில் வெண்முரசு காதலனாகிய என்னுடைய எளிய மனம் ஏற்க மறுக்கிறது. வருந்துகிறது. கேலி பகடியாகி மீண்டும் கேலியாகவே வருகிறது (துச்சளை – கர்ணன் – கௌரவர் உரையாடல்களில், பீமன் அஸ்தினபுரி அவையில் தூது உரைக்கையில்). மைந்தர் துயர் புத்திரசோகமாக வருகிறது (பிருஹத்காயர் – ஜயத்ரதன் கதையில்). 

தனியாக ஒன்றும் செய்வதில்லை என்று முன்பே கூறிவிட்டீர்கள். உங்களுடைய எழுதும் சூழல் எனக்கு புரிகிறது. அதனிடையில் இதனை நோக்குவதென்பதும் கடினமே. திருத்தி வலையேற்றம் செய்பவர்களிடம் இவ்வாறு பிழை இருந்தால் கூறுவதற்கு வழி இருந்தால் நன்றாக இருக்கும். எந்த வகையில் பார்த்தாலும் இது உங்களுக்கு பணிச்சுமைதான். ஆனாலும் என்ன செய்ய இயலும் அல்லது இயலாது என்பது உங்களுக்கே தெரியும். இந்த கடிதத்தை திருப்பி இதே நோக்குக்காக உங்களுக்கு எழுதுவதற்கே நான் பல முறை யோசித்தேன். ஆனால் நாங்கள் கொண்டாடும் இப்படைப்பு இச்சிறு காரணத்திற்காக சிறிதளவேனும் சிறுமை படுத்தப்பட்டால் மனம் தாங்காது. அது ஒன்றே இக்கடிதத்திற்கு தூண்டுதல்.

நன்றிகளுடன்
அரசன் 


அன்புள்ள அரசன்

நீங்கள் சொல்வது உண்மை

கூடுமானவரை தூயதமிழ்ச்சொற்களை மட்டுமே கையாளவே எண்ணுகிறேன்

ஆனால் சிலசமயம் சில சொற்களுக்கு கலைச்சொற்களுக்கான முக்கியத்துவம் வந்துவிடும். அவற்றை ஒரே ஒரு இடத்தில் கையாண்டுவிட்டு மொழியாக்கச் சொல்லை கையாளலாம் என எண்ணினேன்

உதாரணம், புத்திரசோகம். துயரங்களில் உச்சம் அதுவே என பின்னர் யக்‌ஷபிரஸ்னத்தில் யக்‌ஷன் சொல்கிறான். அது இந்து மெய்யியலில் ஒரு கலைச்சொல். மைந்தர்துயர் என மொழியாக்கம் செய்யப்பட்டிருந்தாலும் ஒருமுறை அதை கையாளலாம் என நினைத்தேன்

அதைப்போல தத்துவக்கலைச்சொற்களையும் மூலச்சொல்லை ஒருமுறை கையாண்டிருப்பேன். நான் உத்தேசிப்பது அதை என நுண்வாசகனுக்கு உணர்த்த

ஜெ