Thursday, February 4, 2016

முதல்வாசல்



வணக்கம் திரு.ஜெயமோகன் ,

வெண்முரசின் வாயிலாகத் தங்கள் எழுத்தைக் கண்டடைந்தவர்களில் நானும் ஒருவன். 2014 ,ஆம் ஆண்டில் தங்கள் மலேசிய வருகையின் போது கல்லூரியில் உரையைச் செவிமடுக்கும் வாய்ப்பை அடைந்தேன். வழக்கமான 'இலக்கியவாதிகளின்' உரையில் காணப்படும் எவ்வித மிகைப்புனைவுகளும் இடக்கரடக்கல்களும் மங்கலவழக்குகளும் இல்லாத அந்த உரை விழியடைப்பைத்தான் ஏற்படுத்தியது. சில நாட்களுக்குப் பின்னர் அவ்வுரையில் சொல்லப்பட்டவை குளத்தில் ஆழ அமிழ்ந்து போனவற்றின் நுரைக்குமிழிகளாய் நினைவெழுந்தன. வெண்முரசை வாசிக்க தொடங்கினேன். முதலில் சொற்களாய் மட்டுமே.பின் கதையாய். தொடர்ந்து, காட்சிகள், சிந்தனைகள் எனக் கண்டடைந்தேன். ஆனாலும், வெண்முரசு எனும் பெருக்கின் முன் இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும் அறியும் குழந்தையெனவே உணர்கிறேன். என் இலக்கியப் புரிதலை மீள பரிசீலிக்கவும் கட்டமைக்கவும் கிடைத்த இக்கண்டடைதலுக்கு தலைவணங்குகிறேன்.

ஜெ.அரவின் குமார்.

அன்புள்ள அரவிந்த் குமார்

நலமாக இருக்கிறீர்கள் அல்லவா? மலேசியாவில் வெண்முரசு வரத்தொடங்குயபோது வந்தேன். அதில் அம்பை பீஷ்மர் பகுதியை அங்கே ஒரு கல்லூரியில் நடித்ததை நினைவுகூர்கிறேன். அது ஒரு பெரிய ஊக்கமூட்டுதலாக அமைந்தது

வெண்முரசு அதை வாசிக்கும் பயிற்சியை அதுவே அளிக்கும். தொடர்ந்து வாசிப்பதே முக்கியமானது

ஜெ