Wednesday, September 30, 2015

நெளியும் உலகம்


அன்புள்ள திரு.ஜெ வணக்கம்.

அர்ஜுனன் நாகலோகப்பயணத்தை பெரும் கனவில் நடத்துவீர்கள் என்று  நினைத்து இருந்தேன். மெய்விழி வழியாகவே கொண்டு செல்கின்றீர்கள். உங்கள் பார்வையின் நுணுக்கங்களே யாதார்த்தங்களாக, யாதார்த்தங்களே நுணுக்கங்களாக பூக்கின்றது வெண்முரசு.

சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து-என்பான் வள்ளுவன்.

ஒவ்வொரு உலகமும் எங்கோ இருக்கிறது என்பதை இன்று அழிக்கின்றேன். ஒவ்வொரு உலகமும் இங்குதான், இதோ நம் அருகில், நம் கண்முன்னால்தான் இருக்கிறது. எண்ணங்கள் அவற்றை உருவாக்கி, எண்ணங்களே கால்களாகி நம்மை அங்கு உலாவர வைக்கின்றன.
ஐராவதகாட்டில் நதிநீரில் நீந்தி விளையாடும் உலூபி, நீரில் இறங்கிவரும் அர்ஜுனன் கால்நகத்தை மின்னும் நாகவிழியெனக்கண்டு இழுத்துச்செல்கிறாள். நதியைக்கடந்து வேறு இடம் சென்றால் அது நாகலோகம்தான்.

மனிதன் நதியில் இறங்கும் முன்பு மண்ணில் ஒரு உலகில் இருக்கிறான். நதியில் இருந்து கரையேறி மண்ணுக்கு செல்லும்போது மற்றொரு உலகில் இருக்கிறான். அவன் எண்ணங்கள் இடையில் உள்ள நதியை மறந்து முன்னால் இருந்த உலகும் இந்த உலகும் ஒன்று என்று எண்ணுகின்றது. காரணம் அந்த உலகும், இந்த உலகும் ஒரே பூமியில் இருக்கிறது என்ற தர்க்கப்புத்தியின் விழிப்’புதான் காரணம். இலக்கியங்கள் இப்படி முன்னையும் பின்னையும் இணைக்கும் தர்க்கத்தில் நிற்பதில்லை. அந்த கணத்தில் வாழ்க்கை என்ன என்ற யாதார்த்தத்தை நம் முன் வைக்கிறது. அந்த கணம், அந்த உலகம், அந்த வாழ்க்கை. அதை வேறு ஒரு கணத்தில் வைக்கும்போது பொருள் அற்றதாகபோகலாம். அல்லது இன்னும் ஒரு புதுப்பொருள் தரலாம்.  

நீரில் கால்வைத்த கணத்தில் இருந்து அர்ஜுனன் நாகலோகம் தொடங்கிவிடுகிறது. அங்கிருந்து அவன் காண்பது எல்லாம் நாகங்களின் உலகம்தான். அந்த உலகத்தில் அவன் புதியவன், அந்த உலகத்தில் அவன் வாழ தகுதியானவனா என்று வெண்முரசு விளக்கிப்போவது அழகு. 

பழமையான அஸ்தினபுரியின் வாரிசு, புதிய இந்திரப்பிரதஸ்தத்தின் இளவரசு என்று இருந்த அர்ஜுனன் ஒவ்வொரு கணத்திலும் தான் உணரும் நாகங்களின் நுட்பத்தை தனதாக்கிக்கொள்ளும் வல்லமையால் நாகராகின்றான். ’கூர்மையான எண்ணங்களால் தன்னை பகுக்கும் அர்ஜுனன், அந்த எண்ணங்கள் மூலமாகவே ஒவ்வொரு எல்லையும் கடந்துப்போகின்றான். தனது எண்ணங்களை காணவும் கைக்கொள்ளவும் தெரிந்த அர்ஜுனனுக்கு பயம் விட்டுப்போவதுகூட அவன் நாகர்குலத்தவனாக ஆக செய்கிறது.

ஜெ சொன்ன இந்த உதாரணம் இங்கு நினைவில் எழுகிறது. சுவாமி சித்பவானந்தர் “மின்சாரத்தைப்பற்றி அறியும்தோறும், மின்சாரம் பற்றியப்பயம் போகின்றது”

பூலோக வாசிகள் பாதையில் நடக்கிறார்கள் அல்லது பாதையை உருவாக்கி நடக்கிறார்கள். நாகலோகவாசிகள் பாதையில்லாப்பாதையில் நடக்கிறாகள். //புதர் வகுந்து வளைந்து சென்ற பாதை வேர்ப்பின்னல்களுக்குள் நுழைந்தது. உருளைப் பாறைகளை கவ்விப் பிடித்திருந்த வேர்களின் ஊடாக நோக்கி விழிகூர்ந்து காலெடுத்து வைத்து இறங்கிச் சென்றனர்-காண்டவம்-14 // இந்த இடத்தைப்படிக்கும்போது உலூபி, அர்ஜுனன் இருவரும் பாம்பாகிவிட்டதுபோல் உள்ளது. நாகர்களின் இமையாவிழிகளைப்பற்றிச்சொல்லும் இடத்தில், நாகர்குலத்தவர்கள் அனைவரும் நாகங்காளாகிவிடுகிறார்கள். புற்றுகள் போன்ற குடில்கள் அவற்றில் இருந்து பசுவின் நாவென  வெளிவரும் நாகர்குலத்தலைவன.  மூச்சுச்சின் ஒலியுடன் அவர்கள் பேசும் சொற்கள்.   மூதன்னைகள் உடல்மொழியல் நாகநடனம் செய்து சாமியாடுதல், மண்ணைக்கொத்தி சத்தியம் செய்தல் என்று அவர்கள் ஒவ்வொரு அசைவிலும், செயலிலும் நாகங்கள் வந்து நெளிந்துச்செல்லும்போது, மண்ணில் எழும் நாகலோகத்தை காணமுடிந்தது. இதைவிடவும் அந்த உலகத்தின் மணம் நாகலோகம் என்பதன் உச்சம்.  மணத்தின் மூலம் உருவாக்கும் ஒரு உலகத்தை இரண்டு என பிரிக்கமுடியாது. வேதாந்த வாக்கியம் தத்துவமசிபோல் மணம் எப்போதும் நம்மை அதுவாக்கிறது. 

கை, காலை வச்சிகிட்டு சும்மா உட்காரமாட்டியா என்று குழந்தைகளை தாய்மார்கள் திட்டுவது உண்டு. இங்கு மூன்று நாககுஞ்சுகள் அர்ஜுனன் உள்ளங்கைகையில், கால் கட்டவிரலில், தொடை இடுக்கில் நுழையும்போது அஞ்சாமல் இருக்கிறான். அந்த பயம் இன்மையில் அல்லது அவைகளை தானாக (அவனாக) உணர்வதால்,  மூதன்னையர்கள் கண்டுக்கொண்டார்களா? அர்ஜுனன் காலும், கையும் நாகமாகிய நாகன் என்று.

துயிலில் இருந்து விழித்தெழும் அர்ஜுனன் அக்கையின் இடையில் இருக்கும் நாகக்குழந்தை ஒன்றை “அருகே வா” என்று அழைக்க, அதை காணும் அக்கை தாங்கள் நாகம் என்பதை மறந்து அர்ஜுனன் இடத்தில் எந்த தடையும் இல்லாமல் குழந்தையை அக்கை கொடுக்கப்போகிறாள். இரண்டு முதியவர்கள் அர்ஜுனனை எச்சரிக்கிறார்கள். முதியவர்களின் அறிவுக்கு எட்டாத அர்ஜுனன் அகம் ஒன்று அக்கையின் உணர்வுக்கு எட்டியதா? அந்த கருணையை, அன்பை மூதன்னையர்கள் அறிந்ததால் அவனை நாகர்குலம் என்று சத்தியம் செய்கிறார்களா?

அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும் 
செல்வச் செவிலியால் உண்டு.

வெகுதொலைவு வந்துவிட்டேன் என்று எண்ணும் அர்ஜுனன் அந்த எண்ணம் அளித்த ஆறுதலில் வியக்கிறான். உலூபி மீது எழும் காதல் அன்பாகி அங்கு அருளென்று நிற்கிறது. 
எப்பொழுதுமே அறிவுக்கு அப்பால் இருக்கிறது உணர்வு நிறைந்த அகம். அதை சாமியாடித்தான் கண்டுபிடிக்கவேண்டி உள்ளது அப்பொழுதுதான் தெரிகிறது பொருளுக்குள் உள்ள பொருள். 

நன்றி
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.