Wednesday, September 16, 2015

குழந்தையுலகம்

அன்புள்ள திரு.ஜெ வணக்கம்.
காண்டீபம் மிகை கற்பனைக்கதை என்பதால் அதன் முழுவீச்சோடு மேல் எழுந்து செல்கிறது. யானைகளை தூக்கிச்செல்லும் கழுகுகள் என்ற சித்திரம்  வந்த உடனேயே எழுத்துக்கள் சித்திரங்களாக மாறி மாறி இழுத்துச்செல்கின்றன.

மிகை கற்பனையில்தான் உண்மை மானிடன் வெளிப்படுவானோ? யார் அந்த சுஜயன்? நானா? ஆடை நனைப்பதில் ஆரம்பித்து கதையில் விழி விரிப்பது வரை என்னையே அச்சிபிசகாமல் வரைந்துச்செல்கிறான். அல்லது சுஜயன் என்பது ஒவ்வொரு ஆண்குழந்தையுமோ? ஒவ்வொரு ஆண்குழந்தையும் சுஜயனாக இருந்துதான் சிறகுகள் முளைத்துப்பறக்கிறார்களோ? சிலருக்கு நாவும் கையும் எளிதில் முளைத்துவிடுகிறது. சிலருக்கு காலம் முளைக்கவைக்கிறது. தனது இலக்கை தொடும்வரை அவர்களின் கூட்டை அவர்கள் உடைப்பது இல்லையோ? பிறந்துவிட்டாலே சராசரியாக மனிதர்கள் இருக்கவேண்டும் என்று மனிதன் மட்டும்தான் நினைப்பானோ? சராசரியாக இருப்பதே சரியான வாழ்க்கை ஆகிவிடும் என்று மனித மனம் நம்புகிறது. சில குழந்தைகள் பிறந்தாலும் முட்டைக்குள் குஞ்சிப்போல தனக்குள் தன்னையே அடைக்காத்துக்கொண்டு கிடக்கிறது. சுஜயன் பாத்திரம் எழும்போதே அனைத்து ஆடவரையும் கலந்து செய்த பொம்மைபோல் எழுந்துவருகிறான். அற்புதம்.

நாம் பார்க்கும் இவ்வுலகில் சிம்மங்களும் கழுகுகளும் பறக்கும் யானைகளும் இல்லை. நாம் காணாததனால் அது இல்லையென்று ஆகிவிடுமா என்ன?” என்றாள்.-காண்டீபம்-1 மானிட மனங்களின் முரண்களை இங்கேயே அவிழ்த்து கொட்டிவிட்டீர்கள் ஜெ. இனி நாவல் அதை அள்ளி அள்ளி கோர்த்து மாலையாக்கும் அழகென விரிந்து விரிந்து நடனம் செய்யும். நன்றி

அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.