அன்புள்ள திரு.ஜெ வணக்கம்.
இருட்டு
அனைத்து பொருட்கள்மீதும் படிந்து அனைத்தையும் இருட்டாக ஆக்கிவிடுகிறது.
இருட்டில் எதுவுமே இல்லை என்று நினைக்கின்றோம் ஆனால் இருட்டு ஒன்றுதான்
இருக்கிறது. இரண்டு இல்லா ஒன்றாக இருட்டு ஆக்கிவிடுகிறது. எத்தனை வலியதாக,
எத்தனை பெரியதாக இருட்டு இருக்கிறது. இருட்டுபோல் இப்படி ஒரு சக்தியுடைய
சக்தி உலகில் உண்டா? இருட்டை காளி என்றவன் வாழ்க! இருட்டில் அவள் நாவென
தொங்கும் ஒளி வாழ்க! என்னதான் மிக நீளமாக தொங்கினாலும் காளியின் உடலோடு
ஒப்பிட்டால் நாக்கு சிறியதுதானே! இருட்டுக்கு முன் ஒளி ஒரு சிறுநாக்கு.
தொங்கும் நாக்கோடு நோக்கையில்தான் காளி உக்கிரமானவாளாக தெரிகிறாள். அந்த
நாக்கு இல்லாமல் இருந்தால் காளிபோல் ஒரு கருணை அன்னை வடிவம் உண்டா? ஒளியால்
இந்த உலகம் விகாரம் அடைகின்றது. உக்கரம் அடைகின்றது. ஒளியின்றி இருந்தால்
இந்த உலகம்தான் எத்தனை அரிய அழகிய கருணைத்தாய்.
காளி
தனது நாக்கை தொங்கவிட்டு எதையும் உக்கிரமாக சுவைப்பதுபோல, இருட்டு தனது
ஒளிநாக்கை தொங்கவிட்டு உலகை உக்கிரமாக சுவைக்கிறது. மானிட உள்ளம்
அடர்இருளால் நிறைந்து கருணைகாளி என இருக்கையில் கனவு நாக்குகள் அதில்
எழுந்து நீண்டு உக்கிரம் காளியென வடிவம் கொள்கிறது. கனவுகள் இல்லாமல்
இருந்தால் இந்த கருணை நிலைத்திருக்கும். ஆனால் நாவில்லாமல் சுவை ஏது? கனவு
இல்லாமல் வாழ்க்கைக்கு சுவையேது.
சுஜயன்,
சுபகை இருவர் காணும் கனவுகள் எத்தனை எத்தனை சுவை மிகுந்தவை. சுஜயன் காணும்
கனவுகள் குருதியை மண்ணில் நிறைக்க நாக்கு நீட்டுவது. சுபகை காணும் கனவுகள்
குருதியை தன்னில் நிறைக்க நாக்கு நீட்டுவது. மண்ணில் விழும் குருதி
வாழ்வின் அறுவடையின் அடையாளம். பெண்ணில் விழும் குருதி விதைப்பின்
அடையாளம். விதைப்பில்லாமல் அறுவடை இல்லை, அறுவடை இல்லாமல் விதைப்பில்லை.
ஒவ்வொரு ஜீவனும் தனது கனவுநாவை நீட்டி சுவைக்கும் அனைத்தும் அதன் வாழ்க்கை.
இல்லை என்றால் வாழ்க்கை என்று ஒன்று இருக்குமா?
சுஜயன்,
சுபகை என்னும் பெயர்கள்தான் எத்தனை பொருத்தமான முரண்கள். சிறப்பான பெயர்
தேர்வுகள். சுஜயன் என்பது முழு வெற்றியின் அடையாளம். சுபகை என்பது
முழுபகையின் அடையாளம். வெற்றி, பகை இரண்டுமே கனவுகள் கண்டு கண்டு
வளர்கிறது.அந்த கனவுகள்தான் அவைகளின் வாழ்க்கை என்று பதிவாகிறது. சுஜயன்
காணும் கனவுகள் அனைத்தும் புறத்தில் உள்ளவைகளின் அடையாளம், புறத்தை
வெற்றிக்கொள்ள துடிக்கும் வளர்ச்சியின் வடிவம். சுபகை காணும் கனவுகள்
அனைத்தும் அகத்தில் உள்ளவைகளின் அடையாளம், அகத்தை வெற்றிக்கொள்ள காணும்
கனவுகள்.
சுஜயனும்,
சுபகையும் அடையத்துடிப்பது விஜயனாகிய அர்ஜுனைத்தான். சுபகை தோள்மூலம்
உண்டு சுவைத்த விஜயனை, சுஜயன் வாள்மூலம் உண்டு சுவைக்க நினைக்கிறான்.
நாக்குகள்தான் வேறு வேறு வடிவத்தில் நீள்கின்றன. நாக்குகளின் மூலமாகிய காளி
ஒன்றுதான்.
உலகில்
எத்தனை குழந்தைகளோ அத்தனை சுஜயன்கள். உலகில் எத்தன பெண்களோ அத்தனை
சுபகைகள். இலக்குகிடைக்கும்வரை அவர்களின் கனவுகள்தான் எத்தனை வண்ணத்தில்.
விஜயன் என்ற இலக்கு கிடைக்கும்வரை சுஜயன் முட்டைக்குள் குஞ்சி என
இருக்கிறான். விஜயன் என்ற இலக்கு கிடைக்கும்வரை அரண்மனை என்னும்
கருவறைக்குள் சுபகை இருக்கிறாள். இலக்கு கிடைத்தப்பின்பு இருவர் கனவும்
ஓறிடத்தில் மையம்கொண்டு நிற்கிறது. தமிழன் அகனானுாறு புறனானுாறு என்று
வாழ்க்கையை கவிப்பாடி வைத்தான். அகனானுறு கொண்டு சென்று சேர்க்கும் இடமும்,
புறனானுறு கொண்டு சென்று சேர்க்கும் இடமும் ஒரே இடம்தான். சித்தம்
நிறையும் இடம். வெற்றியை கனவு காணும் சுஜயனும், காதலை கனவுக்காணும்
சுபகையும் ஒரே இலக்கில் தன்நிறைவையே அடைகிறார்கள். கேட்கும் மற்றவர்களுக்கு
அது கனவு ஆனால் அவர்களுக்கு அது வாழ்க்கை.
சுஜயன்
செய்யும் போரும், சுபகை செய்யும் காதலும் வேறுவேறா? பகலுக்கு பலப்பல
வண்ணம். இருட்டுக்கு ஒரே வண்ணம். சுஜயன், சுபகை வடிவம்தான் வேறு வேறு
உள்ளம் ஒன்று.
சுபகை
தனது கனவுகள் பொய்த்தப்பின்பு விடியலைக்கண்டுப்பயப்படுகிறாள் மீண்டும்
அறைக்குள் நுழைந்து அறையின் திறப்புகளை ஒளிவராமல் அடைக்கிறாள். சுவை அறிய
எழுந்த நாக்கு சுடுப்பட்டதும் உள்ளிழுத்துக்கொள்வதுபோல கனவுகள் இல்லா
அறையில் வாழ முயல்கிறாள். நாக்கு இல்லா காளிபோல் வாழ நினைக்கிறாள். அவளை
அப்படி வாழவிட்டார்களா? அவள் அறைக்கதவு ஒளிக்காக தோழியால் இடித்து
திறக்கப்படுகிறது. சுபகை திறக்காவிட்டால் கதவு உடைக்கப்பட்டு இருக்கும்.
நாக்கு இல்லாமல் காளியால் இருக்கமுடியும். காளி இல்லாமல் நாக்கால்
இருக்கமுடியுமா? காளியை காளி என்று காட்ட அந்த நாக்கு முயற்சி செய்கிறது.கனவுகள்
மனிதர்களோடு ஒட்டிக்கொள்கிறது. அதன் மூலம்தான் வாழ்க்கையின் சுவை
தெரிகிறது. கண்ணீர் என்றும் சிரிப்பென்றும் அதற்கு வடிவம் கொடுத்துக்கொண்டு
இருக்கிறோம்.
நீங்கள் விரும்பினாலும்,விரும்பாவிட்டா லும் வெண்முரசு தனக்குதானே கவிதையாகிவிடுகிறது ஜெ. நன்றி
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்