Wednesday, September 30, 2015

மணங்கள்

இனிய ஜெயம்,


இன்றைய நாளின் ஊன்னத வர்ணனை இந்த பகுதி 

//மின்னல் ஒளியில் சுற்றிலும் அலையடித்த நாணல் பூக்களைக் கண்டான் அவற்றின் அடியில் பாம்பு முட்டைகள் விரிந்து கொண்டிருந்தன. கற்றாழைச் சோறு மணம், தேமல் விழுந்த உடல் வியர்க்கும் வாடை ,பூசனம் பிடித்த அப்பங்களின் நாற்றம், உளுந்து வறுக்கும் மணம்… எண்ண எண்ண சித்தம் சேர்த்து வைத்திருந்த நினைவுகள் அனைத்தும் மணங்களாக எழுந்தன. ஊறி மட்கிய மரவுரி, பிறந்த குழந்தையின் கருநீர், குட்டிகளுக்கு பாலூட்டிக் கிடக்கும் அன்னை நாயின் சிறுநீர், தழைமட்கிய இளஞ்சேறு ,புளித்த கோதுமை மாவு ….பிறிதொரு மின்னலில் மும்முகப்பெருமலை மிக அண்மையில் வந்து நின்று அதிர்ந்தது.//

ஒரு காட்சியை சொல் சொல்லாக செதுக்கி, முற்றிலும் நம்முன் நிகழ்வது போல காட்டிவிடலாம். ஆனால் அப்போதும் அவற்றை முப்பரிமாணம் கொள்ளச் செய்யும் ஒன்று குறையவே செய்யும். அதுதான் வாசனை.  பொழுது,சீதோஷணம், சூழல், வாசனை அனைத்தும் கச்ச்தமான முயங்கிய வர்ணனை இது, அநேகமாக  இன்று இரவு இது என் கனவில் வரக் கூடும்.

இங்கே சில சுவையான செய்திகள். நண்பர்களிடம் உரையாடுகையில் கேட்பேன். அவர்கள் கனவில் வாசனை எதையும் அனுபவித்ததில்லை என்றே சொல்கிறார்கள். அதே போல மிக குறைவான நண்பர்களே இலக்கியத் தருணங்களை கனவாகக் கண்டிருக்கிரார்ர்கள்,  இலக்கியம் நிகர்வாழ்வு எனப் பதியும் என்றால் அது நிச்சயம் நம் கனவில் வரும்தானே?

நான் இறுதியாகக் கண்ட கனவில்,  படகின் அமர முனையில் த்ரிஸ்ட்யுத்தும்ணன் நிற்கிறான். அவன் பின்னால் சாத்யகி. அவனுக்குப் பின்னால் நான். எதிரே வரும் படகின் பாய்மரத்தை கட்டும் மைய முடிச்சை சாத்யகி குறி வைக்கிறான். விண்ணில் மிலிட்டரி ஹெலிக்காப்டர்கள் தோன்றி எங்கள் படகை நோக்கி குண்டு மழை பொழிகிறது. நான் படகின் அடித்தளம் நோக்கி கத்திக் கொண்டே ஓடுகிறேன். அடித்தளம் முழுக்க நீர். பீதியில் விழித்துவிட்டேன்.

காலையில் எழுந்ததும் நிகழ்ந்த கனவை நினைத்து நினைத்து சிரித்தேன். இப்படித்தான் வெண் முரசு எனக்கும் சம்பந்தம் சம்பந்தம் இல்லாமல் படிந்து, வித விதமாக வெளிவந்து கொண்டிருக்கிறது.

அந்த யாகத்துக்கு இன்றைய அத்யாயம் மேலும் ஒரு ஆகுதி.  அர்ஜுனனை நாகர் உலக மூதன்னை ஏன் ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதில் உள்ள ஆழ் பிரதி மிக அழகு. முதலில் அர்ஜுனன் ஏழு உலகங்களை வெல்கிறான். வென்றபிறகு அன்றைய காலை விழித்த கணம் முதல் அந்த உலகே அவனுக்கு சொந்தமான ஒன்றாகத்தான் இருக்கிறது. அர்ஜுனன் காலை அரவ நதியில் நீராடும்போதே அந்த சொந்தம் துவங்கி விடுகிறது. கர்க்கர் அதை உடனடியாக கண்டுகொள்கிறார். அப்படி சொந்தம் கொண்டாடுவது அர்ஜுனனின் பாவனை அல்ல, அவனது இயல்பே அதுதான் என்று அர்ஜுனன் நாகர் குழந்தை ஒன்றினை ஏந்தக் கரம் நீட்டுகையில் தெரிந்துவிடுகிறது.

வெறியாட்டின் இறுதியில் அர்ஜுனன் மடியில் தவழும் அந்த அரவக் குட்டிகள், அவன் கொஞ்சக் கை உயர்த்திய குழந்தைகள் தானே? நஞ்சு கெழுமிய குழந்தைகள். அவனை எப்படி மூதன்னை ஏற்றுக் கொள்ளாமல் போவாள்?

இங்கே இப்போது எந்த சம்பந்தமும் இன்றி பீமனின் நினைவு எழுகிறது.  எங்களில் ஒருவன் நீ என்றுரைத்த நாக அன்னை அர்ஜுனனுக்கு நஞ்சளிக்க மறுக்கிறாள்.

நாக அன்னையிலும் உறையும் கருணையை குந்தி எங்கே கை விட்டால்? நஞ்சுக் கோப்பையுடன் நிற்கும் பீமனை இப்போது மனக்கண்ணில் கண்டுகொண்டிருக்கிறேன்.

பாவம்தான் பீமன்.
 
கடலூர் சீனு