அன்புள்ள திரு,ஜெ
வணக்கம்.
காதல்
உணர்வுப்பூர்வமானது, அதை அறிவுப்பூர்வமாக விளக்கமுடியாது என்று இதுநாள்
வரை நினைத்து இருந்தேன். காதலை இத்தனை அற்புதமாக அறிவுபூர்வமாக யாராவது
விளக்கி இருக்கிறார்களா? வெண்முரசு அதை செய்கிறது. எத்தனை எத்தனை காதல்
கதைகள் வாழ்க்கையில், நூல்களில். பொங்கி வந்து மூழ்கடிக்கின்றன.
அர்ஜுனனும், உலூபியும் கொள்ளும் காதல், எல்லாக்காதலும்போல
உணர்வுப்பூர்வமானதுதான். திரௌபதி அர்ஜுனன்மேல் கொள்ளும்காதல்போல, சுபகை
அர்ஜுனன்மேல் கொள்ளும் காதல்போல உணர்வுப்பூர்வமானதுதான். அந்த உணர்வு
எண்ணங்களை ஏழுபடிகளாக்கி, ஏழு உலகங்களாக்கி அறிவுப்பூர்வமாக
பார்க்கவைத்ததில் உலூபின் காதல் அற்புதம்.
முக்தியை நோக்கி
பயணிக்கும் ஒரு யோகியும், காதலை நோக்கி பயணிக்கும் ஒரு காதலனும் வேறு வேறா? இல்லை,
இருவரும் ஒன்றே என்கிறது வெண்முரசு. யோகி மெய்மையில் ஒளியாகிறான். காதலன் மெய்காதலில்
ஒளியாகிறான். யோகி அகத்தில் காணும் அனைத்து உலகத்தையும், காதலன் புறத்தில் காண்கின்றான்.
இரண்டுக்கும் காரணமாகுவது ஒரே சக்திதான். அகத்தில் நாகக்கன்னியாக, புறத்தில் நாகர்களின்
கன்னியாக.
உலகம் என்பது என்ன?
மண்ணும், கல்லும், மலையும், தாவர சங்கமமும், உடல்கூட்டமுமா? உலகம் எண்ணங்களால் ஆனது,
எண்ணங்களின் வண்ணத்தால் ஆனது.
அகத்தில்
உலூபியாகிய
நாகக்கன்னியை மணக்க அர்ஜுனன் ஏழு உலகங்களில் பயணிக்கின்றான். அந்த ஏழு
உலகங்களும் எப்படிப்பட்டது?. ஏழாம் உலகம் குரோதத்தால் ஆனது. ஆறாம் உலகம்
காமத்தால் ஆனது, ஐந்தாம் உலகம் பேராசையால்
ஆனது, நான்காம் உலகம் தாமசத்தால் ஆனது. மூன்றாம் உலகம் அன்பால் ஆனது,
இரண்டாம் உலகம்
மெய்யறிதலால் ஆனது, முதல் உலகம் அறிதல் கடந்த மெய்மையால் ஆனது.
அக உலகத்தை வெல்ல
நான் நான் என்ற விழைவுக்கொண்டு வென்றேன் வென்றேன் என்று சொல்லிச்செல்லும் அர்ஜுனன்
“வெற்றி என்று ஒன்றில்லை எங்கும்” என்பதை மெய்யறிதல் மூலம் அறியும் தருணத்தில் வெண்ணிறப்பேருடல்
பெறுகின்றான். இந்த மெய் அறிதலைத்தாண்டி, அறிதலுக்கும் அப்பால் உள்ள மெய்மை உணரும்
தருத்தில் “ஆவது என்று ஒன்றுமில்லை” என்பதையும் அறிகின்றான். அப்போது ஒளியுடல் பெருகின்றான்.
அவனுக்கான முக்தி கிடைக்கிறது.
புற உலகத்தில்
உலூபியாகிய நாகர்களின் கன்னியை நாடிச்செல்லும் அர்ஜுனன் இந்த ஏழு உலகங்களையும் கடந்துதான்
செல்கிறான். ஒவ்வொரு உலகமும் ஒவ்வொரு எண்ணத்தால் ஆகி உள்ளது. ஒவ்வொரு எண்ணமும் ஒவ்வொரு
உலகம் என்பதை மிக நுணுக்கமாக இன்று உணர்ந்தேன். ஜெ இந்த இடத்திற்கு அழைத்து வந்ததற்கு மிக்க நன்றி.
நீரில் இறங்கிய
அர்ஜுனனை நீரில் மூழ்கடித்து இழுத்துவந்து கரைசேர்க்கும் உலூபி தன்னை வென்றதாக நினைத்து
அவள்மீது முதல் எண்ணத்தால் குரோதம் கொள்கிறான் அர்ஜுனன். உலூபி தன்னை கவர்ந்து
வந்ததால், பெண்ணால் சிறைப்பிடிக்கப்படுவதை தன் ஆண்மைக்கு தோல்வி என்ற எண்ணுகின்றான்.
சினம் கொள்கிறான். இப்பொழுது அவனுக்குள் இருக்கும் எண்ணங்கள் அனைத்தும் குரோதத்தால்
ஆனது. குரோதத்தால் அர்ஜுனன் ஏழாம் உலகம் உருவாகின்றது. அந்த குரோதத்தாலேயே அந்த உலகத்தை
தாண்டி, உலூபியை நீங்கிச்செல்கிறான்.
தன்னை
வென்ற உலூபியை
குரோதத்தோடு நினைக்கும்போதே, இன்று திரௌபதியின் தோழி மாயையின் மூலம்
திரௌபதியை வென்ற
இடத்திற்கு சென்று அவள்மீது பெருகிய பெரும்காமத்தில் விழுகின்றான். அவள்
தனக்கு ஐந்தில்
ஒரு பங்கெனபடைக்கப்படும் இடத்தில் இருக்கிறாள் என்பதை அறியும் தருணத்தில்
சினம்கொள்கிறான், வெதும்புகிறான். காமத்தால் குரோதமும், குரோதத்தால்
காமமும் இங்கு போட்டிப்போடுகின்றன. இங்கு காமம் என்னும் ஆறாம் உலகத்தில்
அர்ஜுனன் இருக்கிறான். பாஞ்சாலி மீது உள்ள காமத்தாலேயே ஆறாம் உலகத்தை
கடந்து செல்கிறான்.
காமம் என்னும்
ஆறாம் உலகத்தை கடந்து செல்லும் அர்ஜுனன், செவிலித்தாயாகிய மாலினி இடத்தில் “இனிவேறு
யாருக்கும் செவிலியாக இருக்கக்கூடாது” என்னும் இடத்தில் அவள் இடத்தில் பேராசை என்னும்
ஐந்தாம் உலகத்தை அடைகிறான்.
நான்காவது
எண்ணத்தால்
மாலினியை பெண் என்ற இடத்தில் வைப்பதா? அன்னை என்ற இடத்தில் வைப்பதா?. பெண்
என்ற இடத்தில் வைத்தால் அவனுக்குள் உள்ள காமம் என்னும் ஆலகாலம்
எழுந்துவரும். அன்னை என்னம் இடத்தில் வைத்தால் அவனுக்குள் உள்ள அன்பு
என்னும் அமுதம் பெருகிவரும். அர்ஜுனனின் நான்காவது எண்ணம் படைக்கும்
நான்காவது உலகம், ஆலகாலமும், அமுதமும் நிறைந்த தமோகுண உலகம். அன்னை எல்லாம்
உடலால் பெண்கள். பெண்கள் எல்லாம் உள்ளத்தால் அன்னைகள். இங்கு அர்ஜுனன் உடல்
குளிர்ந்து
உறைகிறது. கண்கள் கண்ணீர்விடுகிறது. மாலினி அவள் விழிகளால் அவன் உடலை
உள்ளத்தை அறிந்து
அவனுக்காக தன்னை பலியிடுகிறாள். மாலினியின் பலி அல்லது தோல்வி அர்ஜுனன்
வெற்றியாகி,
வெற்றேன் வென்றேன் என்று என்று தாவி மூன்றாம் உலகம் செல்கிறான். மாலினியை
வென்றது மூலமே அர்ஜுனன் மூன்றாம் உலகத்திற்கு செல்லமுடிந்தது. அங்கு
அர்ஜுனன் மாலினியால்
தோற்கடிக்கப்பட்டு இருந்தால் அவன் நான்காம் உலகத்தின் நஞ்சால்நிறைந்து
கீழிறங்கி, நிரந்தரமாக ஏழாம் உலகவாசியாக குரோதத்திலேயே வாழ்ந்து
புழுவென நெளிந்து இருப்பான்.
தனது ஐந்தாவது
எண்ணத்தால் அர்ஜுனன் மூன்றாம் உலகத்தில் நுழைகிறான். இங்கு அன்பு மட்டுமே உள்ளது. அன்னையின்
புனிதம் தெரிகின்றது. மூன்றாம் உலகத்தில் முழுக்க முழுக்க அன்புதான்
உள்ளது. அங்கு அன்னையை காதலிக்கிறான். காதலியை அன்னை வடிவத்தில் காண்கிறான். எங்கும்
அன்பு எதிலும் அன்பு, அன்பின் பேரொளி. இந்த அன்பின் பேரொளியில் அவன் உடல் பொன்னென மின்னுகின்றது.
உடம்புக்குள்ளே உருபொருள் காண்கிறான். காமஉடலழிந்து, காதல்பொன்னுடல் பெறுகின்றான்.
தனது
ஆறாவது எண்ணத்தால்
அர்ஜுனன் தனது இரண்டாம் உலத்தை அடைகிறான். அங்குதான் அவனுக்கு
உலூபியைப்பற்றி மெய்யறிதல் ஏற்படுகிறது. அந்த மெய்யறிதல் மூலம்
பிறிதொன்றிலா நிலையின் கொடுமையை உணர்கின்றான். அது விடம் சென்று
தெரிந்துக்கொள்கிறான். விடம் எதிரியை மட்டும் இல்லை தன்னையும் கொள்ளும்
என்பதை அறிகின்றான். அதன் மூலமாக உண்யான காதலின் நிலை அறிகிறான். உண்மையான
காதல் துயிலவிடாது, காத்திருக்க வைக்கும், பிறிதொன்று
இல்லாமல் அவளும் ஆகிவிடக்கூடும் என்று உணர்கின்றான். அங்கு இடியே ஒரு
தீபமாகி, இந்திரனே
ஒரு தெய்வமாகி தன்னை காத்ததாக நினைக்கிறான். இறைதரிசனம் பெற்ற பக்தனாக
உணர்கிறான்.
அங்கு வான்பொழியும் மழையில் தானது பொன்னுடலும் வெண்ணிறபேருடலாக ஆக
நிற்கின்றான்.
தனது
ஏழாம் எண்ணத்தால்
முதல் உலகத்தை அர்ஜுனன் அடைகிறான். அறிதலுக்கு அப்பால் உள்ள மெய்மையை அங்கு
கண்டுக்கொள்கிறான்.
அர்ஜுனன் நினைப்பதுபோல் உலூபி அந்த இடத்தைவிட்டு நகர்ந்துக்கூட
செல்லவில்லை. அங்கேயே
அவனுக்காக அந்த மழையில் அசையால் நிற்கின்றாள். அவன் நினைவுக்கும்
கற்பனைக்கும் எட்டாத
காதலி.மெய்மையின் வடிவம் அவள். மெய்மை அறிதலுக்கு அப்பால் பட்டது, எந்த
எண்ணத்தாலும்
அது வடிவமைக்கப்படுவதில்லை. அது உண்மை, உண்மை மட்டும். அதற்கு எந்த
விளக்கமும் யாரும்
தரவேண்டியது இல்லை. அங்கு எண்ணங்கள் அற்றுப்போகின்றன, உண்மை மட்டும்
அசையாமல் இரு்ககிறது.
உலூபிக்கூட அங்கு உண்மையாக, அறிதலுக்கு அப்பால் உள்ள மெய்மையாக
இருக்கிறாள். அர்ஜுனன்
இடம் வார்த்தை ஏது? பெரும்மழையில் வெண்ணொளி
நாகமென அவள் ஆயிரம் மடங்கு வளர்ந்து நிற்கின்றாள். உலூபி நிரந்தரமாக முதல்
உலகத்தின் காதல் ஒளியில் நிற்கிறாள். அர்ஜுனன் ஏழாம் உலகத்தில் இருந்து
மேல் வருகின்றான். ஏழுாம் உலகத்தைவிட முதல் உலகம் பல்லாயிரம்
மடங்குபெரியது. உலூபியை நோக்கி திரும்பும் அர்ஜுனன் பெரியவனாகத்தெரிந்தான்
ஆனால் உலூபியின் முன் அர்ஜுனன் ஒரு பொன்கொன்றை மலரென
அணுவாகிநிற்கின்றான். அந்த அடர் காட்டிலும்,
மழையே ஒரு காடாகி நிற்கும் அடர்மழையிலும் உலூபி ஒளியாகி மின்னுகின்றாள்.
அங்கு இரண்டு
காடுகள் உள்ளன. அந்த இருக்காட்டிலும் மறைக்கப்பாடாத ஒளியாக உலூபி
நிற்கின்றாள். அவளை
அடையும் இடத்தில் அர்ஜுனனும் ஒளி உடல்பெறுகின்றான்.
இனி என்னச்சொல்ல?
இந்த முத்திக்கு பின்னும் அர்ஜுனன் கடந்து செல்வான்.உண்மையிலேயே அர்ஜுனன் தன் உடம்பை சிறு அம்பென ஆக்கி இருள் மையத்தில் பாய்ந்ததன் பயன் மட்டும் பெறுவான்.
விழிதிறந்தபோது
தன் உடல் ஒளி வடிவாகி அங்கிருந்த பிற உடல்களின் ஒளி எதிரொளித்துக் கொண்டிருப்பதை கண்டான்.
“அரவு ஏகும் முழுமை இது மானுடனே. எய்தற்கரிய உச்சமொன்றை அடைந்தாய், இங்கிருப்பாய்”
என்றது ஒளிப்பெரு நாகமான ஸ்ருதன். “கடந்து செல்வதற்கே இங்கு வந்தேன்” என்றான் அர்ஜுனன்.
“எங்கும் அமர்வதற்கு எனக்கு ஊழ் அமையவில்லை.”-காண்டீபம்-12.
உணர்வு என்பது
அறிதலுக்கும் அப்பால் உள்ள மெய்மை, அதை அறிவால் அணுகமுடியாது என்றுதான் எண்ணுகின்றோம்
அதனால் உணர்வு அறிவற்றது என்று நினைத்துவிடுகின்றோம். உணர்வு என்பது அறிவின் ஏழுபடிகளைத்தாண்டி
தூய்மையில் நிற்கின்றது என்பதை இன்று அறிகின்றேன். அறிவைவிடவும் தூய்மையான மெய்யறிவுதான்
உணர்வு.
காதலில் மூழ்குபனும்,
கடவுளில் மூழ்குபனும் ஏன் ஒரு இடத்திற்கு செல்கின்றார்கள் என்று இன்று தெரிகிறது ஜெ.
உலூபியின் கதைவழியாக ஒரு தெய்வீக காதலைப்படைத்துவிட்டீர். தெய்வீக காதல், தெய்வீகக்காதல்
என்பது இதுதான்.
லைலா மஜுனு கதையில்,
ஒருநாள் பள்ளியில் தொழுதுக்கொண்டு இருந்த மஜுனு, ”லைலா,.. லைலா..” என்று தொழுகையில்
இருந்து எழுந்து, தொழுபவர்களை மிதித்துக்கொண்டு ஓடினானாம். அவனை பிடித்துவந்து ஏன்
இப்படி எல்லோரையும் மிதித்தாய் என்று கேட்டதற்கு. “நான் எங்கு ஓடினேன், தொழுது கொண்டுதான்
இருந்தேன். நீங்கள் யாரும் தொழுகையில் இல்லை அதனால்தான் நான் மிதித்துக்கொண்டு ஓடினேன்
என்கறீர்கள்” என்றானாம்.
முத்தியும், காதலும்
மனிதனை ஒளியாக்கிவிடுகிறது. எண்ணங்களால் ஆன ஏழு உலகங்களையும் அது அடித்து நொறுக்கிவிடுகிறது.
நன்றி
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.