Monday, September 21, 2015

செடியை விருட்சமாக்குதல்




திடுக்கிட்டு விழித்து “பாக்கிறியா..பாக்கிறியா..வைத்த அடி புரட்டாம உதைப்பேண்டா” என்று கனவில் உளறும் உறவினரின் வார்த்தைகளைக் கேட்டு குழம்பிப்போனேன்.  வச்ச அடி புரட்டாம உதைக்கிறதுன்னா என்ன? என்று புரியவில்லை. அவரிடம் கேட்பது நாகரீகமாக இருக்காது. அவர் ஊருக்கு சென்றபின்பு அப்பாவிடம் கேட்டேன்.

அப்பா சிரித்துக்கொண்டே “அவன் அவ்வளவு பெரிய வீரனாம், எல்லாம் கனவில்தான்” என்று கூறிவிட்டு. “நீபோயி படிக்கிற வேலையப்பாரு. தேவையில்லத ஆராட்சிப்பண்ணிகிட்டு” என்று விரட்டினார்கள்.

எனக்கு புரிந்துவிட்டது. வீரனாக இருக்கமுடியாத உடலில் வாழும் மனம் இரவில் என்ன செய்யும் என்பது.
விதைக்குள் இருக்கும் ஆலமரமும், செடியாக முளைத்த ஆலமரமும், மரமாக ஆகிவிட்ட ஆலமரமும் உயிரில் ஒன்றுதான் அதன் உணர்வு ஒன்றுதான் அதற்கு மனம் இருந்தால் அந்த மனமும் ஒன்றுதான். ஆனால் விதையின் உடல்வேறு, செடியின் உடல்வேறு, மரத்தின் உடல்வேறு. எல்லை அற்ற ஒன்றை ஒரு எல்லைக்குள் வைக்கும்போது அது அந்த எல்லையை உடைக்க அது துடிக்கிறது. அந்த எல்லை வலுவானதாக இருந்தால், எல்லை அற்ற அந்த சக்தி. அந்த எல்லைக்கு சேவகம் செய்கிறது.

உடம்பினை முன்னம் இழுக்கென்று இருந்தேன்
உடம்புக்குள்ளே உறு பொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில் கொண்டானென்று
உடம்பினை யான் இருந்து ஓம்புகின்றேனே-  என்று திருமூலர் சொல்கிறார். 

எல்லை அற்ற சக்திக்கு எல்லையாக வந்து இருக்கும் உடம்பு வலுவானதாக இல்லாவிட்டால், அந்த சக்தி உடம்பைக்கொண்டு செய்யும் அனைத்தையும் மனதைக்கொண்டு செய்து கனவாக தனது ஆடலை நடத்துகின்றது. கனவாகவோ நினைவாகவோ அந்த சக்தி தனது நடனத்தை நிறுத்துவதே இல்லை. சுஜயன் வேறு யாரோ அல்ல நமமேதான், நம் உடலும் மனமும்தான்.  சுஜயனை நெருங்கிப்பார்க்கையில் உடலும், மனமும் சமன்செய்யப்படவேண்டியதன் நுட்பம் அழகாக வெளிப்படுத்தப்படுகிறது.

உயிர் வாழ்க்கையில் எடுத்த எடுப்பிலேயே உடல் பலமானதாக இயற்கையாக கொடுக்கப்படவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக வளரும் வகையில்தான் வரம் கொடுக்கப்பட்டு உள்ளது. ஆனால் குழந்தைக்கு என்று ஒரு உயிர் ஓட்டமோ, பெரியவருக்கு என்று உயிர் ஓட்டமோ இல்லவே இல்லை. உயிர் சக்தி தான் அடங்கி இருக்கும் உடலை உள்ளுக்குள் இடித்துக்கொண்டே இருக்கிறது. அந்த இடியை தாங்கிக்தாங்கிதான் உடல் பலம்பெற்றுக்கொண்டு இருக்கிறது. உயிர்போல உடலும் முழுதும் படைக்கப்பட்டு உலகுக்கு அனுப்பப்பட்டா எப்படி இருக்கும்? இறைவன் கவிஞன்டா. கவிதையை அவன் கட்டுப்பாடு இன்று வளர வைக்கிறான். 

பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் ஆன்ம சாதனைபுரிபவர்கள் முதலில் தக்ககுருமார்களின் பாதுகாப்பில் சாதனைகள் புரியவேண்டும் என்பதை விளக்க சொல்லும் உவமை இங்கு நினைவில் எழுகின்றது. ”வீதியில் வளர்க்கப்படும் மரங்களை ஆடுமாடுகள் தின்றுவிடாமல் இருக்க வேலிக்கட்டி வளர்க்கவேண்டும், அவைகள் வளர்ந்தப்பின்பு  யானையே அதில் கட்டிவைக்லாம்” என்று சொல்வார்.

சுஜயன் போன்ற குழந்தைகளின் வளர்ப்பு எத்தனை அவசியம் ஆனது என்பது இங்கு தெரிகின்றது. குழந்தைகளை பெற்றுவிட்டாள் வளர்ந்துவிடும் என்று நினைப்பது அவர்களின் கனவுகளையும், அந்த கனவுகள் தங்கும் உடலையும் அழிப்பதற்கே சமம்.

ஆண்குழந்தைகள் வளக்கையில் வாளும் இடக்கையில் காமமும் கொண்டவர்கள் என்று மாலினிச்சொல்லும்போது அதிர்கின்றது உள்ளம். திரிசூலம் ஏந்திய மகாதேவன் இடத்தில் சக்தியை அனைத்துக்கொண்டு நிற்கிறான்.  எத்தனை பெரிய பொறுப்பு பெற்றவர்களுக்கு இருக்கிறது. பெற்றக்குழந்தையை மகாதேவன் ஆக்கவேண்டிய பொருப்பு பெற்றவர்களின் கடமை. இந்த பொறுப்பை தட்டிக்கழிக்கும் பெற்றவர்களால் முரடர்களும், காமுகர்களும் வந்து சமூகத்தில் நிறைந்துவிடுகிறார்கள்.

ஒரு குழந்தையை வீரனாகவும், காதலனாகவும் வளர்க்க பெற்றவர்கள் எந்த முயற்சியும் செய்யவேண்டியது இல்லை, பிள்ளைகளுக்கு வேலியாக அரணாக இருந்தால்போதும், குழந்தைகளின் கனவுகளே அவர்களை வீரர்களாகவும் காதலர்களாகவும் வடிவமைத்துவிடும். பெற்றவர்கள் அப்படி இல்லாதபோது சமுக ஆடுகள் மேய்ந்த மொட்டையான முள்ளான செடிகள் சமுகத்தை குத்திக்கிழிக்கிறது.

சுஜயன் சுபகையை கெட்டவள் என்றும், உன்னை வெட்டிக்கொள்வேன் என்று சொல்லும் இடத்திலும் குழந்தையின் உளவியல் அறிந்து அதிர்ந்தேன். இதை குழந்தையின் உளம் என்று சொல்வதைவிட திடம்பெறத உடல் கொண்ட  உள்ளத்தவர்கள் உளவியல் என்று சொல்லலாம்.

தனிமனித ஒழுக்கத்தில் வழுக்கிய சிலர்கள்  தனது குடும்ப பெண்களை கட்டுப்பாட்டு எல்லைக்குள் அதிகமாக வைப்பதைப்பார்த்து இருக்கிறேன். ஏன் இந்த மனநிலை? பிறபெண்டீர்களை குறைவாக மலிவாக மதிப்பிடுவதும் பலகீனமாக எண்ணுவதும் ஏன்? தங்கள் பெண்கள் உயர்ந்தவர்கள் என்ற மனம் எதனால் ஏற்படுகிறது.   சுஜயன் சுபகையை கொல்வேன், வேட்டுவேன் சொல்லும்போதுதான் முன்கேள்விக்கு பதில் கிடைத்தது. தன் ஒழுக்கம் தவறியவர்கள் பெண்களின் ஒழுக்கதை வலியுறுத்துகிறார்கள். தான் திருந்தவேண்டும் என்பது அவர்களுக்கு தெரியவில்லை. பெண்களுக்கு மட்டும்மே கற்பு, பெண்களை அவர்கள் உடலாக மட்டுமே நினைக்கிறார்கள். உடலாக மட்டுமேப்பார்க்கிறார்கள், உடலாக மட்டுமே பழகுகிறார்கள். உடலாக மட்டுமே வாழவைக்கிறார்கள். உடலாக மட்டுமே கொன்றும்போடுகிறார்கள். அவர்கள் சுஜயன்போல இறக்கத்திற்கு உரிய குழந்தைகள் மட்டும்.

ஜெ ஒரு கடிதத்தில் “இலக்கியங்கள் படிக்கும்தோறும் நாம் உடல் சார்ந்தவர்கள் அல்ல என்பதை உணர்கிறோம்” (சரியாக சொல்கின்றேனா?)  என்று சொல்கின்றார்கள். மானிடர்கள் உடல்சார்ந்தவர்கள் அல்ல என்ற நிலை ஏற்படும்போதுதான் ஆண்பெண் வேற்றுமை குறைகிறது. உடல்மீது கொண்ட காமமும் குறைகிறது. சுஜயனுக்கு சுபகை என்பள் உடல் மட்டும்தான். முதிரா மனம் படைத்தவர்களுக்கும் பெண் என்பவள் உடல் மட்டும்தான். தன்னை காதலிக்கவில்லை என்று சொல்லும் பெண்மீது ஆசிட் வீசுவதெல்லாம் சுஜயனின் குழந்தை மனப்பாங்குதான். பெண் என்பவள் அவனுக்கு உடல்மட்டும்தான். அந்த உடலோடு கொள்ளும் பிணைப்பே அவர்களுக்கு பெரும் காதலும் காமமும் வாழ்க்கையும். அதைத்தாண்டி அவர்கள் பெண்ணின் இதயத்தோடு உறவாடும் எந்த கலைநயமும் இல்லாதவர்கள். அந்த கிளைக்குள் இருக்கும் பூவும் கனியும் அவர்களுக்கு விலைபொருட்கள் மட்டும். 

க்ரியை இடத்தில்பிரந்த சுபாகுவின் மகன் சுஜயன் சுபகையிடம் வளர்கிறான். இந்த பெயர் பொருத்தமே ஒரு தத்துவ விளக்கமாக அமைந்து உள்ளது. சுபகையை அர்ஜுனன் முத்தமிடும்போது அவள் புன்னகையில் மகிழ்ந்து முத்து என்று சொல்லி இருப்பான் என்றுதான் நினைத்தேன். எயினி என்று சொன்னான் என்பதுதான் பொருளுக்குள் பொருள்காணும் அழகு. மூன்றாவது விழிக்கொண்ட இறையனாருக்கு சண்பகப்பாண்டியன் சந்தேகம் சொல்லாமலே தெரிந்தது. உத்திரவிழிமாலை அணிந்த மாலினிக்கு சுபகை சொல்லாமலே அவள் ரகசியபெயர் தெரிந்தது.  

கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்
செறியெயிற் றரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீயறியும் பூவே-இறையனார்.

மயிலியல் செறியெயிற் என்பதை சுபகையிடம் அர்ஜுனன் கண்டு உள்ளான்,  இல்லை என்றால் எப்படி எயினி என்று பெயர் வைப்பது?  

சுஜயனுக்குள் உள்ள வாளையும் பூவையும் அறியும் மாலினிப்போன்றவர்கள்தான் அவனுக்கு சரியான வேலி, தக்க நேரத்தில் அவனை வெளியே தூக்கிச்செல்லுங்கள் என்ற இடத்தில் காவல் நிற்கிறாள்.  

நன்றி
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.