Tuesday, February 2, 2016

பூடகமான அத்தியாயம்



மிக பூடகமான அத்தியாயம் இன்று. இதற்கிணையாக வெண்முகில் நகரத்தில் சல்யருக்கும் பூரிசிரவசுக்கும் அவையில் நடக்கும் உரையாடலைக் கூறலாம். ஆனால் அங்கு அதற்கு முன் நிகழ்ந்த தொடர் சம்பவங்களின் இறந்த காலம் பின்புலமாக உள்ளது. ஆதலால் சொற்களின் அடியிலுருப்பதை தெளியாகக் காண முடிகிறது.

ஆனால் இன்றைய அத்தியாயம் எதிர்கால சம்பவங்களின் பூடகப் பேச்சாக உள்ளது. இதை கூட்டு வாசிப்பின் மூலமே அனைத்து அர்த்தத் தளங்களையும் கண்டடைய முடியுமென நினைக்கிறேன். என் வாசிப்பு இது.

குடியிலும் அன்றாட அரச முறைமைகளிலும் சலித்து அமர்ந்திருக்கும் துரியோதனனின் ஆழ்மனம், இந்திர பிரஸ்தத்திற்கான அழைப்பு வந்தவுடன் தன் பகையைக் கண்டு கொள்கிறது. ஆனால் மேல் மனம் அதை பெருந்தன்மையாகவும் உறவுப்பாசமாகவும் மாற்றி வைத்துள்ளது. பெருவெள்ளத்தை தேக்கி வைத்திருக்கும் கார்முகில் போல. அதையே அரச நாகமாக சகுனி சுட்டிக் காட்டுகிறார்.

சிறுமைப்படும் பெருந்தன்மைக்காரனிடம் எழும் வஞ்சத்தின் விசை அளப்பரியது.

கர்ணனும் ஒரு அரச நாகம் தான். ஆனால் ஓயாமல் அதனிடம் சமரிடுபவன். சில அத்தியாயஙள் முன்பு அது சொல்லப்பட்டிருக்கும். திரும்பத் திரும்ப நாகம் சொல்லும் 'எளிது, மிக எளிது' என. ஒரு கணம் போதும் தன் உள்ளிருக்கும் ஷத்ரியனை தொட்டெழுப்ப. மொத்த பாரத வர்ஷமும் அவன் காலடியில் கிடக்கும். 

கணிகரின் எண்ணம் இரு நாகங்களையும் ஒரு சேர இந்திரப்பிரஸ்தம் அனுப்புவதே. 

இந்த அத்தியாயதின் உச்சமென நான் கருதுவது சிவதரின் சொற்களை. 'உண்மை என்பது தீமையின் படைக்களமாகும் மாயத்தை'..
என்றாயினும் இரு தரப்பினருக்குமிடையே பகை மூழும். ஆனால் கணிகர் விரும்புவது உடனடியாக. ஆகவே கர்ணனையும் உடன் செல்லச் சொல்கிறார்.
அதற்காக கர்ணனிடம் அடுக்காக காரணங்களைச் சொல்கிறார். அத்தனையும் பேருண்மைகள்.

உண்மையில் கணிகரின் எண்ணம் துரியோதனின் அவமதிப்பை நிச்சய நிகழ்வாக மாற்றவே கர்ணனை உடன் செல்ல வலியுருத்துகிறார். அவருக்குத் தெரியும் கர்ணன் உடனிருக்கையில் பாஞ்சாலி எப்படி எதிர்வினையாற்றுவாளென.

- பாலாஜி பிருத்விராஜ்