Tuesday, February 9, 2016

காளிந்திப்பெருக்கு



மிக மிக அடர்வான ஒரு அத்தியாயம் வெய்யோன் 47. வரி வரியாக, வார்த்தை வார்த்தையாக அனுபவிப்பதற்காகவே எழுதப்பட்ட ஒரு அத்தியாயம். பிரயாகையின் 'சர்வகல்வித மேவாஹம்' அத்தியாயத்தை நினைவூட்டும் எழுத்து. அங்கும் ஒரு தேவிக்கான அவிசாகத் தன்னைப் படைக்கும் ஒரு காதலன். இங்கும் தேவியின் வருகையுணரும், அவள் செல்லும் வழியுணரும் ஒரு  கையறு நிலைக் காவலன். இரண்டிலும் தேவியாக திரௌபதி.

வெண்முரசின் நீர் வர்ணனைகளில் தனித்துவம் வாய்ந்த வர்ணனைகள் அளிக்கப்பட்ட நதி காளிந்தி என்ற யமுனை. கிருஷ்னையின் நிறம் என்பதால் அவளை மட்டும் ஜெ விதம் விதமாக வர்ணித்து தள்ளியிருக்கிறார். இன்றும் முதல் இரு பத்திகளும் காளிந்திக்கே சமர்ப்பணம். அதிலும் இவ்வரிகள் "செஞ்செப்பு மூடிதூக்கி செங்குருதி விழுதள்ளிப்பூசி நீவிவிட்ட வஞ்சக்கருங்குழல். இவ்வந்தியில் நீ அள்ளியள்ளிப்பூசும் இக்குருதி மேற்கே செஞ்சதுப்பில் தேர்புதைந்து தனித்திறப்பவனின் நெஞ்சுபிளந்து ஊறும் வெம்மை. கனல். கனலென்றான நீர்மை." - அப்பப்பா எங்கெல்லாமோ செல்கின்றன.

இயல்பாக ஊற்றுமுகம் துவங்கி, நாவாய்கள் வழியாகச் செல்லும் வர்ணனை சட்டென்று கூந்தலுக்கு மாறுகையில் வருகிறாள் திரௌபதி, பாஞ்சாலி, கேசினி அன்னை ஆலயத்தில் கேசத்தில் செஞ்சாந்திடப் பட்ட கருங்குழலி. அச்சாந்து தேர் புதைந்து இறந்து கொண்டிருக்கும் கர்ணனின்  நெஞ்சத்தூறிய வெங்குருதி!! சில கணங்கள் இவ்வரிகளிலேயே நின்று விட்டேன். ஜெ அபாரம்.

அன்புடன்,
மகராஜன் அருணாச்சலம்