Friday, September 23, 2016

தருமன்



  

அன்புள்ள ஜெ,

மனிதனுக்கு புறத்தில் பருப்பொருளாக இருக்கும் அனைத்தும், மனிதன் அகத்திற்குள் நுண்பொருளாக இருக்கின்றது. மனிதன் புலன்கள் வழியாக பருப்பொருள் பருப்பொருள் என்று தாவித்தாவிச்சென்று வாழ்கின்றான். நினைவுமனம் இதை நடத்திச்செல்கிறது. நினைவு மனம் இப்படி நிகழ்த்தும்போது கனவு மனம் என்ன செய்துக்கொண்டு இருக்கும்? கனவு மனம் நுண்பொருள் நுண்பொருள் என்று தாவிச்சென்றுக்கொண்டே இருக்கும்.

நினைவு மனத்தின் பின்னால் செல்லும் மனிதனுக்கு வழிகிடைக்கிறது எல்லையும் தெரிகிறது. நுண்மனத்தின் பின்னால் செல்லும் மனிதன் வழியின்றி சென்றுக்கொண்டே இருக்கிறான், தான் செல்கிறோம் என்பதை அறியவும் முடியாமல் ஆனால் பயணமும் நில்லாமல் சென்றுக்கொண்டே இருக்கிறான், இது அல்ல இது அல்ல என்று அகம் சொல்லச்சொல்ல சென்றுக்கொண்டே இருக்கிறான். ஒரு பித்து அவனை வந்து அடைந்து ஆட்டுவிக்கிறது.

அரணிக்கட்டைக்காக மான்பின்னால் செல்லும் தருமன் கனவுமனத்தின் வழியில் பயணிக்கின்றான். உண்மையில் தருமன் பயணிக்கவில்லை தருமனாகி நிற்கும் பாண்டு பயணிக்கின்றான். தான் எரித்த நாரைக்கா கொங்கனவர் கண்ணீர்விட்டு நாரைகளை உயிர்பிக்கம் தருணம் ஒன்று வருகின்றபோதுதான் நுண்மனத்தின் பயணத்தின் பிடிக்கிடைத்தது. .

தருமனாகி நிற்கும்பாண்டு இன்று பயணிப்பது தான் கொன்ற மானை பிழைக்க வைக்க. பாண்டு அன்று மானைக்கொன்றது அதன் கண்களில் தெரிந்த காமத்தின் நிறைவை அறிந்ததால். அன்று பாண்டுவிற்குள் நஞ்சைவிதைத்தது அந்த மான்கண்கள். இன்று பாண்டுவாகி நிற்கும் தருமன் தானே ஒரு மானாகி விடாய் கொண்டு திரிகின்றான். தருமன் பிறப்பதற்கு முன்பே பாண்டு மானைக்கொன்றான் இருந்தும் அந்த செயலின் நுண்வடிவம் இன்று தருமன் கனவுக்குள் படிந்து இருக்கிறது. தருமன் அந்த ஏரியில் சித்ராங்கதனைக்காண்பது பாண்டுவாகித்தான். நுண்மனம் ஒரு மனிதனுக்குள் பயணிக்கும் திசை எது? ஏன்? என்பது தெரியாமல்தான் ஒவ்வொரு மனிதனும் தனக்குள் போராடிக்கொண்டே இருக்கின்றார்கள். இந்த கதை அம்சம் அற்புதம் ஜெ. எதை சொல்லவந்தீர்களோ அதை அழகாக ஆழமாக சொல்லிவிட்டிர்கள். பருப்பொருளாக நினைவுநிலையில் ஒரு மனிதன் ஒருவன்தான். நுண்பொருளாக கனவுநிலையில் ஒருமனிதன் ஒருவன் மட்டும் அல்ல என்பதை தருமன் பாத்திரம் வடித்து எடுக்கின்றது. ஏன் தருமனை கனவில் ஆழ்த்தி இந்த கதையை நகர்த்துகின்றீர்கள் என்பது இப்போது புரிகின்றது.

//இணை கொல்லப்பட்ட பின் இத்தனை தொலைவுக்கு ஓடிவந்துள்ளது அது. அதன் கால்தடங்களில் குருதிச்சொட்டுகள். செந்நிறமான கூழாங்கற்களாக அவை உருண்டிருந்தன.//

கந்தமாதனம் சென்று தனது வஞ்சத்தை தீக்கிரையாக்கி வெந்து மீளும் தருமனை முதலில் காணும் சகாதேவன் முதலில் அவரை மான் என்றுதான் நினைத்தான். எத்தனை அற்புமான காட்சி அமைப்பு. பருப்பொருள் நுண்பொருள் ஆகின்றது. நுண்பொருள் பருப்பொருளாகின்றது. பருப்பொருள் நுண்பொருள் ஆகும்போது பருப்பொருள்போல் நுண்பொருள் காலஇடவெளியும் வேற்றுமையும் கொண்டு இருப்பதில்லை. எல்லாம் ஒன்று என்று நிருபித்துக்காட்டுகின்றது.

கொங்கனவரால் எரிக்கப்படும் நாரை பாருப்பொருளில் வேறு ஒன்று. நுண்பொருளில் வேறுவேறு நரையில்லை. வெட்டப்படும் வெள்ளாடும் நாரையும் ஒன்றுதான். ஒரு தவம் ஒரு நாரையை எரிக்கின்றது. ஒருதவம் பலநாரையை எழுச்செய்கின்றது. இரண்டுமே தவம்தான் தவத்தின் வடிவம் மாறிவிடுகின்றது. முன்னது விழைவின் வழியோடிய தவம். பின்னது விழைவை அவித்த தவம். முன்னது பருப்பொருளைக்காணும் நினைவுமனத்தின் வடிவம். பின்னது நுண்பொருளைக்காணும் ஆழ்மனத்தின் வடிவம்.

நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு. –என்கிறார் திருவள்ளுவர்.

தருமன் தனக்குள் நிறைந்து இருக்கும் பாண்டுவின் அறமீறலை கந்தமாதனமலை தவத்தில் வைத்து எரிக்கின்றான். அறிந்தே செய்கின்றானா  அல்லது காலம் அவனை அப்படி செய்யச்சொல்கின்றதா? அரணிக்கட்டையை மான் எடுத்துச்செல்லும் காட்சிவழியாக ஆழ்மனஓட்டத்தில் இருக்கும் சிடுக்குகளை அறுக்கின்றீர்கள் ஜெ. முற்றும் புதுமையான மனநிலையோட்டம்.  அந்த மான் அரணிக்கட்டையை தாங்கி உள்ளதால் பிராமணன், அந்த மானைக்கொல்லக்கூடாது என்று தருமன் கண்டுக்கொள்ளும் இடம் அற்புதம்.

அனல் உண்ணும் மான். எத்தனை சரியான சொல்லாட்சி. தருமனின்ப மனதில் அந்த மான் அனலுண்டு ஓடிக்கொண்டே இருக்கிறது. பொருளாக வரும் செயல் நுண்பொருளாக மாறி ஜென்மங்களை கடக்கின்றது இந்த மான் தருமனின் அகத்தில் இன்றுவரை ஓடிக்கொண்டு இருக்கிறது. தருமன் வஞ்சத்தை நோய் என்கிறான். இந்த வஞ்சநோய் பாண்டுவைப்பற்றியதால்தான்  அவன் அந்த மானை அன்று கொன்றான். இன்று அந்த மான் தீப்பொதிந்த அரணகிக்கட்டையை யட்சகர்கள் முன்னால் விட்டு சென்றுவிடுகிறது. தருமனை விட்டு  அந்த மான் சென்றுவிடுகின்றது. அவசரப்பட்டு தருமன் அந்த மானை கொன்று இருந்தால் தருமனும் பாண்டுவாகி வஞ்சம்தீரா நோயில் விழுந்தவன் ஆவான். தருமனுக்குள் இருமான்கள் நுண்பொருளாகி  ஓடிக்கொண்டு இருக்கும்.  தருமன் வென்றதால் பாண்டும்வென்றவன் ஆகின்றான்.

//‘பசியென, காமமென, வெற்றியென, புகழென, எஞ்சிநிற்றல் என உருக்கொண்டாடும் அப்பெரும் நிறைவின்மையால் ஆட்டிவைக்கப்படும் பொருண்மையின் அலைக்கழிவையே வெளியே புடவியெனக் காண்கிறோம். உள்ளே சித்தமென அறிகிறோம்.’//

வெளியே புடவி என்றும் உள்ளே சித்தம் என்றும்  நடக்கும் ஆடலை தருமன் பாண்டுவாகி அறிகின்றான். கொங்கனவர் கொங்கனவராகவே இருந்து அறிகின்றார். அறிதலில் வரும் ஞானம் இருவரையும் அமுதமாக்கிவிடுகின்றது.  

அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.