Sunday, September 25, 2016

யட்சனின் கேள்விப்பதில்




அன்புள்ள ஜெ, 

யட்சனின் கேள்விப்பதிலில் உள்ளது உங்களின் கடும் உழைப்பு. வியக்காமல் இருக்கமுடியவில்லை. பருவெளியழிந்து பெருவெளியிலேயே இவ்வுசாவல் நிகழமுடியும் என்ற யட்சனின் வாக்கை மெய்பித்து உள்ளீர்கள். இங்கு அனைத்தையும் திரிபடைய செய்யும் காலம் இல்லை அல்லவா? என்ற ஏணியல் ஏறிக்கொண்டே இருக்கிறீர்கள். சித்தத்திற்கு ஏது காலம்?  
காலம்தான் அனைத்தையும் திரிபடைய செய்து பருப்பொருளாகி வைக்கிறது. காலம் உடையும்போது சித்தத்தில் எல்லாம் பெருவெளியாகி ஒரு சுனையாகி தேங்குகின்றது. தருமன் காலவெளியில் பருப்பொருளாக நின்று பாண்டு உடன் உரையாடியது, துரோணர் உடன் கல்விக்கற்றது, பீஷ்மருடன் நூல் ஆய்ந்தது, அர்ஜுனனுடன் நடைபயின்றது, நகுலனுடன் விளையாண்டது,குந்தியின் வயிற்றில் கருவாகி இருந்தது, திரௌபதியுடன் முத்தமிட்டு காதல்கொண்டது, கண்ணன் என்னும் கள்வன் நெஞ்சத்தில் ஏறி மெய்மையென நின்று ஞானக்கண்ணனாக மொழிந்தது, தருமன் தந்தையாகி தன் மைந்தனுக்கு அறிவு புகட்டியது. குந்தியுடன் அறம்பேசியது. திரௌபதியுடன் வழக்காடியது. கண்ணனுடன் காலடி அமர்ந்து அனுபவம் கேட்டது என்று அவன் வாழ்வின் பருப்பொருள்கள் சித்தத்தில் சொற்களாய் சொட்டிச்சொட்டி கேள்வியும் பதிலுமாகி மெய்மையாகி வழிகின்றது. அது ஒரு கொதிக்கும் கந்தமன சுனை. பிறந்து உண்டு உடுத்தி ஈன்று இறந்துப்போகின்றவர்கள் அனுக முடியாத சுனை அது. கேள்விப்பதிலால் ஆன சுனை. அனுபவங்கள் தேங்கிய கேள்வியை தேடும் சுனை அது. தருமனின் அனுபவ பதில்கள் கொதித்து கொதித்து அவனை விடாய் கொள்ளச்செய்து கேள்வி கேட்க வைக்கும் சுனை.  அது ஒரு ஞானம்தேடும் காலம். அந்த காலத்தில் அவனுக்கு யட்சனின் காட்சி. தன்னையே மீனிலிருந்து மனிதனாக்கிக்கொள்ள ஒரு வாய்ப்பு. 
//“நான் வேதம் கற்றேன். மெய்யுசாவினேன். ஆனால் மெய்மையை அறிந்தேன் என்று சொல்லமுடியாது. மீன் நீரிலென அதில் நான் இருப்பதை உணர்ந்துகொண்டிருக்கிறேன். அது நானாகிவிட்டதா என்று அறியேன்என்றார் தருமன்.//

தசாவதாரத்தில் மீன் ஆமை பன்றி சிம்மம் குறள் பரசுராமன் ராமன் பலராமன் கண்ணன் கல்கி என்பதுபோல், பாண்டுமகன் மீனாய் உலவும் சித்தத்தில் இருந்து மெய்ஞானியாய் பிறப்பெடுக்கும் அற்புதம் இந்த கதைப்படைப்பு. 

யட்சன் கேள்விக்கேட்கும் இடத்தில் ஒரே ஒரு கேள்வியை மட்டும் யட்சன் கேட்பதுபோல் வைத்து, மீதிக்கேள்விகளை அவன் வாழ்வில் கண்டுக்கொண்ட தருணங்களைக்காட்டி நிறைவுச்செய்கின்றீர்கள். யட்சனின் ஒரே கேள்வியும் அற்புதமான ஒன்று அறம்பொருளின்பம் என்ற  மூன்றையும் ஒன்றுபடுத்தி வாழ்க்கையை வீடுபேற்றிற்கு உயர்த்திவிட்டீாகள். 

//அறம், பொருள் இன்பம் மூன்றும் ஒன்றுக்கொன்று எதிரானவை. அவை எப்படி இணையமுடியும்?”  
மனைவியும் அறமும் சேர்ந்து அமையலாகுமென்றால் இணையாதது எது?”
என்றபின் கண்களை சற்றுநேரம் மூடினார். பின்பு திறந்து நாரையிடம்மூன்று
கற்கள் நடுவே அடுப்புத்தீ எரிவதுபோலஎன்றார்// 
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது-என்கின்றார் திருவள்ளுவர்.

மனிதன் என்பவன் யார்? பகுத்து அறிபவன் மனிதன். பகுத்து அறிதல் என்பது எங்கு நடக்கிறது? யாரால் நடக்கிறது? எப்போதுமே நடக்கிறது. தனக்குள்ளேயே நடந்துக்கொண்டே இருக்கிறது. பகுத்தறிவதற்காக ஒரு யட்சன் வந்து நின்று எந்த கேள்வியையும் கேட்பதில்லை. கேட்காவிட்டாலும் அது நடந்துக்கொண்டே இருக்கிறது. யட்சன் வந்துக்கேட்கும்போது கேள்விக்கான பதிலை அது தனது சேமிப்பில் இருந்து எடுத்து அள்ளிவிடுகிறது. 

மண்ணைவிட எடைக்கொண்டவர் யார்? விண்ணைவிட உயர்தவர் எவர்? என்ற வினா வரும் என்பதை குந்தியின் வயிற்றில் உட்கார்ந்து தருமன் மனப்பாடம் செய்யவில்லை, மண்ணைவிட எடைக்கொண்டவள் தாய், விண்ணைவிட உயர்ந்தவர் தந்தை என்பதை அனுபவமாக குந்தியின் வயிற்றில் உட்கார்ந்து அறிந்து வெளிவருகின்றான் தருமன். அவனுக்கு பதில் முன்னமே உள்ளது கேள்விதான் பின்னால் வருகின்றது.
சூரியனை எழச்செய்வது எது? அதற்கு அப்பால் எழும் இன்னொரு பெரும் சூரியன்.” என்பதை தான் எழுவது பாண்டுவில் இருந்து என்பதை அறிந்துக்கொள்வதன் மூலம் பதில் நிறுத்தி ஒளியூட்டுகின்றான்.

அந்தணனுக்கு ஆற்றல் வேதம் என்று பதில் சொல்லும்போது துரோணரை கொதிக்க வைக்கும் தருமன், அவரின் போர்க்கலையில் அவருக்கு ஆற்றல் இருந்தாலும் அது அவருக்கு ஆற்றல் இல்லை என்பதையும் நிதர்சனப்படுத்தும் இடத்தில் வாழ்வின் இருபெரும் வெளியில் இருந்து வரும் உண்மையில் அவனுக்கு பதில் உள்ளது. கேள்வி பின்புதான் பிறக்கிறது.

அம்பையின் காரணமாக தன்னை அஞ்சும் பீஷ்மரிடம் அவன் கண்டுக்கொள்ளவது எதிரியை அஞ்சுபவனைவிட தன்னை  அஞ்சுபவன் ஏழுமடங்கு கோழை என்பதை. யட்சனின் கேள்வி தருமனுக்கு பின்னால்தான் வருகின்றது.

உடலால் உறவுக்கொண்ட உடன் பிறந்தான் அர்ஜுனன் இடம் உடல் விறகென்றும், நகுலனிடம் விண்ணே மழையென்றும், மண்ணே விதையென்றும் காட்டி செல்கின்றான்.

யாரை காதலில் முத்தமிட்டு துயிலும்போதும் நீ விழிமூடா மீனாட்சி என்று மகிழ்ந்தானோ அவளை தன்விழைவால் தன்னை பெருக்கிக்கொள்ளும் நதியென்றும், நதியென்பதால் தன்பாதையை தானே தேர்ந்தெடுக்கும் ஆற்றல்கொண்டவள் என்பதையும் கண்டுக்கொண்டு அச்சம்கொள்கிறான். இந்த  உண்மையை திரௌபதிக்கும் தருமனுக்கும் இடையில் பகுத்தறியும் கணத்தில் வைத்த உங்களை எப்படிப்பாராட்டுவது?

தருமன் கணவனாகி மலர்ந்து தந்தையாகி கனியும்போது அவர் தன் மகன்மூலம் அறிகின்றார். “நீ என் ஆன்மா” என்பதை, பெற்றுக்கொண்டதால் மானுடன் அளிக்கக்கடமைப்பட்டவன் என்று தந்தையானதன் மூலத்தையும் உலகுக்கு தந்தையாக இருக்கவேண்டிய அர்த்தத்தையும் உணர்கின்றார். மகனுக்கு சொல்வதுபோல் அனைத்து அறிவுரையையும் தானே பெற்றும் கொள்கின்றார். அவர் தன் மகனிடம் சொல்லும் முத்தாய்ப்பில்  //இருளில் ஒவ்வொன்றும் பிறரிடமிருந்து விலகிச்செல்கின்றன. முடிவிலியைத் தேடும் விழைவால் அவை சிதறடிக்கப்படுகின்றன.அறிக, அவை ஒன்றிலிருந்து எழுந்தவை! அவை செல்லவேண்டிய திசையோ இணைந்திணைந்து செல்லும் ஒருமை//இந்த பதிலில் தருமன் மகன் தருமனை காலைக்கட்டிக்கொண்டு தானும் தந்தையும் ஒன்று என்று காட்டுகின்றான். அறியாமையால் மகன் தந்தையிடம் இருந்து பிரிந்துச்செல்கின்றான் இருந்தும் அவைகள் செல்லவேண்டிய திசையில் ஒன்றாகவே செல்லமுடியும் எத்தனை பெரிய வாழ்வியல் உண்மை. 



இருதலைக்கொல்லி எறும்பாகி அன்னையும் மனைவியும் இரண்டாக இருக்கும் ஒன்று அறியும் தருணத்தில் தருமத்தை தருமசங்கடத்தில் விடக்கூடாது என்பதை அறிந்து எழுந்து. நூலோர் சொற்கள் கைக்கொள்வது புதரில் எலிப்பதுங்குவது அல்ல, பேடியின் செயல் அல்ல. கடமையறிந்தவனே நூலாய்ந்தவன் என்று திரௌபதிக்கும்,.     தன் கடமைகளை அறியாத மானுடன் இருளில் இருக்கிறான். அதே  உண்மையான அறியாமை என்று குந்திக்கும் பதில் சொல்லும் இடத்தில் தன் அகத்தை சொற்றகளால் நீராட்டுபவன் என்பதை நிறுப்பித்து இருதலைக்கொல்லிகளை அணையசெய்யவும் அவனால் முடிகின்றது. 

இத்தனை பெரும் நெருப்பில் வேகும் தருமன் அகத்தில் ஞானக்கண் விழிக்காமல் இருக்குமா? அது விழிக்கின்றது. அவது அவனோடு பேசுகின்றது. இந்த புடவி ஒரு மேச்சல்களம் என்று காட்டுகின்றது. கடமையை  பயன் கருதாமல் செய் என்கிறது. பயன் கருதாமல் செய்யவேண்டும் என்பதற்காக செயல் செய்யாமல் இருக்க விரும்பாதே என்று காட்டிக்கொடுக்கிறது. 
ஞானக்கண்ணாகி அகத்தில் நின்றவன் கண்முன்ணே கண்ணனாகவும் வந்து நின்று, ஒளி உள்ளிருந்து வருவது என்பதையும் காட்டிக்கொடுக்கிறான். 

வாழ்வின் அனுபங்கள் பதிலாக அமையும்போது அந்த அனுபவங்களுக்கான கேள்விகள் எந்த நிலையில் வந்தாலும் என்ன? விடாயில் உயிர்போகும் நிலையில் வந்தால் என்ன? பதில் சொல்லமுடியும். விடை தெரிந்தும் கேள்வியை எதிர்க்கொள்ள விழைவை தள்ளி நிற்கவேண்டும் என்பதையும் காட்டிக்கொடுக்கிறது. யட்சன் தரிசனம்.

யட்சன் கேள்விக்கேட்டான் தருமன் பதில் சொன்னான் என்று எழுதாமல், தருமனின் சித்தத்தில்வாழ்க்கை அனுபவமாகி நிற்கும் பதில்கள் எந்த எந்த தருணம் என்பதை எடுத்து வைத்து கேள்விகளை கேட்காமலே விட்டவித்தில் அற்புதம் செய்து உள்ளீர்கள் ஜெ. 

பதிலே கதையாகி வருவதால் கேள்விகள் கொஞ்சமாகத்தான் உள்ளன என்று நினைத்தேன். கேள்விகளை தொகுத்தேன். அப்பொழுதுதான் தெரிந்தது. எத்தனை கேள்விகள் இங்கு? 

அன்புடன் 
ராமராஜன் மாணிக்கவேல்