Monday, September 12, 2016

ஒரே அத்தியாயம்






ஜெ

இன்றுவந்த சொல்வளர்காடு அத்தியாயம் இதுவரை வந்ததிலேயே மிகச்செறிவானது [9-9-2016] பலமுறை வாசிக்கவேண்டியிருந்தது. ஒரே அத்தியாயத்தில் ஏராளமான விஷயங்கள் வாசித்துமுடிக்க ஒருநாள்போதாது.  சாங்கிய தர்சனத்துக்கும் வைசேஷிகதர்சனத்துக்குமான மோதல் முக்கியமாக நடக்கிறது. ஆனால் இந்த மோதல் நேரடியாக நடக்காமல் அதைக்கேட்டும் கேட்காமலும் ஒரு பிரக்ஞை வெளியில் இருக்கும் யுதிஷ்டிரரின் மனசுக்குள் நடக்கிறது. ஆகவே அவை எங்கே முட்டிக்கொள்கின்றன என்பது விரிவாக இல்லை. கூர்மையாக உணர்த்தப்பட்டிருக்கிறது

இன்னொருநிலை யுதிஷ்டிரர் சமையல் வழியாக அந்த தர்சனங்களின் சாராம்சத்தை அறிவது. பொருட்களின் நுண்மையான ஸாரம் எப்படி சமையலில் மணம்போல வெளிப்படுகிறது என்பதை உணர்ந்துகொள்வது. அது தனியான ஒரு கதையாக பலவகையான நுட்பங்களுடன் வெளிப்படுகிறது.

அதோடு இரண்டு கதைகள். இரண்டுமே ஒன்றின் இருபக்கங்கள். கபிலரின் கதை. அது பொருட்களுக்குள் இருக்கும் அபூர்ணம் பற்றியது. இன்னொரு கதை பொருட்கள் எல்லாம் ஒன்றே என்னும் சூக்‌ஷுமம் பற்றியது.

கடைசியாக ஒரு முரண்பாடு. கபில தர்சனம் முன்வைக்கப்பட்டதும் அங்கே வந்துசேரும் சிரமணமுனிவர் அதை அப்படியே மறுத்துத் தலைகீழான தர்சனத்தைச் சொல்கிறார். இவ்வளவும் ஒரே அத்தியாயம். இதை வாசிப்பது சொல்வளர்காட்டைச் சரியாகப்புரிந்துகொள்வதுதான்

சுவாமி