Thursday, September 8, 2016

இருமை





உலகம் இருமையால் ஆகியிருக்கிறது. மேல் கீழ், இடம் வலம், நேர் எதிர், முன் பின், நன்று தீது, பெரியவன் சிறியவன், வெண்மை கறுமை

பரசுராமனும், ரகுராமனும் இருமையால் ஆனவர்கள். முன்னவன் தாயையும் வெட்டினான், பின்னவன் மாற்றாம் தாய்சொல்லையும் வெட்டாதவன், கண்ணனும் பலராமனும் இருமையால் ஆனவர்கள். கண்ணன் சிறியவனாக இருந்தாலும் ஆளகின்றவன், பலராமன் பெரியவனாக இருந்தாலும் ஆளப்படுகின்றவன். நாட்டை மட்டும் அல்ல உள்ளத்தையும் கண்ணன் ஆள்கின்றவன். பலராமன் உள்ளத்தாலும் ஆளப்படுகின்றவன்

இருவராக இருந்தாலும் ஒருவராக முழுமையின் வடிவாக வந்துநிற்கும் கண்ணனும் பலராமனும் ஒன்றின் மறுபாதியாகிய இருமையை கண்ணன் புரிந்து இருப்பதுபோல பலராமனால் புரிந்துக்கொள்ளமுடியவில்லை. இருமையின் எல்லை எது?, அது எங்கு தாண்டப்படுகிறது? ஏன் தாண்டப்படுகிறது? என்பதில் பலராமன் தோற்றுப்போகின்றான். பலராமனுக்கும் சேர்த்தே கண்ணன் வளர்ந்துக்கொண்டு இருக்கிறான். இங்கு அவர்களின் இருமைகள் விலகி நிற்கின்றன.

இந்த விலகளை சொல்லில் நடிப்பில் செயலில் சேர்த்துக்கட்டிவிடலாம் என்று கண்ணன் நினைக்கின்றான். அவன் நடிப்பும் அவன் சொல்லும் அவன் செயலும் அவனின் மறுபாதியில் தோற்றுப்போவது ஊழ். ஊழ் முன் கையறுநிலையில் நிற்பதுபோல் தன் முழுமையின் பாதியாகிய தனது அண்ணன் பிரிந்தபோது அவன் அவனின் பாதிக்கு மீளமீள சொல்லிச்சொல்லி அந்தபாதியை முழுமையாக்க முயல்கின்றான்.

பாதியை முழுமை என்று எண்ணிப்பிரிந்துப்போகும் பலராமனை எண்ணி வருந்துவதா? பாதி என்பதை அறிந்தும்  அதை முழுமையாக்க அதை சொல்லிச்சொல்லி புலம்பும் கண்ணனை எண்ணி உளம் குழைவதா?

இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு

அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்