Sunday, September 11, 2016

சொல்வளர்காடு


அன்புள்ள ஜெ.

 
 
சொல் வளர் காடு - என்கிற சொற்களின் ஆழமே - கதையும் கட்டுரையாக விரிந்து கொண்டே இருக்கிறது. முக்கிய உபநிஷத்துகள் அல்லது சிந்தனை முறைகள் - அவற்றில் கதைகளும் ஒரு முக்கிய அங்கமாக - ஒரு எளிய கடவுச் சொல் திறக்கும் பொக்கிஷமாக, ஆழ்ந்த சிந்தனைகளுடன் - அதே சமயம் எளிய மக்களும் - சிந்தனை வெள்ளத்தில், ஏரியில், குளத்தில், மற்றும் மழையில் தொட்டுணர, மூழ்க திளைக்க - எல்லோருக்கும் இருக்கும் வாய்ப்புக்களுடன் - எனினும் ஒரு சிக்கலற்ற கட்டமைப்புடன் - மிகச் சிறந்த அனுபவம்.

இந்த அறிதலிலிருந்து எப்படி பாண்டவர்கள் போர் செய்ய போகிறார்கள் என்கிற வியத்தலுக்க - கிருஷ்ணன் தருமனிடம் கூறும் நிகழ்வுகள், கிருஷ்ணன் சிந்தனை, அவன் செயல் பாடு எல்லாமே ஒரு சிறந்த முன்னுரை.

சமையல் செயல் முறையும், அதை பரிமாறுதலையும் ஒரு ஓவியாமாகவே வரைந்து இருக்கிறீர்கள். சமையல் நேரும் விதமும் ஒரு கவிதையின் அழகுடன் இருக்கிறது என்று தோன்றுகிறது.

அவ்வப்போது நகைச்சுவை உரையாடல்கள்.  ஒரு தளத்தில் பாண்டவர்கள் பாக்கியம் செய்தவர்கள் போன்றே இருக்கிறது. அறிவார்ந்த தளத்தில், மிகக் கடுமையாக வாதம் செய்பவர்களும், உணர்ச்சிகரமாக செயல்படுபவர்களும், விழைபவர்களும் ஒரு புறம் இருக்கட்டும். கட்டற்ற சூழ்நிலையின் மையத்தில், ஒரு கட்டமைப்பையே அடுத்த கட்ட பரிணாம வளர்ச்சிக்கு தயாராவது போல, அதுவும் சொற்கள் மூலம், வாழ்வின் மூலம், உரையாடல்கள் மூலம். (ஒருவேளை கட்டற்றத்தினால் தான் காடோ?)  - பேரிலக்கியங்களில் காடேகுதல் ஒரு முக்கிய குறியீடாகவும், கதை நாயக நாயகிகளின் குணாதியங்கள் மெருகேறுவதும் மெல்ல புரிகிறது.

இது துரியோதனன், கர்ணன் மற்றும் சகுனிக்கு கூட முழுவதுமாக புரிந்திருக்கலாம். இந்த விசை அவர்களை, மேலும் அந்தப்  புறம் தள்ளுகிறதோ? 

ஆயினும் மிக ஆழ்ந்த புள்ளியொன்று. பலராமன் கிருஷ்ணன் மன விலகல் சித்தரிப்பு. களியாட்டம் கொண்ட இரு பெரும் நண்பர்களான சகோதரர்கள் - மெல்ல விலகுவது சொல்லாமல் சொல்லப்படுகிறது. படித்த கதைகள் மற்றும் திரைப்படங்களில் இந்த மெல்லிய இழையை காணலாம் (சிறந்த நடிகர்கள் பாத்திரம் ஏற்கும் போது). ஒருவருக்கு ஒருவர் மரியாதை இருந்தாலும் செயல்பாட்டில் ஒப்புதல் இல்லை என்பதனை, உடல் மொழியால் மட்டும் வெளிப்படும் என்பதும், நிஜ வாழ்வில், பலமுறை வேறு சிலரிடமும் கண்டிருக்கிக்கிறேன். இது தெரிந்தவுடன், சட்டென கிருஷ்ணனும் பலராமனும் மனதளவில் சற்று எனக்கு நெருங்கி விட்டார்கள் என தோன்றிற்று. மிக நுண்ணிய சித்தரிப்பு என்று தோன்றுகிறது 

அந்த விராட புருஷனுக்கு நானே ஒரு பொருட்டில்லை - என்று கிருஷ்ணன் கூறுவது - மாயாபஜார் திரைப்பட உரையாடலை நினைவுறுத்தியது.மாயக்கண்ணாடியில் கிருஷ்ணன் நோக்கவேண்டும் என எல்லோரும் வற்புறுத்தும் பொது, எல்லோரும், அர்ஜுனன் தான் இருப்பான் என்று உறுதியுடன் உரையாட, கிருஷ்ணனோ - முன்னமே கூறிவிடுகிறேன்   வரும் பிம்பத்தை கண்டு அதிர்ச்சி அடையாதீர்கள் - ஏனெனில் என் மனதில் யார் இருப்பார் என்று எனக்கே தெரியாது - என்று புன்னகையுடன். இது பிரபலமான வணிக திரைப்படம் என்றாலும், இந்த ஒப்பீட்டை சிறப்பாகவே கருதுகிறேன்.

ஒவ்வொரு நூலின் ஆரம்பத்திலும், இனிமேல் என்ன எழுத முடியும் (இதுவரை, மிகச் சிறப்பாக எழுதி விட்டாரே) என்று தோன்றினாலும், நுணுக்கத்திலும் ஆழமாகவும், விரிவாகவும், நகைச்சுவையுடனும் - உங்களது முயற்சி மிக சிறந்த வாசிப்பனுவம் மற்றும் பெருமை படக்கூடிய விஷயமாகவும் பெறுகிறது.

நன்றி 
அன்புடன்.
முரளி