Friday, May 29, 2015

காண்டவம் வரட்டும்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

காண்டவம் குறித்து. காண்டவம் எழுதிய வரை அற்புதமாக இருந்தது. அதன் தொல்கதைகள், பிரமிப்பூட்டும் நிலச்சித்திரங்கள், உவமைகள் என அனைத்தும் அதன் அழகின் உச்சியில் இருந்தது.

அது தற்காலிகமாக நின்றது வருத்தத்தை அளித்தாலும் தங்களை புரிந்து கொண்ட வாசகர்கள் தாங்கள் எழுதும் முறையை அறிவார்கள்.

ஆனால் என்றோ, இவ்வளவு அழகாக அமைக்கப்பட்ட ஒரு கட்டுமானம் அதன் முழு அழகோடு தங்கள் எழுத்தில் படர்ந்து பந்தளித்து ஒரு காண்டவ வனமாக எழுந்து நிற்கும் என்றே நம்புகிறேன். இறைவன் அருளட்டும்.

தினந்தோறும் வலையேற்றப்பட வேண்டும் என தாங்களே வகுத்துக்கொண்ட நிர்ப்பந்தம் கண்டிப்பாக ஒரு மிகப்பெரிய சவால். முகஸ்துதி இல்லை தங்களால் மட்டுமே ஆகக்கூடிய ஒரு விஷயம். நல்ல சமயம் எடுத்துக்கொண்டு எழுதுங்கள். காத்திருக்கிறோம்.


அன்புடன்,

கணேஷ்
பஹ்ரைன்.

Thursday, May 28, 2015

காண்டவம்- எழுதுவது

அன்புள்ள ஜெ 

காண்டவம் - அன்னை சிலந்தியின் வலைக்கு ஈடாக இன்னொரு வலை என்பது எவ்வளவு பெரிய audacity !

பின் வந்த அத்தியாயங்களில் தட்சசீலம், நாகபுரி, மணிப்பூரகம் என்று இந்திய பெருநகரங்களின் தொல்வரலாறுகளும் நாகர்களின் தொன்மங்களும் மொழியும் கதைக்கோர்வையும் வெண்முரசின் வேறு எந்த பகுதிக்கும் சளைத்தவை அல்ல.

குறைந்தபட்சம் காண்டவத்தின் எழுதப்பட்ட பகுதிகளை வெண்முரசின் அதிகாரபூர்வமான ஏழாவது  பகுதி என்றாவது அந்தஸ்து அளித்து அறிவித்திருக்கலாம். பாவம் இப்போது அவை வெட்டப்பட்டு தனியாக இருப்பதை பார்க்க மனது கேட்கவில்லை. 

மது
 
அன்புள்ள மது
 
திரும்ப எழுதுவேன்என நினைக்கிறேன்
 
ஜெ

எழுதியாகவேண்டிய கதை

அன்புள்ள ஜெ,

காண்டவம் முடித்துக்கொள்வது பற்றி நீங்கள் எழுதியது சிறிது வியப்பளித்தாலும் உங்கள் முடிவு சரியானதே. உங்கள் வாசர்கள் அனைவரும் இதனைப் புரிந்து கொள்வார்கள்.

"காண்டவம்’ காண்டவவனம் எரிந்ததை பற்றிய கதை. நாகர்களுக்கும் யாதவர்களுக்குமான போர். நாகங்களுக்கும் நெருப்புக்குமான போர்"  என்று அறிமுகத்தில் எழுதினீர்கள். இன்று வரை தொடரும் நாகர்கள் மீதான வன்முறை பற்றி உங்கள் மிகக் கூரான சமூக அரசியல் வரலாற்றுப் பார்வை காண்டவத்தில் வெளிவரும் என எதிர்பார்த்திருந்தேன். மகாபாரதக் காலம் முதல் இன்று வரை விளிம்பிலேயே இருக்கும் சமூகம். இந்திய இலக்கியத்தில் மிக மிகக் குறைவாக பேசப்பட்ட சமூகம். 

நாகர்களின் வலியும் வன்முமம் நீங்கள் எழுதியே ஆக வேண்டிய கதை ஜெ. இன்னொரு வெண்முரசு நாவலில் அது விரிவாக பேசப்படுமென எதிர் பார்கிறேன் 

நன்றிகள் 

சிவா

நீலம் மீண்டும்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு
இந்திரநீலம் அறிவிப்பு குறித்து மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். ஆவலுடன்
எதிர்பார்க்கிறேன். மழை பாடல் இரண்டாம் வாசிப்பு துவங்கி உள்ளேன்.
வெயிலுக்கு இதமாக இருக்கிறது.

சிவக்குமார்
சென்னை




அன்பின் குரு

வெண்முரசை மீண்டும் தொடங்க முடிந்ததற்கு இறையருளுக்கு நன்றி.
தொடர்ந்து இதே படைப்பூக்கத்துடன் இயங்க எல்லாம் வல்ல பேரருள் துணை நிற்கட்டும்.

நான் இந்தியப்பயணம் முடிந்து திரும்பி விட்டேன்,பின்பு பல்வலிக்கான சிகிச்சை,அதற்கான மருந்துகளின் பக்க விளைவு எனச்சற்று உடல் உபாதைகள்.

ஊட்டி கூட்டம் இனிதே முடிந்ததை அறிந்து மகிழ்ச்சி.அந்தக்கூட்டத்தில்
நீங்கள் தவறவிட்ட நண்பர் பட்டியலில்(இன்றைய பதிவு) என் பெயரைத்தேடி சற்றே ஏமாந்தேன்...

தங்கள் அமெரிக்க,கனடா பயணம் இனிதே அமைய அன்பு வாழ்த்துக்கள்
என்றும் பிரியமுடன்
சுசீலா


இந்திரநீலம்

அன்புள்ள ஜெ, வணக்கம்!

தங்கள் மனதில் சாந்தி நிலவ இயற்கை பேரருள் கருணைகூரட்டும்.
தாங்கள் எழுதுவது புனைகதையோ, சட்டகங்களுக்குட்பட்ட தொழில் நேர்த்தி கதையோ இல்லை என்பதை நாங்கள் நன்கு அறிந்திருக்கிறோம்.
அதனால் இடைவெளிகளைப்பற்றிய கவலை உங்களுக்கு வேண்டாம்.எங்களுக்கும் அதுஇல்லை. 

"இந்திர நீலம்" வண்ண பேதங்களில் ஒளிரும் எண்ண வடிவங்களை இதயம் உறிஞ்சட்டும்.

இந்த கோடை வெம்மையில்
கதவை திறந்து வைத்திருக்கிறோம். (காற்று உள்ளே வரட்டும்)
கொந்தளிப்பான மனநிலையை ஊக்குவிக்க வேண்டாம். அந்த சூழ்நிலையிலான எழுத்துக்கள் எங்களை சுழற்றியடிக்கும்.
காடாற்று வெள்ளமென சீறிக்கொட்டும் போது,  குற்றாலத்தில் குளிக்க அரசே தடைபோடுகிறது. எனில், உங்கள் மனக்குகையில் சிறுத்தை எழ - மண்டை சுரப்பை நாங்கள் தொழுகிறோம்..!!
அன்புடன்,

எம்.எஸ். ராஜேந்திரன்.
திருவண்ணாமலை.

Wednesday, May 27, 2015

காண்டவமும் இந்திரநீலமும்

அன்புள்ள திரு.ஜெ வணக்கம். 

இந்திரநீலம் என்ற புதிய ஏழாவது நூலுக்கு பெயர் அற்புதம். இந்திரநீலம் உயர்ந்த வைரம், கவர்ந்தும் கனிந்தும் நிற்கும் அற்புதம் உடையது. கண்ணனாகியல நீலமும், அர்ஜுனனாகிய இந்திரனும் நட்பில் கலக்கும் பொருள் பொதிந்தது. இந்த நூலின் பெயரே அற்புதமாக உள்ளது. 

எனது அப்பன் முருகன் அன்னை வள்ளிநாயகியின் காதலில் கனிந்து மடல் எழுதும் நாளில் அன்னையின் ஓவியத்தை வரையும்போது அருணகிரி நாதர் சுவாமிகள் இப்படி சொல்கின்றார். 

இந்தர கோபமு மரகத வடிவமும்
இந்த்ர சாபமும் இருகுழையொடு பொரு
இந்திர நீலமும் மடலிடை எழுதிய பெருமாளே! -(கொந்துவார் குரவடியினும் -திருத்தணிகை திருப்புகழ்)

இந்திர நீலத்திற்கு வாழ்த்துக்கள். 

நன்றி 
அன்புடன் 
ராமராஜன் மாணிக்கவேல்

பிரயாகை கேசவமணி

கடிதங்களில்...

ஜெயமோகன் அவர்களுக்கு,

"ஆனால் இன்று தங்களின் காண்டவம் நாவலாக எழாமை குறித்த பதிவைப் படித்த போது குற்ற உணர்வே மேலிடுகிறது. ஒரு சிறு அளவேனும் என்னுடைய இயலாமையும் இதற்கு காரணமாகிவிட்டதோ என்று!!!"

எனக்கும் இப்படி தோன்றியது. 
காரனம், ஒரு நாள் பதிவு வரவில்லை என்ற உடன் மாலையில் ஒரு கடிதம் அனுப்பியிருந்தேன்.  அந்த கடிதத்தில் கொஞ்சம் சிக்கலாக இருப்பதாகவும்.. தவிர, குழுமத்தில் சத்தமே இல்லை என்றும் குறிப்பிட்டு இருந்தேன். வழக்கதிர்க்கு மாறாக இரவு 12க்கு இல்லமல் அன்று உங்கள் தளத்தில் மாலை நேரத்தில்லேயே, பதிவு அடுத்த நாள் வரும் என்று ஒரு பதிவிட்டீர்கள்.

பிறகு ஒரு பதிவு, அடுத்த நாள் உங்கள் பதிவு காண்டவம் தொடரவில்லை என்று.
"உங்களின் பதிவில் பதில் கூறும் ஒரு தொனி இருந்தது. அது என்னை மிக மிக சங்கடப் படுத்துகிறது.  மாறாக காத்திருங்கள் வாசகர்களே என்று தோளில் கைபோட்டிருந்தால் மிகவும் மகிழ்ந்திருப்பேன்!!"
இவர் சொல்வது தானே சரி.

உங்கள் பதிவை படித்த அன்று துக்கம் தொன்டையை அடைத்தது. அழ முடியாது... அதணால் பெறிய மனுஷனாக, உங்களை பார்த்து கொள்ளுங்கள் என்று மட்டும் சொல்லி கடிதம் அனுப்பினேன்.

உங்கள் படைப்பு நீங்கள் குறிப்பிட்டது போல் கட்டு அற்று இருக்க வேண்டும். நாங்கள் கட்டு படுத்தினாலும், நேரம் கட்டு படுத்தினாலும் - மூலையில் கடாசி விட்டு செல்லுங்கள். அப்படி தான் நாங்கள் உங்களை பார்க்க வேண்டும்( இந்த கட்டுபாடு செல்லுபடி ஆகட்டும்! ). அதர்க்கு உங்கள் மீசை முகம் நல்ல தோரனையுடன் இருக்கும்  

300 பெயறும், மேலும் இனையத்தில் தொடறும் லட்சத்திர்க்கும் மேலானவர்களும் காண்டவம் நுழைய காத்திருப்போம்.

நன்றி
வெ. ராகவ்

மீண்டும் வெண்முரசு

அன்புள்ள ஜெ அவர்களுக்கு
,
எனக்கு முன்னே சித்தர் பலர் இருந்தாரப்பா!
யானும் வந்தேன் ஒரு சித்தன் இந்த நாட்டில்;
மனத்தினிலே நின்றிதனை எழுதுகின்றாள்
மனோன்மணி யென்மாசக்தி வையத்தேவி,

          பாரதியின் சொற்களுடன் ஒரு சிறு இடைவெளிக்குப்பின் எழுதுகிறேன்.
       
        இதற்குள் காண்டவத்திலிருந்து மீண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன்.வெண்முரசு எப்படிப்பட்ட உழைப்பு.மனித முயற்சிக்கு மேற்பட்டத் திறன்.அப்படிப்பட்ட பெரு நிகழ்வில் இதைப்போன்ற சிறு இடைவெளிகள் நடக்கும்.உங்கள் எழுத்துகள் உடன் வருபவர்கள் என்றும் உங்களுடன் உண்டு.எனவே எங்களுக்கு நன்றாகவே புரியும்.

      உங்களுக்கு எழுதாமலே வாசிப்பில் மட்டும் தொடரும் பல ஆயிரம் வாசகர்கள் இருக்கிறார்கள்.உங்களுடன் நெருக்கமானவர்கள் போலவே அவர்களுக்கும் உங்கள் படைப்பு மனநிலை பற்றி நன்கு தெரியும்.நானே கூட நீலம் வாசிப்பிலே தான் உங்களுக்கு எழுதத் தொடங்கினேன்.சில ஆண்டுகள் உங்கள் தளத்தை தொடர்ந்து வாசித்தாலும் கடிதம் அதுவரை எழுதியதில்லை.வெண்முரசின் வாசகர்களுக்கு உங்கள் அறிவிப்பே போதும் .இவ்வளவு விளக்கம் கூட எனக்கெல்லாம் தேவைப்படவில்லை.எழுத்து உருவாகி வரும்போது வாசிக்கலாம் என்றே எண்ணியிருந்தேன்.

      ஆகவே நல்ல இடைவெளி எடுத்துக் கொண்டு எழுதுங்கள்.காத்திருக்கிறோம்.

            எல்லாவற்றையும் கடந்து செல்ல காலமும் ,மௌனமும் வழி என்று எப்பொழுதும் உணர்ந்திருக்கிறேன்.சில மனத்தடைகளால் எழுத முடியாமலிருந்தேன்.

      காண்டவம் அறிவிப்பு அதை உடைத்தது.உங்கள் எல்லா படைப்புகளையும் ,முயற்சிகளையும் வாழ்த்தும் பல்லாயிரம் நெஞ்சங்களுன் நானும் கூறுகிறேன்.எழுதுங்கள் காத்திருக்கிறோம்.எந்த உயர்விலும் வாசக நெஞ்சங்களை மதித்து நீங்கள் அளித்த விளக்கம் மனதை என்னவோ செய்தது.உங்கள் எண்ணங்கள் எல்லாம் நிறைவேற வேண்டுகிறேன்.
என்றும் அன்புடன்

மோனிகா.

Tuesday, May 26, 2015

நன்றி

அன்புள்ள திரு.ஜெ வணக்கம். 

மலரில் இருந்து மணத்திற்கு கட்டுரைப்படித்தேன். முன்னமே இந்த கடிதத்தைப்படித்து கந்தர் அநுபூதியின் உருவாய் அருவாய் பாடலை மனப்பாடம் செய்து வைத்துக்கொண்டேன். அந்த பாடலின் எதிர் எதிர் திசைகளின் பெரும் வெளியை திறந்து காட்டி வைத்தீர்கள். சொல்லியப்பாட்டின் பொருள் உணர்ந்து சொல்வார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ் என்பதன் பொருள் அறியமுடிந்தது.  இன்று இந்த கட்டுரையை படிக்கும்போது. காண்டவம்-அன்னை கிரிஜையின் தவம் கனிந்து வரும் காட்சிப்படிமம் பொருள் நிறைந்ததாகியது.  நன்றி.

அன்புடன் 
ராமராஜன் மாணிக்கவேல்

பெருவெடிப்பின் கதைவடிவம்

முட்டைக்குள் இருப்பதுவரை தன்னை நாகமென்றே அறியாத பெருநாகமொன்றிருந்தது. அதையே முதல்நாகமென்பது நாகர்குலக்கதை மரபு. மிகச்சிறிய முட்டை அது. ஈயின்விழியும் எறும்பின் விழியும் தொடமுடியாத அளவுசிறியது. எண்ணமும் அறியமுடியா நுண்மை கொண்டது. இன்மையின் துளியென்றே எஞ்சும் அணிமை. தன்னை சுருளென உணர்ந்த கணமே அது விரியத்தொடங்கி முட்டையை அசைத்தது. அதன் நாவென எழுந்த செந்தழல் வெண்முட்டை ஓட்டை உடைக்க அது சொடுக்கித் தலையெடுத்தது. அதன் மூச்சு சீறி எழுந்தது. அதன் மணிவிழிகள் ஒளிகொண்டன. முச்சுருளென அமைந்த அதன் கரிய உடல் எதிரெதிர் ஒழுக்கென ஓட அதன் உடலின் தண்மையில் நீர்த்துளிகளெழுந்தன. வானவானவானென விரிந்த வானில் அது தானெனும்தானாக பேருருக்கொண்டது. சான்றோரே, அதன் நாவை அனலோன் என்றனர். அதன் மூச்சை காற்று என்றனர். அதன் விழிகளே ஆதித்யர்கள். அதன் உடலின் குளிரலைகளே வருணன். அதன் ஒழுக்கே காலன். அறிக, அதன் விரிந்த பெரும்படத்தில் எழுந்த வஜ்ராயுதமே இந்திரன்.

அன்புள்ள ஜெ . big bang theory யை நினைவு படுத்தும் வரிகள் ..இவை வாசகனின் மனதில் தூண்டும் உணர்வுகளை வர்ணிப்பது கடினம். அற்புதமான வரிகள். நன்றி.

தண்டபாணி

காண்டவம்- மீண்டும்

அன்புள்ள ஜெ ,
   உங்கள் நண்பர்கள் மட்டுமல்ல  உங்களை அனுதினமும் வாசித்து வரும் வாசகர்களும் உங்கள் படைப்புச் செயல்பாடு பற்றி நன்கறிவோம் . காண்டவம் நின்றதில் எவருக்கும் வருத்தம் இருக்க வாய்ப்பில்லை. மீண்டும் ஒரு பெருவிருந்திற்காக காத்திருப்பதில் எப்பிழையும் இல்லை. காத்திருக்கிறோம்.

சங்கரன் இ ஆர் 



Hi Jemo

It was disheartening to see your note on the home page.  Can't stop myself writing this note to you...

I felt very bad for pushing and taunting you to write kandavam.. Many sorry for my earlier note...

I thought it would be an inspiration and motivating factor.. Professional way of thinking.. But it backfired big time..  Bygone chapters of kandavam had content but lacked jeyamohan's spirit and flow..

When you were writing about Duryodhana as part of sthulakarna episode narrated how he had forgone his feminine part.. 

Femininity in men instills creative spirit.  It is the binding force between head, heart and hand.. Head could be co related to mind at abstract level... Kandavam was in sync with head and hand, but async with heart.. Sorry to say this.. But Somewhere it was lagging behind..  

Take a big break.. Chill out with your friends and family..  Let kandavam happen in its course when the time ripens..  

Till then we will wait patiently even if it takes months together...Take care... 

Thanks
 
Radha
 
அன்புள்ள ராதா
 
பெரிய இடைவெளி எடுக்க முடியாது. எழுதாமலிருந்தால் எனக்கும் வாழ்க்கை வீணாகத்தெரியும்
 
ஜெ
 
 
 
​வணக்கம் சார்,

உங்களுடைய இன்றைய காண்டவம் நாவல் நிறுத்தம் பதிவைப் படித்தேன். கண்கள் கலங்கி விட்டது.

எப்பேர்ப்பட்ட பற்றற்ற நிலையில் வாழ்கிறீர்கள் !!

நீங்கள் உயிருக்குயிராய் நேசித்த வெண்முரசு நாவலின் படைப்பில் கூட இவ்வளவு ஒட்டாமல் நிற்கிறீர்களே...

உண்மையை எந்த மழுப்பலும் இல்லாமல் ஏற்றுக்கொள்ளும் உங்களின் இந்த முடிவிற்கு நான் சிரம் தாழ்த்துகிறேன்.

உங்களின் பதிவைப் படித்தவுடன், ஞானிகள் எப்படி இருப்பர் என்று சேக்கிழார் சுவாமிகள் பாடிய பாடல் நினைவிற்கு வந்தது..

கேடும் ஆக்கமுங் கெட்ட திருவினார்
ஓடுஞ் செம்பொனும் ஒக்கவே நோக்குவார்
கூடும் அன்பினில் கும்பிட லேயன்றி
வீடும் வேண்டா விறலின் விளங்கினார்.

அன்புடன்,
இராவணன் 
( மலேசியா )



அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு

காண்டவம் நிறுத்தம் குறித்த தகவல் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். தொடர்ந்து
வெண்முரசை படித்து வருகிறேன்.  ஆனால் நீங்கள் வலிந்து திணித்து எழுதாதது
ஆறுதல் அளித்தது. இது எனக்கு முமுழுமையாக புரியா விட்டாலும் எழுத்து
உங்களுக்கு ஒரு ' நிகழ்தல்' என்ற அளவில் புரிந்து கொள்கிறேன்.

சிவக்குமார்

சென்னை
 
 Dear Jeyamohan

Finally you solved the riddle of Kandavam's end! Evidently, the writer himself was lost in the Kandava vanam! The last episode concludes with the Daksha nagas moving into the vanam, fitting ending to the title. 

Interesting to read about your passion for Maharajapuram's music. I am reminded of 
Andal's "Umake nam at cheyvom" lines. 

Hope you will resume the novel at your own pace.  Looking forward to it as always. 
Thank you.



Warm regards
Sobana
 
 
ஜெயமோகன் அவர்களுக்கு,


படைப்பு பல முறை படைத்தவரை விட மேலாக இருக்கலாம்.
எங்களில் பலருக்கு படைத்தவர் தான் மிக முக்கியமாக  இருக்கிறார்

எங்களுக்காக உங்களை நன்றாக பார்த்து கொள்ளுங்கள். பொருமையாகவே வருவது வரட்டும்.
சிரியவன் ஆணாலும் என் கருத்தை பெறும்பான்மை ஏற்பர்.

நன்றி
வெ. ராகவ்
PS: பழையபடியோ அல்லது புதிய style-ல் ஆக ஒரு முருக்கிய மீசை வையிங்க. கான்டவ ப்ரஸ்தத்தில் இருந்து புதிய முகம் தானே
 

 

காண்டவம், அரைப்புள்ளி

அன்புள்ள ஜெ,

முன்பொருமுறை 'அறம் பற்றிய சொல்' என்று திருதாவின் ஒரு கூற்றைச் சொல்லியிருந்தீர்கள். அறம் பற்றுதல் சொற்களுக்குத் தான் நிகழ வேண்டும் என்பதில்லை போலும். எண்ணங்களுக்கும் நிகழலாம். காண்டவம் மூன்றாவது அத்தியாயம் வந்த போதே மனதில் ஒரு நினைப்பு, ஏன் அனைத்து சூதர்களும் பாடி முடிந்த உடன் ஓர் சிறு இடைவெளியைக் கேட்கக் கூடாது என்று. ஏன் அவ்வாறு தோன்றியது என்று இப்போது கூடத் தெரியவில்லை. பொதுவாக வெண்முரசு வாசிக்கத் துவங்கி இரண்டாவது அத்தியாயத்திலோ அல்லது மூன்றாவது நான்காவதிலோ மனம் நாவலை உள்வாங்குவதற்கென்று ஒரு வடிவைக் கண்டுகொண்டுவிடும். அவ்வடிவம் வரும் போதே நாவலின் நிகழ்வுகளை அதனதன் சரடில் கோர்க்கத் துவங்கி விடும். எத்தனை பாத்திரங்கள் வரினும் அவர்களை அவரவர் இடத்தில் வைத்து நிகழ்வுகளின் சரடை மனது இழுக்கத் துவங்கிவிடும். எனவே எளிதாக நாவலை நினைவில் கொள்ள முடியும். அப்படி நினைவு கொள்ள முடிந்தால் மட்டுமே வாசிப்பும் எளிதாக அமையும். ஆனால் அதற்கு பெருஞ்சவாலாக வந்தது நீலம். அதன் வடிவும், அதில் வரும் சரடுகளும் முதல் ஆறு அத்தியாயம் வரை பிடி கிடைக்கவில்லை. பின்பு நீங்களே அதற்கு ஒரு வழியைக் கொடுத்தீர்கள். அதன் பிறகே நாவல் எனக்குள் நிகழத் துவங்கியது.

காண்டவம் சிக்கலானது என்பதாலேயே மிக அதிக முறைகள் வாசிக்க வைத்தது. முதல் முறையாக கதைகளுக்கிடையே ஓர் ஒருங்கமைவை கண்டு கொள்ள மிகுந்த சிரமம் கொண்டேன். வெண்முரசில் 6 நாவல்களைத் தொடர்ந்த எனக்கு ஆச்சிரமம் தந்த அபாரமான தாழ்வுணர்வு சாதாரணமானதல்ல. அதனால் கூட அந்த ஓய்வை மனம் கேட்டிருக்கலாம். அனைத்து அத்தியாயங்களையும் மீண்டும் மீண்டும் படித்து அதற்கு ஓர் மன வரைவை ஏற்படுத்த வேண்டும் என்றே மனம் விரும்பியிருக்கிறது. ஆனால் இன்று தங்களின் காண்டவம் நாவலாக எழாமை குறித்த பதிவைப் படித்த போது குற்ற உணர்வே மேலிடுகிறது. ஒரு சிறு அளவேனும் என்னுடைய இயலாமையும் இதற்கு காரணமாகிவிட்டதோ என்று!!!

ஒரு வகையில் காண்டவம் தந்திருக்கும் நாகர்களின் வம்ச வரிசை வெண்முரசில் வேறெங்கோ நிச்சயம் வரத்தான் போகிறது. அப்போது இந்த நாவலின் ஆறு பகுதிகளும் சொல்லிய கதைகளும், நிகழ்வுகளும் உதவத் தான் போகிறது. நீங்கள் இப்போது வேண்டுமானால் நாவல் எழவில்லை என்று சொல்லலாம். ஆனால் இதுவரை வந்த பகுதிகளில் ஒரு ஒருமையும், வடிவும் கூடித்தான் வந்திருக்கிறது, சில கால குழப்பங்கள் எனக்கு உள்ளன என்றாலும். எனவே என்றோ ஒரு நாள் இவை ஒரு குறுநாவலாகவேனும் வரலாம், வர வேண்டும் என்றே ஒரு வாசகனாக விரும்புகிறேன்.

ஒரு வாக்கியம் எழுதும் போது அதில் காற்புள்ளிகளும், அரைப்புள்ளிகளும் தருகின்ற மேலதிகப் பொருள் அவ்வாக்கியத்தையே வேறு தளத்திற்கு எடுத்துச் சென்று விடுவதை நாம் பலமுறை கண்டிருக்கிறோம். வெண்முரசு நாவல் தொகையை ஒரு நீண்ட வாக்கியமாகக் கொண்டால், காண்டவத்தின் அத்தியாயங்கள் ஒரு அரைப்புள்ளியாக நிச்சயம் அமையும். அவை தந்திருக்கும் பொருள் நாளை முற்றிலும் வேறாக, வேறு தளத்திலாக நாவலில் எங்கேனும் நிகழலாம். 

படைப்பு என்பது எப்போதுமே கலைஞனின் வழியாக நிகழ்வது. நீங்களே பல முறை அதைப் பதிவு செய்திருக்கிறீர்கள். அது நிகழும் போது நிகழட்டும். இதைத் தொய்வாகவோ, சோர்வாகவோ கொள்ள வேண்டியதில்லை. இந்த சமயத்தில் உங்களிடம் சில கேள்விகள்.

1. நீங்கள் எழுதுவதைப் படிப்பதற்காக சில ஆயிரம் வாசகர்களாவது இந்திய நேரம் இரவு 12 மணியை நோக்கிக் கொண்டிருப்பார்கள். அப்படிப்பட்ட நாங்கள், எங்களின் எதிர்பார்ப்பு உங்களுக்கு ஏதேனும் அழுத்தத்தைத் தருகிறதா? அப்படித் தரக் கூடாது என்பதே உங்களின் உண்மையான வாசகர்களின் எண்ணம். எங்களின் இருத்தல், இந்த எதிர்பார்ப்பு உங்களுக்கு உந்து சக்தியாக மட்டுமே இருக்க வேண்டும் என்றே விரும்புகிறோம்.

2. வெண்முரசு நாவல் எழுதத் துவங்கிய காலத்தில் ஒரு முறை நாவல் தொகுதிகளின் இடையில் நிச்சயம் ஒரு சோர்வு வரும். அப்போது என் வாசகர்கள் அதைத் தாண்டிச் செல்ல உதவுவார்கள் என்று சொல்லியிருந்தீர்கள். இது அது போன்ற ஓர் சோர்வா? அப்படியென்றால் வாசகனாக நான் என்ன செய்ய வேண்டும்? நல்லவேளையாக ஊட்டி இலக்கிய முகாம் வருகிறது. நிச்சயம் வாசகர்களின் சந்திப்பு உங்களை மேலும் மேலும் உற்சாகப் படுத்தக் கூடும். மேலும் இயல் விருதிற்கான பயணமும் உங்களுக்கு புத்துணர்ச்சி தரட்டும். மீண்டும் புதிதாக எழுதுங்கள். இருபது அத்தியாயங்களுக்குப் பிறகு புது அறிவிப்பு விட்டு நாவலைத் தொடருங்கள்.

சற்று அதிகப்பிரசங்கித் தனமான கேள்விகளாக இவை இருந்தால் மன்னியுங்கள். எவ்வித அழுத்தமோ, புறக் காரணிகளோ உங்களுக்கு தொந்தரவாக இருக்கக் கூடாது என்பதற்காகவே இக்கடிதம். உங்களின் பதிவில் பதில் கூறும் ஒரு தொனி இருந்தது. அது என்னை மிக மிக சங்கடப் படுத்துகிறது.  மாறாக காத்திருங்கள் வாசகர்களே என்று தோளில் கைபோட்டிருந்தால் மிகவும் மகிழ்ந்திருப்பேன்!!

அன்புடன்,
மகராஜன் அருணாச்சலம்.




அன்புள்ள மகாராஜன்
உண்மையில் வாசகர்கல் ஒருவகையில் அதிகர்கள், உரிமையாளர்கள். ஒரு தனிநபரல்ல. ஒரு பெருந்திரளாக. காலமெங்கும் நிறைந்திருப்பவர்களாக
ஜெ

வெண்முரசும் காண்டவமும்

அன்புள்ள ஜெ,

     தாங்கள் முதன் முதலில் காண்டவத்தை அறிமுகம் செய்கையிலேயே தங்கள் மனம் அதில் முழுதும் குவியவில்லை எனத் தோன்றியது. இருப்பினும் ஐந்தாவது அத்தியாயம் முடிந்ததும் ஒரு நாள் இடைவெளி ஏற்பட்டதும் தங்களது எண்ணம் கிட்டதட்ட வெளிப்பட்டே விட்டது. மேலும் ஏன் இந்த நாவலைக் கட்டிக் கொண்டு தொடர்கிறார் என்ற சிறு சந்தேகத்துடனேயே நாவலை அணுக முடிந்தது. நான் இந்த நாவலை நீலத்தில் அரைப் பாதியளவில் முடித்துவிடப் போகும் எண்ணத்தில் இருப்பிர்கள் என்றே நினைத்தேன்.
 
 ஒரு வழியாக நாவலாக இது உருப்பெறவில்லை எனவும், நாவலின் ஒருங்கமைவு ஏற்படவில்லை எனவும் தாங்கள் சொன்னது மிகுந்த மகிழ்வையும் லேசான வெண்முரசின் வருங்காலம் மீதான சந்தேகத்தையும் சேர்த்தே அளிக்கிறது என்பதே நிஜம். நிச்சயம் ஒரு சிறந்த நாவல் வடிவம் தரும் ஒரு பொருள் நோக்கி நீங்கள் பயணிக்கப் போகிறீர்கள் என்ற திண்ணிய எண்ணத்துடன் இருக்க நேர்மையான எந்தவொரு வெண்முரசு வாசகனாலும் இருக்க இயலும். நீங்கள் நிகழ்த்தி ! அந்த தீ நிகழும்...

நன்றி
வாழ்த்துக்கள்
கோ.கமலக்கண்ணன்.

காண்டவம் பற்றி

அன்புள்ள ஜே எம் 

காண்டவம் பற்றிய உங்கள் குறிப்பு படித்தேன்.  காண்டவம் 5 பாகங்களும் வாசித்தேன். உங்கள் மொழியின் வளமை, அழகு,  நடையின் வேகம்,  தாக்கம்,  கற்பனை,  இமஜெரிசம், சிம்பலிசம், எல்லாம் உள்ளனவே.
மேலும் ஒவ்வொரு  நாவலும் பாரத கதையின் ஒரு அங்கமாகத்தானே அமைகிறது?  காண்டவத்தில் நீங்கள் எண்ணி இருந்த அந்த அங்கம் வேறு நாவலாக வருமா?

சிவா சக்திவேல் 
 
 
அன்புள்ள சிவா
 
காண்டவத்தைக் கைவிடவில்லை. வேறு ஒரு கோணத்தில் வேறு ஒரு தருணத்தில் ஆரம்பிக்கலாம்.
 
ஜெ

Thursday, May 21, 2015

தெய்வீகக்காதல்

அன்புள்ள திரு.ஜெ வணக்கம்.

அம்மையப்பனாகிய வெண்பனி விடைவாகனன் கதை வெள்ளம் செல்லும் வேகத்தில், அழகில், கவிச்சுவையில். உள்ஞானபொருளில்,  நினைக்க நினைக்க நெஞ்சம் நெகிழ்ந்து உருகுகின்றது. நீலத்தில் ராதை ஒரு ஆடைமுழுவதும் நெய்து காட்டிய அழகை, கிரிஜை ஒரு நூல் எடுத்து வீசிக்காட்டுகின்றாள். ராதை மண்ணில் எழுந்து விண்ணோக்கி விழும் கனி என்றாள், கிரிஜை விண்ணவர் மட்டும் காணும் கனி. 

மாணிக்கவாசக சுவாமிகள் போற்றித்திருவகவலில், எத்தனை எத்தனை இடத்தில் தான் பிழைத்தேன் என்று சொல்லிச்சொல்லி கொன்று கொன்று எடுத்துவிடுவார். இத்தனை இடத்தில் பிழைத்து வந்த நீ ஏன்டா சாகின்றாய் என்று கேட்காமல் கேட்பார். அதில் ஒரு பிழைத்தல் “கல்வி என்னும் பெருங்கடல் பிழைத்தும்” இந்த வரி மீண்டும் மீண்டும் நெஞ்சில் சுழன்றுக்கொண்டே இருக்கிறது. கல்வி என்னும் பெருங்கடலை கடந்து பிழைப்பதா? கல்வி என்னும் பெருங்கடலை காணாமலே பிழைப்பதா? காணாமலே பிழைப்பது பிழைப்பாகிவிடுமா? கடந்து பிழைப்பதுதான் பிழைப்பு. கல்விக்கடலை கடப்பதுதான் எத்தனை எத்தனை பெரும் நீச்சல். சொல், சொல்லுக்குள் சொல் என்று எத்தனை எத்தனை அலைகள், அத்தனை அலைகளையும் தாண்டவும் வேண்டும், சிலநேரம், அலைகளில் இருந்து அலைகள் என்று அலைகளே தாண்டவைக்கவும் செய்யும். இப்படி அலையலையாய் மாறம் கல்விக்கடல்தான் மனிதனை தீபமாகவும், தீபகற்பமாக்கும் ஆக்குகின்றது. எங்கும் கல்வியாகி நிற்பவன் தீவு. கல்விக்கு அப்பால் இறைவன் என்பவன் தீபகற்பம். 

மூன்றுபுரம் கல்வி, நான்வது புரம் அனுபவம் என்னும் பருவதம். கல்வி என்னும் கடல் சூழ்ந்த மனிதன் சிந்தனையில் நிற்கும் இறைவன் என்னும் கைலயம். மனிதனே இங்கு ஒரு பாரதம் ஆவதும் அழகு.

கைலாயத்தைப்பற்றி தாங்கள் சொல்லும்போது ஏழுலகங்கள் கவிந்த வான்வெளிக்கு அப்பால் இங்குள்ளாதா என்றே எண்ணச்செய்யும் எழிலுடன் நின்றிருந்தது அது என்று தாங்கள் சொல்வதுதான் அழகினும் அழகு.
  

கற்றதனால் ஆயப்பயன் வாலறிவான் நற்றால் தொழுதல் என்று வள்ளுவர் சொல்கின்றார். அன்னை கிரிஜை கற்றது கற்று, உறுவது உற்று அத்திமரநிழலில் அமர்ந்து தவம் செய்யும் நாளில் கல்விக்கடலை கடக்கின்றாள். கல்வி கடல்மட்டும் சூழ்ந்திருக்கும்வரை மனிதன் ஒரு தீவு மட்டும். கல்வியால் சூழ்ந்து ஒரு கரையை அடைகின்றநாளில் அவன் தீவகற்பம் ஆகின்றான். அப்படி ஆகும் நாளில் அவனுக்கு அப்பால் இருக்கும் கைலாயம் இங்குள்ளது ஆகின்றது. மூலாதாரம், சுவாதிஸ்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞா, துரியம் என்னும் ஏழுலகம் கடந்து துரியாதீதத்தில் அன்னை மீனாட்சியை, சோமசுந்தரேசன் கைத்தலம் பற்றுகின்றான் என்று செல்லும் கதை, கதையின் வழியாக தவத்தை கனியவைத்து செல்கின்றது. 

அன்னை கிரிஜைபோல் மண்ணில் ஒவ்வொரு உயிரும் அவனுக்காக பிறப்பெடுக்கின்றது. அன்னை கிரிஜைபோல் அவனுக்கு என்றே முத்திரைக்குத்தி வரும் சீவன்கள் வெட்டவெளி என்றாலும் விண்ணையே நோக்கி கிடந்து அவனையே அடைந்துவிடுகின்றன. மற்ற சீவன்கள் வெட்டவெளியில் என்ன இருக்கின்றது என்று மண்ணைநோக்கி மண்ணோடு மண்ணாகிவிடுகின்றன, மண்ணில் விழுந்தாலும் விண்ணல்லவா நம்மிடம் என்று ஒரு சில சீவன்கள் விண்ணேறுகின்றன அவதராபுருஷர் என்று.

அன்னை கிரிஜைக்கு காலையிலும், மாலையிலும் கிடைக்கும் செவ்வொளி கைலாயக்காட்சி பிறைசூடிய பெம்மானுக்கு மனையாள் ஆக்கும் தவத்தை, காதலை தருகின்றது.

வெட்டவெளிப்பார்வை, பார்வையில் தட்டுப்படும் மலைபீடக்காட்சி, காட்சியில் கரைந்து  மனம் எரிகொள்ளும் காமம், காமம் கனிந்து பெருகும் காதல்,  காதல் முதிர்ந்து கண்ணீர் வடிக்கும் அன்பு,  கண்ணீர் மாலையாகி யோகம்பெருகும் கோலம்,  உள்ளம் குளிர்ந்து திரளும் பனி. பனி வடிவம் எழுந்து வரும் அனல் வடிவம்.  சீவன் சிவன் ஐக்கியம்.  அருவக்கடவுள் காட்சியில் இருந்து வரும் உருவக்கடவுள் தத்துவம் அற்புதம். 


வழுத்தியுங் காணா மலரடி யிணைகள்
வழுத்துதற் கெளிதாய் வார்கடல் உலகினில்-
என்று மாணிக்கவாசக சுவாமிகள் சொல்வதின் பொருளாகி நிற்கும் காண்டவம்-5

பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் அருவக்கடவுளுக்கும், உருவக்கடவுளுக்கும் உள்ள வித்தியாசத்தை சொல்லும்போது. நீரும், பனிக்கட்டியும் என்று சொல்வார். முழுவதும் மூழ்கி தீவாக இருக்கும் மனிதனுக்கு பனிக்கட்டித்தெரிவதில்லை, எல்லாம் நீர் மயம்.  தீபகற்பமாக ஆகும் மனிதன் பனிக்கட்டியை உணர்கின்றான்.  காண்டவத்தில் வஞ்சினம் என்னும் நெருப்பு அனைத்தையும் உருகவைத்து நீராக்கி உருவமற்றதாக காட்டி, கிரிஜையின் காதல் வழியாக குளிர்ந்து உறைந்து பனிக்கட்டியாகி உருவம் காட்டுகின்றது.

அன்னை கிரிஜையை மண்கூரைக்கு கீழே தொங்கிகிடக்கும் சம்சாரமரமாகிய கனிமரத் தோரணத்தின் கனி என்ற உவமையை நினைத்து நினைத்து நெஞ்சம் நெகிழ்கின்றேன் ஜெ. அது விண்ணவருக்கு தெரியும், மண்ணுள்ளவர்களுக்கு தெரியாது என்பதுதான் எத்தனை பொருள் பொதிந்தது.

வெள்ளைப்பனி ரிஷபத்தின்மீதுவரும் மலைகுல இளவரசன் மட்டும் எளிதில் காணமுடியாதவன் இல்லை, அவனை காதலிக்கும் அன்னை கிரிஜையும் காணமுடியதவள் என்று படைத்ததுதான் அற்புத பொருள் உடையது.  நிலமக்கள் யாரும் அவளைக்கண்டது இல்லை, பாடகர்கள் மட்டும் பாடிப்பாடி சென்றுக்கொண்டே இருக்கிறார்கள். அவன் போலவே அவளும் காட்சிக்கு அப்பாற்பட்டவள். கைலாயம்போலவே இங்கிருப்பதுபோலவே எங்கோ அவளும் இருக்கிறாள். அவனுக்காக பிறக்கிறாள், அவனையே நினைக்கிறாள், அவனையே மணக்கிறாள். அன்னை, தந்தைகூட அவளை கட்டுப்படுத்த முடியவில்லை. தந்தைகளுக்கு கடைசியில் மிஞ்சுவது வஞ்சம் மட்டும்.

ஐங்குறுநூறு கடவுள் வாழ்த்தை ஒருநாள் தடவினேன். கை பாரதம்பாடிய பெரும்தேவனார் பாதத்தில் விழுந்தது. மூன்றே வரி, அதற்குமேல் படிக்க முடியவில்லை இதயத்தை விம்ம வைக்கிறார். நுனிப்புல் மேயும் பலகீனத்தை என்று ஒழிப்பாய் என்று கேட்கின்றது ஒவ்வொரு நூலும் சொல்லும்.  

நீலமேனி வாலிழை பாகத்து
ஒருவன் இருதாள் நிழற்கீழ்
மூவகை உலகும் முகிழ்த்தன முறையே-ஐங்குறுநூறு

ஒருவனுக்கு இரண்டுகால்கள்தான் பெருதேவனார் ஏன் இங்கு விளையாடுகின்றார். ஆனால் இவனுக்கு இரண்டு காலும் இரண்டு வண்ணம். அந்த இரண்டு வண்ணக்கால்கள், தனித்தனியாக இருந்த, தனித்தக்கால்கள் ஒருவன் காலாகும் அழகை, அற்புதத்தை தவத்தை சிற்பமாக்கி வைத்து உள்ளீர்கள். 

முன்னம் அவனுடைய நாமங் கேட்டாள்
   
மூர்த்தி யவனிருக்கும் வண்ணங் கேட்டாள்
பின்னை யவனுடைய ஆரூர் கேட்டாள்
   
பெயர்த்தும் அவனுக்கே பிச்சி யானாள்
அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்
   
அகன்றாள் அகலிடத்தார் ஆசா ரத்தைத்
தன்னை மறந்தாள்தன் நாமங் கெட்டாள்
   
தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே.-திருநாவுக்கரசு நாயனார் சுவாமிகள்.

தெய்வீகக்காதல் தெய்வீகக்காதல் என்பதை கண்டேன் ஜெ.

அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்

நாகத்தீவின் கதை

அன்புள்ள ஆசிரியருக்கு;
 
காண் ட(ர)வம்-சென்ற நாவலில் நாகங்கள் குறைந்து இருந்தது .இந்த நாவலின் தொடக்கமே நாகங்களின் வரவால் நிறைந்துள்ளது.பிரமம் என்னும் சிலந்தி வஞ்சம் என்னும் நாகங்களை கொண்டு வலைபின்னுகிறது.காண்டவனத்தில் சாரங்க பறவை இருந்தது என்பதுமட்டுமே  தெரிந்த கதை.
 
வெண்முரசு அதன் முற்பிறவிகள் பற்றி வருவதேல்லாம் ஆச்சரிய படவைக்கிறது.அந்த கதைகள் கடந்த காலத்தில் குந்தியை நினைவுடுத்தினாலும்,எதிர் காலத்தில் திரௌபதியை காட்டுகிறது.தன் வஞ்சத்திற்காக தன் ஐந்து பிள்ளைகளை போர்களம் அனுப்பி இழக்கபோகிறாள்
 
ஜரிதை,மகாபலை,திரியை ஆகிய முவரின் குழைந்தைகளின் பெயர்களும் என்னை வியக்கவைத்தது,முதலில் குணங்களில்  தோன்றி,ஐம்புலங்களாக மாறி ,காலத்தை நிறைக்கிறது .
 
என்னை மிகவும் கவர்ந்தது மகாபலையின் கதைதான் ஐந்து பொறிகளை குறிக்கும் ஐந்து பிள்ளைகள்,பொதுவாக கண் தான்முதலில் எதையும் அறியும் பின்னறே பிற புலங்கள் அறியும்.இச்சை என்பது துண்டில் முள் புழுவாக ஆடிக்கொண்டிருக்க.ஆஷன் என்னும் கண் முதலில் போய் சிக்கிகொள்கிறது.
பின்னர் பிற நான்கு புலங்களும் பொய் சிக்கிக்கொள்கிறது,பின் தன் உயிரை(மாபலை)இழக்கிறது.
 
  அத்தியாயத்தின் தொடக்கத்தில் சொன்னது போல ஒவொரு சூதனும் கதையை முடிக்கும் போதும் மீண்டும் போய் தொடக்கதையே தொடுகிறது,ஒவ்வொரு நாளும் அத்தியத்தை முடித்தவுடன் ,மீண்டும் முதலிருந்து படிக்க வேண்டிவுள்ளது.
 
ஒரு சந்தேகம்,,நிலபரப்பில் நம் இந்தியா இருப்பது நாவலந்தீவு என்னும் ஜம்புதீவு. சாவரத்தீவு என்பது எப்பகுதி?
 
நன்றி
அன்புடன்
த.குணசேகரன்
 
 
அன்புள்ள குணசேகரன்

நாமிருப்பது நாவலந்தீவு. நாவல்தான் சம்ஸ்கிருதத்தில் ஜம்பு

ஜெ

பின்னலில் சிக்கிய பூச்சி

அன்புள்ள ஜெ,

நீங்கள் சிக்கலான கதை என்று  சொன்னதுமே உள்ளம் உவகையில் துள்ளியது. ஒரு வித சவால். அதை எதிர்கொள்ளப் போகிறோம் என்ற உவகை. உள்ளூர நீலத்தை விட எவ்வகையில் இது வேறுபட்டிருக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு வேறு இருந்தது. முதல் அத்தியாயத்திலேயே பிரபஞ்ச தரிசனத்தை சிலந்தியின் வலைப் பின்னலாகச் சொன்னது என் முன்னால் இருக்கப் போகின்ற சவாலை நன்றாகவே விளக்கியது. நாகங்களை வைத்து இதே பிரபஞ்சத் தரிசனத்தை நீங்கள் இதற்கு முன்பு சொல்லி இருக்கிறீர்கள். அன்னைப் பசுவை வைத்தும் சொல்லியிருக்கிறீர்கள். அவை அனைத்தையும் விட இப்பிரபஞ்சத்தை 'விரிந்துகொண்டே செல்லும் சிலந்தி வலை' என்ற படிமம் மிகத் துல்லியமாக சித்தரிக்கிறது. சிலந்தி வலைப் பின்னலாக இப்பிரபஞ்சத்தை வேறு யாராவது சொல்லியிருக்கிறார்களா தெரியவில்லை. அபாரமான கற்பனை. 

அந்த அத்தியாயத்திலேயே வலைப்பின்னல் என்பது கதைகளின் பின்னல் என்ற வகையில் மிகச் சிக்கலான கதைகளைச் சொல்லப்போகிறது காண்டவம் என்பதும் தெளிவாகியது. ஆனால் இரண்டாம் அத்தியாயம் துவங்கி ஐந்தாவது அத்தியாயம் வரை வந்த அனைத்துக் கதைகளும் ஒன்றுடன் ஒன்று பின்னி பிணைந்த்திருப்பது தந்தது ஒரு பிரமிப்பைத் தான். மீண்டும் மீண்டும் ஒரே நிகழ்வு. ஆனால் நடைபெறும் சூழலும், பங்கேற்பாளர்களும் வேறு வேறு. மிகச் சிறிய ஆனால் துல்லியமான வேறுபாடு. மீண்டும் மீண்டும் வெண்முரசு சொல்லிக் கொண்டே வருவது தான். பிரபஞ்ச ஒழுக்கு ஒரே சீரான, ஒரே தாளத்தில் அமைந்த ஒன்று. எப்படி ஒவ்வொன்றும் ஆதியின் மறு சுழற்சியாகி பழைமையான ஒன்றாக இருக்கிறதோ, அதே சமயம் ஒரு மிகச் சிறிய மாறுபாட்டால் புதுமையாகவும், வேறாகவும், தனித்துவமானதாகவும் இருக்கிறது. கண்ணனின் குழலோசையில் பூரிசிரவஸ் உணர்ந்தது இதைத்தான். சிறு குழந்தையின் கலைத்துப் போட்ட காய்களை, தன் கட்டுக்கோப்பான கருக்களால் எதிர்கொண்ட சகுனி அந்த ஆட்ட முடிவில் உணர்ந்ததும் இதைத் தான். 

இங்கே ஒரு அன்னை, தன் ஐந்து புதல்வர்களோடு மடிகிறாள். மற்றொரு சமயத்தில் ஐந்து புதல்வர்களோடு தப்பவும் செய்கிறாள். இருவருமே வஞ்சம் கொள்கின்றனர். வஞ்சம் என்பது யார் மீது? மடிந்தவள் மிகச் சரியாக வாரணவத தாயை நினைவூட்டுகிறாள் என்றால், தப்பித்தவள் குந்தியே தான். சூரிய னைக் கண்ட ஒரு மகனால் பன்னகர்களின் கோபத்திற்கு ஆளான உரக மாதா தன் எஞ்சிய ஐந்து புதல்வர்களுடனும் நீரில் மூழ்கி உயிர் பிழைக்கிறாள். தீச்சொல்லால் அழிந்த பன்னகர்களிலும் ஒரு மாதா இந்திரன் துணையால் உயிர் பிழைக்கிறாள். அன்று தப்பிய உரக மாதாவின் கொடி வழி வந்த இன்னொரு மாதா வாரணவதத்தில் இந்திரன் மகன் பார்த்தனால் தீயில் இடப் படுகிறாள். வஞ்சம் வஞ்சத்தையே பிறப்பிக்கின்றது. வஞ்சம் அழிவதே இல்லை. 

இக்கதைகளில் முக்கியமான ஒற்றுமை ஐந்து புதல்வர்கள். இரு மாதாக்கள். யார் அவர்கள்? குந்தியும், திரௌபதியும் தானா!! ஒட்டுமொத்த பாரதமும் இவர்கள் இருவரின் தூய்மையான குரோதத்தின் விளைவா? பிழைத்தல் மற்றும் இறத்தல் என்ற சுழற்சியின் ஒரு சிறு நீட்சி தான் பாரதப் போரா? எண்ண எண்ண பின்னலில் சிக்கிய பூச்சியாக உணர்கிறது மனது. குந்தியிடமும், திரௌபதியிடமும் கொந்தளிக்கும் குரோதத்திற்கு மண்ணில் விடைதேட முடியாது. அது காலங்காலமாக ஆலகாலமாக தொடர்ந்து வரும் வஞ்சம், தான் வெளிப்படத் தேர்ந்தெடுத்த இரு அன்னையர் அவர்கள். இனி அவர்களின் செயல்களின் குவியம் இந்த பெரு வஞ்சத்தின் இச்சை. கிருஷ்ணனின் நிலைச்சித்தம் தான் காக்க வேண்டும்.

அன்புடன்,
மகராஜன் அருணாச்சலம்

நாகர்களின் பரமபதம்(காண்டவம் அத்தியாயம் ஐந்து)

அன்பு ஜெயமோகன்,
         
நாகர் குடியே இம்மண்ணின் முதல்குடி. இங்குள்ள தெய்வங்களுக்கெல்லாம் அரசி நம் மூன்று பேரன்னையர். தொல்நாகர் ஒருபோதும் பிறருக்கு கடன்பட்டவரல்ல. ஒருபோதும் பிறருக்கு தலைவணங்குபவரும் அல்ல. இங்குள்ள மானுடர் எவருக்கும் அவர் எந்நிலையிலும் பிணையும் அல்ல” எனும் நந்தவாசுகியின் அழுத்தமான குரலில் நெடுநேரம் ஆடிப்போய் இருந்தேன்.
         
நாகர்கள் ஒருகாலத்தில் இந்தியா, இலங்கை, பர்மா போன்ற நாட்டின் பலபகுதிகளைத் தங்கள் ஆளுகையின்கீழ் வைத்திருந்திருக்கின்றனர். கி.மு.13ம் நூற்றாண்டுக் காலகட்டத்தில் கங்கைக்கும் யமுனைக்கும் இடையே நாக அரசுகள் இருந்ததாகக் காப்பியங்கள் தகவல் சொல்கின்றன. அர்ச்சுணன் நாடுகடந்து வாழ்ந்த காலத்தில் இரண்டு நாக இளவரசிகளை மண்ந்ததாகவும் செய்தி உண்டு.
         
தமிழ்ச்சங்கங்களில் நாகர்கள் பங்கேற்றிருக்கின்றனர். புறத்திணை நன்னாகனார், மருதன் இளநாகனார், வெள்ளைக்குடி நாகனார், சங்கவருணர் எனும் நாகரியர் போன்றோர் நாகர்களே. தம் பெயர்களிலும், தங்கள் ஊரின் பெயர்களிலும் நாகம் எனும் சொல் இடம்பெற்றே தீரவேண்டும் என்பதில் நாகர்கள் முனைப்பு காட்டி இருக்கின்றனர். நாகர் எனும் வேரிலிருந்து உருவானவையே நகரம், நாகரிகம் போன்ற சொற்கள் எல்லாம். இடம்பெயர்ந்து கொண்டே இருந்தவர்கள் நாகர்கள். நகர் எனும் வேர்ச்சொல்லின் நீட்சியே நாகர். நாகர்கள் ஓரிடத்தில் தங்காதவர்கள். வேட்டைச்சமூகக் காலகட்டத்தில் அப்படியான வாழ்க்கையே இயல்பு. அவ்வகையில்  நாடோடிகளாகத் திரிந்தவர்கள் என்பதாக அதை விரித்துப் புரிந்துகொள்ளும்போது அவர்களின் குடிமரபின் காலப்பரப்பை நம்மால் ஓரளவு உள்வாங்கிக்கொள்ள முடியும். சங்ககாலத்தில் இசையைப் பாடிப்பரப்பிய பாணர்கள் நாகர் குலத்தினரே. காலமாற்றத்தில் நாகர் வழிபாடு சைவத்தோடும், இன்னபிற சமயங்களோடும் இணைக்கப்பட்டதாகத் தெரிகிறது.

இன்று பரதவர்களாகவே இருக்கும் மீனவக்குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நாகர்களாகவே இருக்கக்கூடும். நாகர்கோவில், நாகூர், நாகப்பட்டிணம் போன்ற ஊர்ப்பெயர்களைக் கொண்டும், அப்பகுதிகளின் வரலாற்றைக் கொஞ்சம் அலசினாலும் அக்கருத்து வலுப்படும் வாய்ப்புள்ளது. தஞ்சாவூர்ப் பகுதிக்கு அருகே இருக்கும் நாகூர் மற்றும் நாகப்பட்டிணம் ஊர்களைச் சேர்ந்த நாகர்களால் உருவாக்கப்பட்ட இசைக்கருவியே நாதசுரம். ஆரம்பத்தில் அதன் பெயர் நாகசுரம். சங்க இலக்கியத்தில் நாகபாணர் என்றொரு பெயரில் இருக்கும் பாணரோடு ஒப்பிட்டுப் பார்ப்போம்.
இலங்கை வரலாற்று நூல்கள் அனைத்துமே நாகர்கள் குறித்த தகவலுடன்தான் துவங்குகின்றன. இலங்கையைப் பல நாக அரசர்கள் ஆண்டிருக்கும் குறிப்பிலிருந்து அங்கும் நாகத்தொல்குடிகள் இருந்திருக்கலாம் என்பதை அறிய முடிகிறது. நாகர்களுக்கு இடையேயான போர்கள் குறித்த தகவல்களை இலங்கை நூல்களான தீபவம்சம் மற்றும் மகாவம்சத்தில் தெரிந்துகொள்ள முடிகிறது. இலங்கையில் நாகர்களுக்கு இடையே நடந்த போரொன்றில் இடையே புத்தர் தோன்றி அப்போரைத் தடுத்து நிறுத்தியதாக தகவல் உண்டு. அதன்பொருட்டு நாகர்கள் புத்தரை வணங்கியதாகவும் சொல்கின்றனர். கா.அப்பாத்துரையார் இன்னும் ஒருபடி மேலேபோய் புத்தரும், மகாவீரரும்நாக இன முன்னோர்களே எனச் சொல்கின்றார். புத்தர் பிறந்த சாக்கியர்குடி மரபு நாகமரபின் நீட்சியே என அகழ்வாய்வுச் சான்றுகள் குறிப்பிடுகின்றன.

குறிஞ்சிநிலத்தின் குகைகளில் நாகவழிபாடு தொடங்கி இருக்க வேண்டும். பிற்பாடு அது முருகவழிபாடு போன்றவற்றுடன் இணைக்கப்படும்போதும் தன் தனித்துவத்தைத் தக்க வைத்துக் கொள்ள முயன்றது. தன்னை வழிபடுபவ்ர் முன் முருகன் பாம்பாகத்தான் வருவான் எனும் நம்பிக்கை கொண்டிருக்கும் கிராமத்து மக்களை இன்றும் நான் சந்திக்கிறேன். நாகர்களில் ஒரு பிரிவினரே பாலையைச் சேர்ந்த எயினர் என்றும் கருத்துண்டு. கொற்றவை அவர்களின் தெய்வம் என்பது நாமறிந்ததே.

இறுதியாக பரமபத விளையாட்டுக்கு வருவோம். பாம்பின் வாய் இருக்கும் கட்ட்த்துக்கு வருபவன் கீழே சென்றுவிடுவான். மேம்போக்காகப் பார்த்தால் விளையாட்டாகத் தெரியும். நுட்பமாகப் பார்க்க நாகர் இனக்குழுக்களை அழித்த பெருந்தெய்வ மரபின் களியாட்டமாக்வே அது தொனிக்கும். எங்கும் நாகர்களைத் தவிர்க்க முடியாததே அவர்களின் வெற்றி.

நாகர் குடியே இம்மண்ணின் முதல்குடி” எனும் குரலின் வீச்சு எளிமையாகக் கடந்துபோய்விடக்கூடியதன்று. எம் தொல்குடிகளான நாகர்களை நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்குகிறேன்.

முருகவேலன்,
கோபிசெட்டிபாளையம்.

Wednesday, May 20, 2015

இலக்கியமும் தத்துவமும்

ஆசிரியருக்கு ,

காண்டவம்  கரையாத கனத்த நாவல் என்பது இந்த 3 அத்தியாயங்களிலேயே தெரிகிறது. பல சமயங்களில் தத்துவ தோற்றத்தில் இலக்கியம் படைத்து  இலக்கியத்திற்காக தத்துவத்தை சமரசம் செய்துவந்த நீங்கள் இம்முறை இலக்கிய தோற்றத்தில் தத்துவத்தைப் படைத்தது  தத்துவத்திற்காக இலக்கியத்தை சமரசம் செய்கிறீர்கள்.

அடிப்படை சக்திகள், அது உருவாகி  தொடரும் விதமும் , parallel குடிகளும், இங்கு பிரதானம் கொள்கிறது. தாய்மை வெம்மையாலும் குளுமையாலும் காக்கிறது , அதன் மீறிய சக்தியால் அழைக்கவும் செய்கிறது. தாய்மையும் ஒரு பபிரபஞ்ச அடிப்படை சகதியின் வடிவம்.  குந்தியுடனும், திரௌபதியுடனும் அந்த நூறு நாற்காலிகள் நாயடி தாயையும் இணைத்துக் கொண்டேன்.

நேற்று கபிலர் குளத்தில் குதித்து ஒரு அபாரமான இலக்கிய வழி தியான அனுபவம். ஒரு கார்டூன் படத்தை  பார்ப்பது போல இருந்தது.  முன்பு வியாசர் பாரதத்தின் தெற்கு வரை படர்ந்து நிலம் முடியும் இடத்தில் அவர் கண்ட முதற் சொல் இலக்கியம் . இப்போது கபிலர் ஆழ்ந்து மறு நுனி எழுந்து கண்ட சிந்தை தந்துவம். கிளையெனப் பரவுவது இலக்கியம் வேரென ஆழ்வது தத்துவம். 

காண்டவம் வெண்முரசு வாசகர்களுக்கு ஒரு சவால். 

கிருஷ்ணன்  

வஞ்சத்தின் கொடிய நஞ்சு(காண்டவம் அத்தியாயம் மூன்று)

அன்பு ஜெயமோகன்,
         
சூதன் சாங்கியனின் குரலில் “அழியாது வஞ்சம். ஏனென்றால் பிரம்மமே ஒரு பெருநாகம். அதன் நஞ்சல்லவா அது?” எனும் வாக்கியம் இப்போதும் எனக்குள் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. வஞ்சத்திலிருந்து விடுபடுவதையே இங்கு நாம் பேசிக்கொண்டிருக்க சூதன் குரல் விதிர்க்க வைத்துவிடுகிறது. மகாதர்மம் எனப்புத்தன் முன்வைக்கும் சிந்தனைகள் எல்லாம் வஞ்சத்திற்கு எதிராகத்தானே? இருந்தும் வஞ்சம் வளர்ந்து கொண்டே இருக்கிறதே தவிர குறைந்தபாடில்லையே? தனிப்பெருங்கருணை என இரு நூற்றாண்டுகள் முன்பு வள்ளலார் சொல்வதும் வஞ்சத்தை அடியோடு வேரறுக்கத்தானே? காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கும் நற்கதியை வேண்டுவதன் பின்னால் ஒளிந்திருப்பது வஞ்சத்தின் மீதான அச்சம்தானே? அன்பே சிவம் என அழுத்திச் சொல்ல திருமூலன் விரும்பியதும் அதனால்தானோ?

மனிதகுலம் நாகரீகம் அடைந்த காலத்திலிருந்து வஞ்சம் பலவடிவங்களில் வளர்ந்து கொண்டிருப்பதை நாம் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். சமூகத்தின் அனைத்துத்தளங்களிலும் வஞ்சமே விடாப்பிடியாய் செயல்பட்டுக் கொண்டிருக்கிறதோ எனும்படியாக அல்லவா நிகழ்வுகள் நடந்தேறி வருகின்றன. எங்கு நோக்கினும் வஞ்சம். யாரைப்பார்த்தாலும் வஞ்சத்தைத் தவிர்த்து அவரைப் பார்க்க முடியாத மனநிலை. உணவில் துவங்கி, உடை மொழி பண்பாடு என்பாடு வஞ்சத்தின் அனல ஒவ்வொன்றிலும் நீண்டபடியே. கருணையும், அன்பும், இரக்கமும் வலியுறுத்திச் சொல்லப்படும் அமைப்புகளுக்கு இடையேயும் வஞ்சம். நாடுகளுக்கு இடையே வஞ்சம். மனைதர்களுக்கு இடையே வஞ்சம். கருத்துக்களுக்கு இடையே வஞ்சம். வஞ்சத்திலிருந்து நம்மால் கொஞ்சம்கூட விடுபட்டுவிட முடியாதோ எனும் ஆதங்கமே ஆன்மீகத்தை நோக்கி நம்மை நகர்த்துகிறது. அங்கும் பலகுழுக்களின் பெயரால் வஞ்சமே காணக்கிடைக்கிறது. வஞ்சத்தின் சிறுபொறியை இங்கு ஏற்றியது யார்?

வஞ்சமில்லாத இடத்தைத் தேடும் ஒருவனை வனங்களும், மலைகளுமே வரவேற்கின்றன. அங்கு கிடைக்கும் குளிர்ச்சியான காற்றில் அவன் வஞ்சத்தை உணர்வதில்லை. மலைகளோடும், வனங்களோடும் பேசத் துவங்கும் ஒருவனை அவை ஆசுவாசப்படுத்துகின்றன. நெடிய புற்பரப்பில் படுத்துக்கொண்டே வானம் பார்க்கும் ஏகாந்தத்தில் வஞ்சம் முகங்காட்டுவதில்லை. என்றாலும், அவன் உலகிற்குத் திரும்பித்தானே ஆகவேண்டும். ”அழியாது வஞ்சம்” எனும் சூதனின் குரல் கழுத்தைச் சுற்றுகிறது. மூச்சு திணறுகிறது. சிறுபூ ஒன்று எங்கிருந்தோ பறந்து வந்து மேலே விழ ஆசுவாசம் கிட்டுகிறது. திடீரென பெருநாகத்தின் உருவம் ஒன்று உள்ளுக்குள் தோன்றி மறைகிறது.

முருகவேலன்,
கோபிசெட்டிபாளையம்.

காண்டவம் தொடக்கம்

அன்புள்ள திரு.ஜெ வணக்கம்.  

வெண்முரசு-காண்டவம் வாழ்த்துக்கள். 

அன்னையும், குழந்தையும் இணைந்து இணைந்து பின்னப்படும் காண்டவம் நெஞ்சை தடவவும், கிள்ளவும் செய்கின்றது. 

கள்ளிச்செடியை ஒடிக்கும்போது அதில் இருந்து பால் வடிவதற்காக இன்பம் அடைவதா? அல்லது ஒடிக்கப்பட்ட கள்ளியின் வெள்ளைக்காயத்திற்காக வருந்துவதா? 

அன்னையும் குழந்தையும் சேர்ந்து சேர்ந்து வரும் இந்த காண்டவத்தின் பதிவுகள் நினைக்கும்போது புன்னகையும், வலியும் ஒன்றாகவே வழிகின்றது. 

இங்கு ஒரு பூனை மூன்று குட்டிகள் ஈன்று உள்ளது. பயன்படுத்தாத பாத்ரூமில் குப்பைகளையே மெத்தையாக பயன்படுத்தி தன் குழந்தையுடன் சந்தோஷமாக படுத்து கிடக்கிறது. அது சந்தோஷம்தானா? அதற்கு அதுதான் சந்தோஷம். பளிங்கு கண்கள் மின்னப் பார்க்கின்றது. எனக்கு வரணாவதம் தீவிபத்தில் தப்பி சதசிருங்கம் காட்டில் தனது குழந்தைகள் உடன் சிறுகுடிலில் படுத்திருக்கும் குந்தியின் நினைவு வந்தது. கொஞ்சம் கொஞ்சமாக பூனை என்பதே மறைந்துபோகின்றது. பிரபஞ்சத்தாயும், அதன் குழந்தைகளும்தான் நினைவுக்கு வருகின்றார்கள். 

கடந்த வியாழக்கிழமை மண்காற்று, வீசி எறியப்பட்ட பிளாஸ்டிக் பைகள் முகவரி தொலைத்துவிட்ட அனாதைகள்போல அலைகின்றன, தொடவே முடியாத உயரத்தை நொடியில் தொட்ட வெற்றிக்களிப்பில் உடல் பருத்து சிரிக்கின்றன. எனக்கு அந்த தாய்ப்பூனையும், குட்டிக்குழந்தைகளும் ஞாபகம். இந்த காற்றில் தனது குழந்தைகள் அடித்துச்சென்றுவிடும் என்று அது எண்ணியதா? ஒரு குட்டியை கவ்வி தூக்கிச்சென்று,  தலைக்குமேல் உள்ள திறந்து கிடக்கும்   தண்ணீர் இல்லாத பயன்படுத்தாத பிளாஸ்டேங்கில் வைக்கின்றது. என்னைப்பார்த்ததும் அதற்குள்ளேயே படுக்கமுடியாமல் படுத்துக்கொண்டது. என்னே அன்னையின் தவம்? நெஞ்சம் பதறி பதறி அடிக்கின்றது. உடல் இருக்கும்போதே உடல் உருகிவழிய, இதயம் மட்டுமாகி நிற்பதுபோன்ற உணர்வு. இரவு தூங்க முடியவில்லை. “தாயா நீ...பே..” அம்மாவை ஒருநாள் வார்த்தையால் குத்திய ஈட்டி இன்’று திரும்பி வந்து அடியாழம் வரை இறங்கிக்கொண்டே  இருக்கிறது. இரவு பதினோறு மணிக்கு பாத்ரூம் சென்று மீண்டும் பார்த்தேன். ஒற்றைக்கல் சுவற்றில்,மொத்த உடம்பையும் குறுக்கிவைத்து, குழந்தைகள் வாசம் அறியும் தூரத்தில்  எதிரிகள் வரும் திசையில் முகம் வைத்து படுத்துகிடக்கின்றது. 

மனிடா! உன்னிடம் ஏதடா தவம்?. சொல்லிக்கொடுத்ததை செய்கின்றாய், சொல்லிக்கொடுக்க ஒருவன் இருந்து செய்கின்றாய்.  பூனை மறைந்துவிட்டது. அம்மா மறந்துவிட்டது. இன்னும் பார்க்காத கங்கையை, வெண்முரசாலும் பார்..பார் என்று சொல்லப்படும் கங்கைக்கு நேராக சென்று மூழ்கி மூச்சடக்கிவிடவேண்டும் என்று தோன்றியது. உலகத்தைப்படைத்த ஆதி அன்னையின் பாதத்தை கட்டிப்பிடித்து, கண்ணீரோடு முத்தமிட துடித்தேன். காலையில் எழுந்து சென்று பார்த்தேன் அது அதன் குழந்தையை கவ்விக்கொண்டு வேறு இடம் தேடி வழித்தப்பியதுபோல அங்கு இங்கும் அலைந்து வேறு ஒரு பார்வைப்படாத இடத்திற்குள் மறைந்தது. திருதராஸ்டிரன் சொன்ன குட்டிப்போட்ட ஓநாய் கதை நினைவில் ஓடியது. 

சனிக்கிழமை காலையில் ஆபிஸ்வந்து காண்டவம் இரண்டு பதிவும் படித்தேன். கதையின் ஊடுபாகே அன்னையும், குழந்தையும்.  அன்னையும், குழந்தையும் ஆகிய கதையின் வலைப்பின்னல், பெரும் பிரபஞ்சமாகி விரிந்து விரிந்து சென்றுக்கொண்டே இருந்தது. நெஞ்சு பஞ்சாகி விட்டது. பிரபஞ்சம் முழுவதும் பரந்து பறந்து திரியும் உணர்வு. எதுவும் எழுத வேண்டாம் என்றுதான் நினைத்தேன்.  இந்த பிரபஞ்ச வெளியில் நான் யார்? நான் என்ற ஒன்று இருக்கிறதா? 

சிலந்தியும், குழவியும், மீனும், குஞ்சும், குயிலும்,  குஞ்சும், நாகமும், குட்டியும், ஆதி திரியையும், அதன் குட்டிகளும். வாரணாவத திரியையும், அவள் குழந்தைகளும். சினம், வஞ்சம் எல்லாம் தாண்டி அனல் புனல் புகும்போதும் குழந்தையை அணைத்துக்கொள்ளும் அந்த நேசத்தை என்ன சொல்வது? எங்கும் நானும் அம்மாவும்போலவே உள்ளது. 

வானகம் சென்று விட்ட அம்மா! ”தாயா நீ?”.... நான் கத்த மட்டும் தெரிந்த குட்டி, நீ கடித்தாலும் அன்னை! 

நன்றி 
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல். 

Tuesday, May 19, 2015

பிடித்து விட்டேன் , இது திருமந்திரம்

 சேர்ந்த கலையஞ்சுஞ் சேருமிக் குண்டமும்
ஆர்ந்த திசைகளும் அங்கே அமர்ந்திடும்
பாய்ந்தஐம் பூதமும் பார்க்கின்ற வன்னியைக்
காய்ந்தவர் என்றுங் கலந்தவர் தாமே.
(ப. இ.) நீக்கல், நிலைப்பித்தல், நுகர்வித்தல், அமைதியாக்கல், அப்பாலாக்கல் என்று சொல்லப்படும் ஐங்கலையும் சேர்ந்தது. ஆகும் ஓமகுண்டம், ஐங்கலை என்பது ஐவகைத் திருவருளாற்றல்கள். நிறைந்த திசை விளக்கமும் அங்கே காணப்பெறும். பரந்த நிலமுதலிய ஐம்பூதவுண்மையும் அங்கே புலனாகும். இவற்றைத் திருநோக்கம் செய்வது செஞ்சுடர்ச் சிவபெருமான். உலகவுண்மையுணர்ந்து பற்றற்றவர் அச் சிவபெருமான் திருவடியிற் கலந்து இன்புறுவர்.
(அ. சி.) பாய்ந்த - பரந்த. காய்ந்தவர் - உலகத்தை வெறுத்தவர்.

கிருஷ்ணன்

நாகக்குடிகளின் மூச்சு(காண்டவம் அத்தியாயம் நான்கு)

அன்பு ஜெயமோகன்,
         
”வஞ்சம் என்றுமுள்ளது மைந்தா” என நிறைவடைந்திருந்த நான்காவது அத்தியாயம் காண்டவ நாவலின் ஆணிவேரைக் காட்டியதாகவே உணர்ந்தேன். கொஞ்சம் கொஞ்சமாக வஞ்சமெனும் நஞ்சு ஊடுருவிச் செல்லும் வழிகளைக் காண நடுக்கத்தோடு காத்திருக்கிறேன்.

          வாசுகிப் பாம்பின் கதை எனக்கு சிவனின் கழுத்தை நினைவூட்டியது. நீலகண்டன் எனும் தொன்மத்தின் ஆழத்தில் நாகர்குலத்தின் மூச்சே நிரம்பி இருக்கிறது. தமிழ்நிலத்தின் தாய்தெய்வத்தில் முதன்மையானவள் கொற்றவை. கண்ணகி அத்தொன்மத்தின் நீட்சியாகச் சொல்லப்படுபவள். கண்ணகி மிகப்பழமையான திருச்செங்கோட்டுமலைக்கு வந்து சென்றதாக இலக்கியச்செய்தி உண்டு. திருசெங்கோட்டு மலையின் பக்கவாட்டில் நீண்ட நாகச்சிலையை இன்றும் காணலாம். இக்குறிப்பைக் கொண்டு நாகர்கள் எனும் ஆதிகுடிகள் பற்றிய வரலாற்றுச் சித்திரத்தைத் தரமுடியாவிட்டாலும் அக்குடிகளின் இருப்பை வலியுறுத்தலாம். “ஏழும் ஐந்தும் மூன்றும் ஒன்றுமென தலையெழுந்த நாகமூதாதையர் அத்தி, ஆல், அரசமரத்தடிகளில் அமர்ந்து ஆள்வதனால் அழியா வளம்கொண்டதாகிறது இந்தமண்” எனும் வாக்கியத்தின் அதிர்வில் எனக்குள் பல மின்னல் கீற்றுகள்.

          தமிழ்மண்ணின் முக்கியக்கடவுளர்கள் மூவர். சிவன், திருமால், முருகன். மூவரொடும் நாகம் நெருங்கியிருப்பதைக் கவனிப்போம். பெரும்பாலும் பெருந்தெய்வங்கள் என்று சொல்லப்படுபவை எல்லாம் இனக்குழுக்களின் குறுந்தெய்வக் குறிகளை ஒருங்கிணைத்து வளர்த்தெடுக்கப்பட்டவை. சூலம், நாகம், உடுக்கை, நெருப்பு, நந்தி போன்றவற்றை இனக்க்ழுக்களின் குலக்குறிகளாகக் கொள்ளலாம். அவ்வகையில் சிவன் எனும் பெருந்தெய்வம் பல இனக்குழுக்களை ஒருங்கிணைத்ததன் வாயிலாக உருவானவன் என்பதை நம்மால் கண்டுகொள்ள முடியும். திருமாலும் அத்தகையவனே. சமீப நூற்றாண்டுகளில் சிவனும், திருமாலும் சொல்லிமாளாத அளவு வைதீகமயமாக்கப்பட்டு விட்டனர். முருகன் ஓரளவு தப்பித்திருக்கிறான் என்றே நினைக்கிறேன். சங்கநூலான திருமுருகாற்றுப்படையில் முருகனுக்கு நிகழும் வைதீக, அவைதீகச் சடங்குகளைக் கவனிப்போம். சமூகத்தின் அடித்தளத்தில் இருக்கும் பழங்குடித்தன்மையிலிருந்து விடுபடாத மக்கள் அவனுக்கு ஆட்டிறைச்சி படைக்கின்றனர். இன்றளவும் பல இனக்குழுக்களின் குலதெய்வமாக அவன் கொண்டாடப்படுகிறான். எங்கள் குலதெய்வமான வெள்ளகோவில் வீரக்குமாரசாமியும் முருகன்தான். முழுக்க முழுக்க வைதீகச்சடங்குகளில் மாட்டிக்கொள்ளாமலும், தனக்கான தனிப்பட்ட தத்துவத்தைக் கட்டமைத்துக் கொள்ளாமலும் இருப்பதாலேயே முருகனை என் குருவாகக் கொண்டேன். மேலும், அவன் வேட்டைச்சமூகக்காலப்பரப்பிலிருந்து இன்றைய காலம்வரை எம் தமிழினத்தின் சரியான அடையாளமாக இருக்கிறான். முருகாற்றுப்படை குறிப்பிடும் வீடுகளே இன்றைய படைவீடுகள். அவற்றில் நான்கு நிலங்களும் அழகாக இணைக்கப்பட்டிருக்கும். திருப்பரங்குன்றம்(குறிஞ்சி), திருச்சீரலைவாய்(நெய்தல்), திருவாவினன்குடி(மருதம்), திருவேரகம்(மருதம்), குன்றுதோறாடல்(நான்கு நிலங்களும் சேர்த்து), திருமாலிருஞ்சோலை(முல்லை) என ஒரு தொடர்ச்சியைக் கண்டபோது விளிக்க முடியா மகிழ்ச்சி.

          வாசுகிப்பாம்பு சிவனின் கழுத்தை நினைவுட்டியதை மட்டுமே நான் சொல்ல நினைத்தேன். வரிகள் தானாகவே விழுந்து கொண்டிருக்க என்னால் தடைபோட முடியவில்லை. அணுவைப்போல சிறிதாவதைச் சொல்வது அணிமா. மகிமா என்பது மலையைப்போல பெரிதாவது. நாகச்சிலையின் வடிவம் என்னை அணிமாவுக்கும், மகிமாவுக்கும் நகர்ந்திக் கொண்டே இருக்கிறது. அங்கு விரிந்தும், சுருங்கியும் தெரியும் காட்சிகளுக்குத் திகைப்பதைத் தவிர வேறென்ன செய்ய?

முருகவேலன்,
கோபிசெட்டிபாளையம்.

குறியீடுகளின் நாவல்

JM Sir,
காண்டவம் குறியீடுகளின் நாவல் என்றாகும் போலிருக்கிறது.
 
தொடக்கமே ஒரு Non-Linear திரைக்கதை போலுள்ளது.
 
ஜரிதையின் மகன்கள் (சத்வன், தமன், ரஜன், சாந்தன், உபசாந்தன் )என்றவுடனேயே ஒரு சிலிர்ப்பு.
 
மகாபலையின் கதையில்,"இளமையிலேயே அறிவு கொண்டிருந்த அக்ஷன் 

" இவ்வரியினை படித்ததும், மனம் மழைப்பாடலுக்குச் சென்றது.பாண்டுவின் இறப்பின் போது, தருமனின் முதிர்ச்சி..

 “உயர்ந்ததை அரிதாக்குவது தெய்வங்களின் விதி என்பதனால் எளிதாக வரும் உயர்ந்தது தெய்வங்களால் விலக்கப்பட்டது என்றே பொருளாகும். இதை நாம் தவிர்ப்பதே முறை.”.. ஒரு கிளாஸிக்

 திரியை……வாரணவதம்..

"நள்ளிரவில் துயிலுக்குள் அவள் பொன்னாலான உடலும் செந்நிறத்தில் பறக்கும் குழலும் நீலநிறக்கால்களும் கொண்ட ஒருவனை கண்டாள். அவன் உடலில் எரியும் அரக்கின் மணமிருந்தது." 

நானும் ஜ்வாலையினைக் கண்டேன்....அருமை.

 வெண்முரசு வாசிக்கத் தொடங்கியதிலிருந்து இதை என்னால் உணரமுடிகிறது.ஒரு வரியினை வாசிக்கும் போதே, அதில் பொதிந்துள்ள மற்ற ஒன்றிற்க்கு மனம் சென்று விடுகிறது.

எண்ணற்ற உதாரணங்கள்....

அன்புடன்,
மகேஷ் (காங்கோ).