Thursday, May 21, 2015

பின்னலில் சிக்கிய பூச்சி

அன்புள்ள ஜெ,

நீங்கள் சிக்கலான கதை என்று  சொன்னதுமே உள்ளம் உவகையில் துள்ளியது. ஒரு வித சவால். அதை எதிர்கொள்ளப் போகிறோம் என்ற உவகை. உள்ளூர நீலத்தை விட எவ்வகையில் இது வேறுபட்டிருக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு வேறு இருந்தது. முதல் அத்தியாயத்திலேயே பிரபஞ்ச தரிசனத்தை சிலந்தியின் வலைப் பின்னலாகச் சொன்னது என் முன்னால் இருக்கப் போகின்ற சவாலை நன்றாகவே விளக்கியது. நாகங்களை வைத்து இதே பிரபஞ்சத் தரிசனத்தை நீங்கள் இதற்கு முன்பு சொல்லி இருக்கிறீர்கள். அன்னைப் பசுவை வைத்தும் சொல்லியிருக்கிறீர்கள். அவை அனைத்தையும் விட இப்பிரபஞ்சத்தை 'விரிந்துகொண்டே செல்லும் சிலந்தி வலை' என்ற படிமம் மிகத் துல்லியமாக சித்தரிக்கிறது. சிலந்தி வலைப் பின்னலாக இப்பிரபஞ்சத்தை வேறு யாராவது சொல்லியிருக்கிறார்களா தெரியவில்லை. அபாரமான கற்பனை. 

அந்த அத்தியாயத்திலேயே வலைப்பின்னல் என்பது கதைகளின் பின்னல் என்ற வகையில் மிகச் சிக்கலான கதைகளைச் சொல்லப்போகிறது காண்டவம் என்பதும் தெளிவாகியது. ஆனால் இரண்டாம் அத்தியாயம் துவங்கி ஐந்தாவது அத்தியாயம் வரை வந்த அனைத்துக் கதைகளும் ஒன்றுடன் ஒன்று பின்னி பிணைந்த்திருப்பது தந்தது ஒரு பிரமிப்பைத் தான். மீண்டும் மீண்டும் ஒரே நிகழ்வு. ஆனால் நடைபெறும் சூழலும், பங்கேற்பாளர்களும் வேறு வேறு. மிகச் சிறிய ஆனால் துல்லியமான வேறுபாடு. மீண்டும் மீண்டும் வெண்முரசு சொல்லிக் கொண்டே வருவது தான். பிரபஞ்ச ஒழுக்கு ஒரே சீரான, ஒரே தாளத்தில் அமைந்த ஒன்று. எப்படி ஒவ்வொன்றும் ஆதியின் மறு சுழற்சியாகி பழைமையான ஒன்றாக இருக்கிறதோ, அதே சமயம் ஒரு மிகச் சிறிய மாறுபாட்டால் புதுமையாகவும், வேறாகவும், தனித்துவமானதாகவும் இருக்கிறது. கண்ணனின் குழலோசையில் பூரிசிரவஸ் உணர்ந்தது இதைத்தான். சிறு குழந்தையின் கலைத்துப் போட்ட காய்களை, தன் கட்டுக்கோப்பான கருக்களால் எதிர்கொண்ட சகுனி அந்த ஆட்ட முடிவில் உணர்ந்ததும் இதைத் தான். 

இங்கே ஒரு அன்னை, தன் ஐந்து புதல்வர்களோடு மடிகிறாள். மற்றொரு சமயத்தில் ஐந்து புதல்வர்களோடு தப்பவும் செய்கிறாள். இருவருமே வஞ்சம் கொள்கின்றனர். வஞ்சம் என்பது யார் மீது? மடிந்தவள் மிகச் சரியாக வாரணவத தாயை நினைவூட்டுகிறாள் என்றால், தப்பித்தவள் குந்தியே தான். சூரிய னைக் கண்ட ஒரு மகனால் பன்னகர்களின் கோபத்திற்கு ஆளான உரக மாதா தன் எஞ்சிய ஐந்து புதல்வர்களுடனும் நீரில் மூழ்கி உயிர் பிழைக்கிறாள். தீச்சொல்லால் அழிந்த பன்னகர்களிலும் ஒரு மாதா இந்திரன் துணையால் உயிர் பிழைக்கிறாள். அன்று தப்பிய உரக மாதாவின் கொடி வழி வந்த இன்னொரு மாதா வாரணவதத்தில் இந்திரன் மகன் பார்த்தனால் தீயில் இடப் படுகிறாள். வஞ்சம் வஞ்சத்தையே பிறப்பிக்கின்றது. வஞ்சம் அழிவதே இல்லை. 

இக்கதைகளில் முக்கியமான ஒற்றுமை ஐந்து புதல்வர்கள். இரு மாதாக்கள். யார் அவர்கள்? குந்தியும், திரௌபதியும் தானா!! ஒட்டுமொத்த பாரதமும் இவர்கள் இருவரின் தூய்மையான குரோதத்தின் விளைவா? பிழைத்தல் மற்றும் இறத்தல் என்ற சுழற்சியின் ஒரு சிறு நீட்சி தான் பாரதப் போரா? எண்ண எண்ண பின்னலில் சிக்கிய பூச்சியாக உணர்கிறது மனது. குந்தியிடமும், திரௌபதியிடமும் கொந்தளிக்கும் குரோதத்திற்கு மண்ணில் விடைதேட முடியாது. அது காலங்காலமாக ஆலகாலமாக தொடர்ந்து வரும் வஞ்சம், தான் வெளிப்படத் தேர்ந்தெடுத்த இரு அன்னையர் அவர்கள். இனி அவர்களின் செயல்களின் குவியம் இந்த பெரு வஞ்சத்தின் இச்சை. கிருஷ்ணனின் நிலைச்சித்தம் தான் காக்க வேண்டும்.

அன்புடன்,
மகராஜன் அருணாச்சலம்