அன்பு ஜெயமோகன்,
சூதன் சாங்கியனின் குரலில்
“அழியாது வஞ்சம். ஏனென்றால் பிரம்மமே ஒரு பெருநாகம். அதன் நஞ்சல்லவா அது?” எனும் வாக்கியம்
இப்போதும் எனக்குள் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. வஞ்சத்திலிருந்து விடுபடுவதையே
இங்கு நாம் பேசிக்கொண்டிருக்க சூதன் குரல் விதிர்க்க வைத்துவிடுகிறது. மகாதர்மம் எனப்புத்தன்
முன்வைக்கும் சிந்தனைகள் எல்லாம் வஞ்சத்திற்கு எதிராகத்தானே? இருந்தும் வஞ்சம்
வளர்ந்து கொண்டே இருக்கிறதே தவிர குறைந்தபாடில்லையே? தனிப்பெருங்கருணை என இரு
நூற்றாண்டுகள் முன்பு வள்ளலார் சொல்வதும் வஞ்சத்தை அடியோடு வேரறுக்கத்தானே?
காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கும் நற்கதியை வேண்டுவதன் பின்னால் ஒளிந்திருப்பது
வஞ்சத்தின் மீதான அச்சம்தானே? அன்பே சிவம் என அழுத்திச் சொல்ல திருமூலன் விரும்பியதும்
அதனால்தானோ?
மனிதகுலம் நாகரீகம் அடைந்த
காலத்திலிருந்து வஞ்சம் பலவடிவங்களில் வளர்ந்து கொண்டிருப்பதை நாம் ஏற்றுக்கொண்டுதான்
ஆகவேண்டும். சமூகத்தின் அனைத்துத்தளங்களிலும் வஞ்சமே விடாப்பிடியாய் செயல்பட்டுக்
கொண்டிருக்கிறதோ எனும்படியாக அல்லவா நிகழ்வுகள் நடந்தேறி வருகின்றன. எங்கு
நோக்கினும் வஞ்சம். யாரைப்பார்த்தாலும் வஞ்சத்தைத் தவிர்த்து அவரைப் பார்க்க
முடியாத மனநிலை. உணவில் துவங்கி, உடை மொழி பண்பாடு என்பாடு வஞ்சத்தின் அனல
ஒவ்வொன்றிலும் நீண்டபடியே. கருணையும், அன்பும், இரக்கமும் வலியுறுத்திச்
சொல்லப்படும் அமைப்புகளுக்கு இடையேயும் வஞ்சம். நாடுகளுக்கு இடையே வஞ்சம்.
மனைதர்களுக்கு இடையே வஞ்சம். கருத்துக்களுக்கு இடையே வஞ்சம். வஞ்சத்திலிருந்து
நம்மால் கொஞ்சம்கூட விடுபட்டுவிட முடியாதோ எனும் ஆதங்கமே ஆன்மீகத்தை நோக்கி நம்மை
நகர்த்துகிறது. அங்கும் பலகுழுக்களின் பெயரால் வஞ்சமே காணக்கிடைக்கிறது.
வஞ்சத்தின் சிறுபொறியை இங்கு ஏற்றியது யார்?
வஞ்சமில்லாத இடத்தைத்
தேடும் ஒருவனை வனங்களும், மலைகளுமே வரவேற்கின்றன. அங்கு கிடைக்கும் குளிர்ச்சியான
காற்றில் அவன் வஞ்சத்தை உணர்வதில்லை. மலைகளோடும், வனங்களோடும் பேசத் துவங்கும்
ஒருவனை அவை ஆசுவாசப்படுத்துகின்றன. நெடிய புற்பரப்பில் படுத்துக்கொண்டே வானம்
பார்க்கும் ஏகாந்தத்தில் வஞ்சம் முகங்காட்டுவதில்லை. என்றாலும், அவன் உலகிற்குத் திரும்பித்தானே
ஆகவேண்டும். ”அழியாது வஞ்சம்” எனும் சூதனின் குரல் கழுத்தைச் சுற்றுகிறது. மூச்சு
திணறுகிறது. சிறுபூ ஒன்று எங்கிருந்தோ பறந்து வந்து மேலே விழ ஆசுவாசம்
கிட்டுகிறது. திடீரென பெருநாகத்தின் உருவம் ஒன்று உள்ளுக்குள் தோன்றி மறைகிறது.
முருகவேலன்,
கோபிசெட்டிபாளையம்.