Tuesday, May 12, 2015

வெண்முகில் நகரம் முடிவு



அன்புள்ள ஜெ,

வெண்முகில் நகரம் முடிந்து விட்டது. என்னால் வெண்முகில் நகரத்தை பிரயாகையின் தொடர்ச்சியாக, அதன் இரண்டாம் பாகமாகத் தான் பார்க்க இயல்கிறது. ஒருவகையில் இந்நாவலில் தான் உண்மையான இணைவு, பிரயாகை நிகழ்ந்திருப்பது காரணமாயிருக்கலாம். ஒருவிதத்தில் வெண்முகில் நகரம் வரை உள்ள நாவல் தொகுதிகளை வெண்முரசின் ஓர் பெரும்பாகம் ஒன்றின் முடிவாகக் கொள்ளலாம். உண்மையான பாரதமே இனிமேல் தான் துவங்கப் போகிறது இல்லையா!!

வாசகர்கள் அனைவரையுமே நெகிழ்ச்சியில் ஆழ்த்திய சகோதரர்களின் இணைவுடன் அனைத்துமே முடிவடைந்து விட்டன. இனி போரை நோக்கிக் கொண்டு செல்ல வேண்டிய புதிய காரணங்கள் தோன்ற வேண்டும். அவ்வாறு தோன்றும் புதிய காரணங்கள் பழைய, காய்ந்து தழும்பேறிய வடுக்களையும் கீறி, அவற்றை உயிர்ப்பிக்க வேண்டும். இவை அனைத்தும் இணைந்து ஓர் அரசியல் இருமையத்தை ஏற்படுத்த வேண்டும். மேற்கூறிய அனைத்தையும் செய்யப் போகும் சக்தியின் நகர் நுழைவோடு நாவலை முடித்தமை அபாரம். 

பெரும்பாலான வாசகர்களைப் போல நானும் இந்திரப் பிரஸ்தம் கட்டுவது வரை கதை செல்லும் என்றே நினைத்திருந்தேன். ஆனால் எந்த ஒரு நிகழ்வையும், அது நிகழும் அம்முதல் கணம் வரையில் மிக விரிவாக எடுத்துரைத்து, அந்நிகழ்வை எங்கள் கற்பனைக்கு விட்டுவிடுவது உங்களின் முத்திரை அல்லவா. அதற்கு இந்த வெண்முகில் நகரமும் விலக்கு அல்ல.

உண்மையில் ஓர் பெரிய சுற்று நிகழ்ந்து முடிந்து விட்டது. ஒருவகையில் பார்த்தால் பிரதீபரின் காலத்திலேயே சந்துனுவுக்கும், பால்ஹிகருக்கும் சண்டை வந்திருக்க வேண்டும். ஏதோ தெய்வ புண்ணியம். தப்பித்தார்கள். அதன் பிறகு தேவவிரதனுக்கு நேர்ந்த அநீதி. அவரின் அரசுரிமையை இழக்க வைத்து அவரை பீஷ்மராக்கிய சந்துனுவின் "தர்மத்தின் மீது ஏறிய இச்சை". இருப்பினும் பீஷ்மர் அவரிடம் தளும்பிய கருணையினாலேயே போர் என்பதைத் தவிர்த்து விட்டார். அடுத்து அம்பிகைக்கும், அம்பாலிகைக்கும் இடையேயான போட்டி. அவர்களின் குரோதம் நிச்சயம் தேசத்தை அழித்திருக்கும். ஆனால் திருதா என்னும் வேழம் அக்குரோதத்தை ஒன்றுமில்லாமல் செய்து விட்டது. இதோ இப்போதும் சகுனியின் குரோதம் பாண்டவர்களின் அழிவுக்கு வழி கோலி, துரியன் மீது தீராப் பழியை சுமத்தி, பாண்டவர்களிடம் பெருங்குரோதத்தை விழைவித்திருக்கும். மிகச்சரியாக கிருஷ்ணனால், துரியன் தூண்டப்பெற்று, நிலைமையை சுமூகமாக்கி இருக்கிறார்கள். இன்னும் அக்கைவிடுபடைகள் காத்திருக்கின்றன. 

அன்புடன்,
மகராஜன் அருணாச்சலம்